18/04/2016
அல்லாஹ்வின் போர்வாள் என்று அழைக்கப்பட்ட காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் வீர வரலாறு (தொடர் 11):
Www.facebook.com/thedaldawa
#மக்கா_வெற்றி:
மக்கா போரில் காலித் பின் வலீத்(ரலி) தலைமையிலான இஸ்லாமிய படை பிரிவை தோற்கடிக்க களமிறங்கிய மக்கத்து குறைஷி வாலிபர்கள் கந்தமா எனும் இடத்தில் தோல்வியை கண்டனர்.
எனவே மக்காவின் சூழ்நிலை இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கும் நிலையில் இல்லை. மக்காவை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிக எளிதாகவே எந்தவித இரத்த சிந்தப்படாது வெற்றி கொண்டார்கள்
இது தவிர 10 ஆயிரம் படைவீரர்களைக் கொண்ட முஸ்லிம் படை மக்காவிற்குள் எந்த எதிர்ப்பும் இன்றி, இரத்தம் சிந்தாமல் உள்ளே வெற்றியுடன் நுழைந்தது. இந்த வெற்றி ஹிஜ்ரி 8 ல் ரமளான் மாதம் 12 ம் நாள் வெள்ளிக் கிழமை நிகழ்ந்தது.
மக்காவை வெற்றி கொண்டபின், முழு மக்காவையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பின்னர் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். கஃபாவிற்கு உள்ளும் புறமும் இருந்த இணைவைப்பின் அழுக்குகளை அகற்றினார்கள். அங்கிருந்த சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். அதன் பின் பொது மன்னிப்பை அறிவித்தார்கள்.
* யார் ஹரம் என்று சொல்லக் கூடிய கஃபா பகுதியில் நுழைந்தாரோ அவர் பாதுகாக்கப்பட்டவராவார்.
* யார் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விடுகின்றாரோ, அவரும் பாதுகாப்புப் பெற்றவராவார்.
* தங்களது வீட்டுக் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு, வீட்டுக்குள் இருப்பவரும் பாதுகாப்புப் பெற்றவராவார்.
* இன்னும் அபூசுஃப்யானின் வீட்டிற்குள் நுழைந்து கொண்டவர்களும் பாதுகாப்புப் பெற்றவர்களாவார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களது இந்த பரந்த மனம் படைத்த அறிவிப்பின் காரணமாக, அப்பாஸ் (ரழி) அவர்களின் உதவியுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கவனத்தைக் கவர்ந்த அபூசுஃப்யான் அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, முழு மனதுடன் இறைமார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
முஸ்லிம்கள் புடை சூழ இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஸீ தவா என்ற பெருவெளியில் நின்று கொண்டிருந்த பொழுது, அவர்களது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாய் ஓடியது. அப்பொழுது, இதே மக்காவில் தன்னை மிக அநியாயமாக ஊரை விட்டே விரட்டி விட்ட அந்த சோக நாட்களையும் நினைத்துப் பார்த்தார்கள். ஆனால் அதே நகரம் இன்றைக்கு தனது இறக்கையைத் தாழ விரித்துக் கொண்டு, தன்னை வரவேற்கத் திரண்டு நிற்பதை இட்டு, ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.
இதே நகரத்தில் தானே லாத்தையும், உஸ்ஸா வையும் தங்களது இணைத் தெய்வங்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டும், இதனை ஏற்க மறுத்து ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதோடு, அதில் சிலரது இரத்தத்தையும் இந்தப் புனித பூமியில் ஓட்டிய இவர்கள் தான் இன்றைக்கு, தங்களுக்கு முஹம்மது அவர்கள் மன்னிப்பு வழங்க மாட்டாரா? என்று ஏங்கி நிற்கின்றார்கள். இப்பொழுது உயிர்ப் பிச்சை கேட்டு நிற்கின்றார்கள்.
இன்னும் ஷாப் அபீதாலிப் என்ற கணவாயில் வைத்து, பசிக் கொடுமையில் முஸ்லிம்களை வறுத்தெடுத்தவர்களும் இவர்கள் தானே. இன்றைக்கு அதே மக்கள் தங்கள் மீது கருணை காட்டும்படி வேண்டி நிற்கின்றார்கள்.
இந்த மாற்றத்தை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துமுகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சிரம் பணிந்து வெற்றியை அளித்த இறைவனுக்கு நன்றி கூறினார்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும் ..)