12/01/2026
வருடாந்த பரிசளிப்பு விழாவும் பிரியாவிடை நிகழ்வும் - 2025
மாறை / அஸ்ஸபா மஹா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் 31.12.2025 அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக திரு. U. M. நலின் ஜயமினி (வலயக் கல்வி பணிப்பாளர், அகுரெஸ்ஸ), கௌரவ அதிதியாக திரு. கயந்த வன்னிகே (கோட்ட கல்விப் பணிப்பாளர், வெலிப்பிட்டிய) மற்றும் சிறப்பு அதிதிகளாக திரு. M. A. M. மஷாஹிர்(நலீமி) (பிரதி கல்வி பணிப்பாளர்– தமிழ் மொழி மூலம், தென் மாகாணம்), திரு. அஜ்மல் சத்தார்
(உள்ளூராட்சி சபை உறுப்பினர் – வெலிகாமம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும், 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அத்தோடு, 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஊக்குவிப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வருடம் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் அவர்கள் பாடசாலைக்கு ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதேபோல், தமிழ் மொழித் தினப் போட்டியில் முஸ்லீம் நிகழ்ச்சியை பயிற்றுவித்த கலாபூஷணம் திரு. ஸப்வான் ஆசிரியர் அவர்களுக்கும் சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு பல்வேறு கலை நிகழ்ச்சிகளால் மெருகூட்டப்பட்டு, இனிதே நிறைவுற்றது.
10/01/2026
கல்வி மறுசீரமைப்பு – 2026
🎓 பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாறை / அஸ்ஸபா மஹா வித்தியாலயம் சார்பாக, கல்வி மறுசீரமைப்பு – 2026 தொடர்பான பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (10.01.2026) பாடசாலை பிரதான மண்டபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி,
🔹 தரம் 1 மாணவர்களின் பெற்றோர்களுக்கு காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை
🔹 தரம் 6 மாணவர்களின் பெற்றோர்களுக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியை வளவாளர் ஷுஹூத் ஆசிரியர் அவர்கள்
(ISA – ஹம்பாந்தோட்டை மாவட்டம்) சிறப்பாக நடத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியின் மூலம் கல்வி மறுசீரமைப்பு – 2026 தொடர்பான புதிய மாற்றங்கள் மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து பெற்றோர்களுக்கு தெளிவானதும் பயனுள்ளதுமான விளக்கங்கள் வழங்கப்பட்டன. பெற்றோர்களின் உற்சாகமான பங்கேற்பு நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கியது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பெற்றோர்களுக்கும், வளவாளருக்கும், மேலும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஒழுங்கமைத்த பாடசாலை நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
09/01/2026
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலைக்கு உதவிக்கரம். கட்டம் - 01 🤝
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட தி/மூ/மூதூர் நஜீப் அல் மஜீத் பாடசாலைக்கு, எமது பாடசாலையிலிருந்து பெறுமதிவாய்ந்த பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த நற்பணிக்கு ஒத்துழைப்பை வழங்கிய எமது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்த உதவித் திட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்துத் தந்த A.L.M. Sathaak (ISA – Coverup, மூதூர் கல்விவலயம்) அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
05/01/2026
புதிய கல்விச் சீர்திருத்தம் - 2026
தரம் 6ல் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வு தென்மாகாண கல்வித் திணைக்களத்தினால் 2025.11.25-27, 2025.12.01வரை மாறை /அஸ்ஸபா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் தென் மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து இஸ்லாம் பாட ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
02/01/2026
🌟 மாகாணப் பரிசளிப்பு விழா – 2025 🌟
தென் மாகாணக் கல்வித் திணைக்களம் – தமிழ்ப் பிரிவு
2025 ஆம் ஆண்டிற்கான மாகாண அளவிலான பாரிய பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு விழா 30.12.2025 அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வெலிகம நகர சபை மண்டபத்தில், தென் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. M.A.M. மஷாயிர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் எமது பாடசாலை மாணவர்கள் கீழ்க்கண்ட போட்டிகளில் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர்:
✅ தமிழ் மொழி தினப் போட்டிகள்
✅ முஸ்லிம் கலாச்சாரப் போட்டிகள்
✅ சமூக விஞ்ஞானப் போட்டிகள்
மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டு சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.
👏 வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்தின் மனமார்ந்த பாராட்டுகள்.
🏫✨ எமது பாடசாலையின் பெருமையை மேலும் உயர்த்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
18/12/2025
அரபு மொழி தினம் – 2025
முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடையே அரபு மொழி கல்வியை நடைமுறை ரீதியாக வலுப்படுத்தவும், அவர்களின் அரபு மொழித் திறனை மேம்படுத்தவும், அரபு மொழியுடன் தொடர்புடைய பாரம்பரியம், கலாசாரம் மற்றும் அறிவியல் அம்சங்களை ஒருங்கிணைத்து பரப்பும் நோக்கத்துடன், பொதுச்சமூக, சுற்றுலாத் துறை மற்றும் சமூக உறவுகளை வளர்த்தெடுப்பதில் அரபு மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், 18.12.2025 அன்று இலங்கை அரபு மொழி தினத்தை முஸ்லிம் பாடசாலைகளில் கொண்டாடுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கமைய, இன்றைய தினம் எமது பாடசாலை பிரதான மண்டபத்தில் அரபு மொழி தின விழா, எமது மாணவர்களின் பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
20/11/2025
உளவளக் கருத்தரங்கு - 2025
மாறை/அஸ்ஸபா மகா வித்தியாலயத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “உளவளக் கருத்தரங்கு” 06.11.2025 அன்று எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை பேச்சாளராக கலந்துகொண்ட உளவள நிபுணர் Dr. Manoos Aboobakkar அவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஆழ்ந்த கருத்துடனான, அறிவார்ந்த மற்றும் வழிகாட்டும் உரைகளை வழங்கினார்.
மாணவர்களின் மனநலம், கல்வி செயல்திறன், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் வாழ்வுத் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் இக்கருத்தரங்கு பயனுள்ளதாக அமைந்தது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வை சிறப்பாகத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக முன்னெடுத்த எமது பாடசாலை நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
18/11/2025
மாறை/அஸ்ஸபா மகா வித்தியாலயத்தின் வருடாந்த கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சுற்றுலா இம் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் சிறப்பாக இடம்பெற்றது.
இச்சுற்றுலாவில் அனைத்து ஆசிரியர்களும், ஊழியர்களும் ஒற்றுமையுடனும் பொறுப்புணர்வுடனும் கலந்து கொண்டு, பரஸ்பர புரிதலும் குழு ஒருமைப்பாடும் மேம்படும் வகையில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
இந்த சுற்றுலா ஊழியர்களின் நலனையும் பணித்திறனையும் மேம்படுத்தும் ஒரு பயனுள்ள அனுபவமாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வை வெற்றிகரமாகச் செயல்படுத்த உதவிய Mohamed Ajmal Foundationற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாறை/அஸ்ஸபா மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவ்வாறான கூட்டு நிகழ்வுகள் தொடர்ந்து வலுசேர்க்கும் என நம்புகிறோம்.
14/11/2025
இலங்கையின் Bloomfield கிரிக்கெட் கழகத்தினால் இந்தியாவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் Bloomfield கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்பதற்கான பெருமதிப்பிற்குரிய வாய்ப்பைப் பெற்றுள்ள எமது பாடசாலையின் உப சிரேஷ்ட மாணவத் தலைவர் ( Deputy Head Prefect ) எம்.ஏ இன்திகாப் அஹமட் அவர்களுக்கு, பாடசாலை சமூகம் சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
On behalf of the school community, we extend our sincere and heartfelt congratulations to our Deputy Head Prefect, Master. M.A. Inthikaf Ahamed, who has been bestowed with the distinguished honour of representing the Bloomfield Cricket Club of Sri Lanka at the upcoming cricket tournament to be held in India. We take immense pride in his remarkable achievement and wish him continued success in all his future endeavours.
04/11/2025
அரச சுற்றறிக்கைக்கு இணங்க, நூலக வாரத்தை முன்னிட்டு தேசிய வாசிப்பு மாதம் – ஒக்டோபர் 2025 “புத்தகம் வாசிப்போம், உலகை வெல்வோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், கடந்த வாரம் எமது பாடசாலையில் தேசிய வாசிப்பு வார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இடம்பெற்ற வகுப்பு மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், மாணவர்கள் தங்கள் பங்களிப்பாக பாடசாலை நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வைத்தனர்.
22/10/2025
சுதக்ஷினாபிஷேக 2025 விருதுகள் 💐
தென்மாகாண கல்வித் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கும் நிகழ்வில் க.பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் கடந்த 5 வருட காலமாக தேசிய மட்டத்தினை தாண்டிய பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டமைக்காக இன்றைய தினம் 22.10.2025 எமது பாடசாலை மாறை/அஸ்ஸபா மகா வித்தியாலயம் சுதக்ஷினாபிஷேக-2025 விருதினை பெற்றுக்கொண்டது.
Sudhakshinabhisheka 2025 Awards 💐
At the awards ceremony organized by the Southern Provincial Department of Education, MR/Assafa Maha Vidyalaya was honored with the Sudhakshinabhisheka 2025 Award on 22.10.2025, in recognition of its remarkable achievement of maintaining results that exceeded the national level in the G.C.E. Ordinary Level examination over the past five years.