08/06/2017
இர.ந. வீரப்பனார் பிறந்தநாள் இன்று (சூன் 8)
மலேசியத் தமிழ் அறிஞர், எழுத்தாளர், ஆசிரியர்.
1930 - 87 ஆண்டுகளுக்கு முன் - ஞாயிறு
உலகத் தமிழர் மேம்பாட்டுக்காக தன்னை உரித்தாக்கிக் கொண்டவர்.
இலங்கையில் பிறந்தவர். அங்கிருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து பின்னர் மலேசியாவில் குடியேறியவர். மலேசியாவை தாய்நாடாக மதித்தவர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்.
‘உலகத்தமிழர் குரல்’ என்ற மாதிகை சிற்றிதழை வெளியிட்டு வந்தார். மலாய் தமிழ் ஆங்கில அகரமுதலி, மலேசியத் தமிழர்கள், உலகத் தமிழர், இலக்கிய இதயம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆய்வுப் பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழிப் போராட்டம், உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகள் என பல துறைகளில் தொண்டாற்றியவர்.
43 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள தமிழர்களோடு தொடர்பு கொண்டு, ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார். 33 நூல்களை எழுதி வெளியிட்டு மலேசியத் தமிழர்களுக்கு பெருமை தேடிக் கொடுத்தார்.
40 நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழ் உயர்வுக்காக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை தோற்றுவித்து, அதன் தலைவராக 25 ஆண்டுகாலம் இருந்து தொண்டாற்றினார். உலகத் தமிழர் - மலேசியத் தமிழர்கள் இடையே நல்ல அறிமுகத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தியவர்.
தமிழ் மண், இனம், மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியதோடு அதற்குரிய பயன்மிகு பணிகளையும் மேற்கொண்டவர். மலேசியத் தமிழரின் நிலையை புள்ளி விளக்கங்கள், வரலாற்று எடுத்துக்காட்டுகளோடு தொகுத்து இவர் எழுதிய ‘மலேசியத் தமிழர்கள்’ என்ற புத்தகம் மிகவும் புகழ்மிக்கது.
பெண்மையைப் போற்றுதலே தமிழர் மரபு என்பதை வலியுறுத்திய இவர், தன் பெயருக்கு முன்னால், முதலில் தாயின் பெயரையும் (இரத்தினம்), பின்னர் தந்தையின் பெயரையும் (நடேசன்) முதலெழுத்துகளாக இணைத்துக் கொண்டார்.
தன் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டியதோடு அவர்களுக்குத் தமிழ் உணர்வையும் ஊட்டி வளர்த்தவர். இவரது மகள் வீ.முல்லை, சிறந்த எழுத்தாளராக, தமிழ்ச் சிந்தனையாளராக தமிழ்ப் பணி ஆற்றிவருகிறார்.
இவர் தொடங்கிய *மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கியக் கழகம்* ஆகிய அமைப்புகள், தமிழுக்கு பயன்மிகு பணிகளை இன்றும் அமைதியாக செய்துவருகிறது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உலகத் தமிழர் என்று போற்றப்பட்டவரும், புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி பல ஆய்வு நூல்களை எழுதியவருமான இர.ந. வீரப்பனார் 69 அகவையில் (1999) மறைந்தார்.