17/12/2017
படித்ததில் நெஞ்சைத் தொட்ட சில ஆலோசனைகள்.....
01. உங்கள் மகளை உங்கள் வீட்டுப் புறச் சூழலில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் மட்டும் படிக்க விடுங்கள்.
02. ஓகன் வகுப்பு, நடன வகுப்பு, போன்ற வகுப்புகளுக்கு ரியூசன் போவதாயின் 2018 ஓகஸ்ட் மாத கடைசி வரையும் அதை நிறுத்துங்கள் . தனியே ஒரு ரியூசனுக்கு மட்டும் விடுங்கள்.
பிள்ளை ஒரு இலக்கை நோக்கி மட்டும் சிந்தனையுடன் இருக்க வேண்டும்.முன்னேற வேண்டும். பல திசைகள் காட்டப்படக் கூடாது.
03. ரியூசனுக்கு ஓரிடம் மட்டும் போதும் . மாலை ரியூசன் ஓரிடம் . இரவும் அயலில் ரியூசன் எனக் கொண்டு திரியாதீர்கள்.
04. பரீட்சைக்கு அண்மையாக விசேட செமினார்,எதிர்பார்க்கை வினாக்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் என வெளி மாவட்டங்களில் இருந்து கல்வி வியாபாரிகளை யாழ்ப்பாணத்திற்கு இறக்குமதி செய்வார்கள். அவற்றுக்கு பிள்ளையை விடாதீர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்து வாத்திமாருக்கு ஒரு களிமண்ணும் தெரியாது தாம் பெரிய மேதை போல படம் போட்டு வேறு வழிமுறைகளைச் சொல்லிப் பாடத்தை அணுகி பிள்ளைகள குழப்பி விடுவார்கள்.
அதனால் நீங்கள் நம்பிய ஆசிரியரையே தொடர்ந்தும் நம்புங்கள்.
05. பிள்ளையை வெள்ளிக்கிழமை மாலை ரியூசன் இல்லாததால் முழுமையாக விளையாட விடுங்கள்.அன்று இரவுப் படிப்பையும் நிறுத்தி வாரத்தில் ஒரு நாள் முழுமையான ஓய்வு கொடுங்கள்.
ஓய்வு என்பது மீண்டும் இயங்குவதற்கான புத்துணர்வைத் தரும்.
அது போல ரியூசன் இல்லாத மாலை நேரங்களில் தாராளமாக விளையாட விடுங்கள்.
06. பாடசாலை முடிய பாடசாலை சீருடையுடனேயே ரியூசனுக்கு ஒரு நாளும் கூட்டிப் போகாதீர்கள்.
வீட்டில் பிள்ளை கை,கால் முகம் கழுவி சாப்பிட்ட பின்னரே ரியூசனுக்கு கூட்டிப் போங்கள்.
07. வாராந்த பரீட்சைகளில், மாதாந்தப் பரீட்சைகளில் 170 புள்ளிகளுக்கு மேலாக எடுத்தால் அவள் விரும்பும் சிறு அன்பளிப்பு பொருள்களைத் தருவதாக வாக்களியுங்கள்.புள்ளிகளை எடுத்தால் வாக்களித்தபடி அன்பளிப்புகளைக் கொடுங்கள்.
புள்ளிகள் குறைவாயின் என்ர செல்லம் நீ கெட்டிக்காரியல்லோ இம் துறை எடுத்த புள்ளிகளை விட அடுத்த முறை இன்னமும் 10 புள்ளிகள் கூட எடம்மா என நம்பிக்கை கொடுங்கள்.உதாரணமாக 110 புள்ளிகள் ஆயின் 120 எடுக்க ஊக்குவியுங்கள்.
பின்னர் 10 புள்ளிகள் கூட எடுக்க ஊக்குவியுங்கள். பிள்ளை 130 எடுப்பாள்.
இப்படியே மெல்ல இலக்கை அதிகரித்து 170 வரை முன்னேறலாம்.
110 இலிருந்து ஒரே பாய்ச்சலில் 170 போக முடியாது. பிள்ளையை தண்டித்து முன்னேற்ற முடியாது.
08. தியேட்டர் போல 200,300 பிள்ளைகள் படிக்கும் ரியூட்டரிகளுக்கு பிள்ளையை அனுப்ப வேண்டாம்.
உள்ளுரில் 20,30 ,40 பேருடன் உள்ள ரியூட்டரிகளுக்கு மட்டும் அனுப்புங்கள். இங்கு தான் பிள்ளை கவனிக்கப்படும்.
தன்னம்பிக்கை ஊட்டப்படும்.
09. பிள்ளை வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபட நேரம் ஒதுக்குங்கள். எந்த நேரமும் படி ,படியென நச்சரிக்காதீர்கள்.
10. அயலில் உள்ள பிள்ளைகள் , உறவுக்காரப் பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளையை ஒப்பிட்டு குறைத்து மதிப்பிட்டுக் கதைக்காதீர்கள்.
11. பிள்ளை வீட்டில் படிக்கும் நேரத்தில் நீங்கள் கதைப்பதையோ ,தொலைக்காட்சி பார்ப்பதையோ நிறுத்துங்கள். மெல்லிய சத்தத்தில் கூடத் தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.
12. கடந்த கால வினாத்தாள்களை கொடுத்து நேர வரையறைக்குள் விடையளிக்கப் பழக்குங்கள். மாதிரி வினாத் தாள்களை கொடுத்து விடையளிக்கப் பழக்குங்கள்.
13. எந்தெந்த வினாக்களில் கஸ்ட நிலையை எதிர்கொள்கின்றார்கள் எனப் பாருங்கள்.அதை கவனமெடுத்துக் கொள்ளுங்கள்.
14. இரு வாரத்திற்கு ஒரு முறை பாடசாலை, தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களிடம் சென்று பிள்ளையின் கல்வி முன்னேற்றம் குறித்து கதையுங்கள்.
15. மாதத்திற்கொரு முறை பூங்கா, சினிமாத் தியேட்டர் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று மகிழ்வான பொழுதைக் கொடுங்கள்.
16. பரீட்சை நெருங்கும் நாள்களில் வகுப்பில் 170 எடுத்தனீ. இறுதிப் பரீட்சையிலும் அப்படி எடுப்பாயா எனக் கேட்டு பதட்டத்தைக் கொடுத்து தன்னம்பிக்கை இழக்கச் செய்யாதீர்கள்.
அதைப் பற்றியே கதைக்காது மகிழ்வாக பொழுதைக் கழிக்க விடுங்கள்.
17. வாரத்தில் ஒரு நாளாவது வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் கோயிலுக்கு அழைத்துச் சென்று இறைவழிபாடு நிகழ்த்த விடுங்கள். நாளாந்தம் வீட்டிலும் காலை,மாலை தூய்மையாக இறைவழிபாடு செய்ய விடுங்கள்.
இறைவழிபாடு மனதை ஒருமுகப்படுத்த உதவும்.
18.பிள்ளை நாளாந்தம் செய்திப் பத்திரிகை பார்க்கப் பழக்குங்கள். குறைந்தது பத்திரிகையின் முன்பக்கச் செய்தியையாவது பார்க்கச் சொல்லி அதன் கருத்தைக் கேளுங்கள். அல்லது உங்களுக்கு விளங்கிய வகையில் செய்தியைக் கூறுங்கள். இதனூடாக வேறுபட்ட தகவல்களை வேறுபட்ட வழிகளில் கிரகிக்கும் நிலை வரும்.
இது பிள்ளைக்கு சிந்தனைத் திறனைக் கூட்டும். புலமைப் பரிசில் பரீட்சையில் இத்தகைய சிந்தனைத் திறனே கூடிய புள்ளிகளைப் பெற வழி தரும்.
19. வினாத்தாளின் முதலாம் பகுதியில் 40 வினாக்களில் 35 இற்கு சரி எடுக்கும் வகையில் வழிப்படுத்தி வாருங்கள். அப்படி எடுத்தால் தான் வெட்டுப் புள்ளிகளை அடையலாம்.
20. வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்கையில் கையெழுத்து தெளிவாக இருப்பது அவசியம். ஏனெனில் வாசிக்கத் தெளிவு இல்லாத விடைகளுக்குப் புள்ளிகள் கிடைக்காது.
சிறு கட்டுரை எழுதும் போது வினா எந்தக் காலத்தில் கேட்கப்பட்டுள்ளது என இனங்காணப் பழக வேண்டும்.
உதாரணமாக ” நான் பாடசாலை விடுமுறைக் காலத்தைக் கழித்த விதம்.” எனக் கேள்வி வந்திருந்தால் இறந்த காலத்தில் தான் விடையளிக்க வேண்டும்.
21. சிங்களம், ஆங்கிலம் ஆகியவை இரு புள்ளிகளுக்கு ஆயினும் அவை வெட்டுப் புள்ளியை அடைவதற்கு கட்டாயம் தேவையானவை.
22. நல்ல மதிப்பெண்களைப் பெற்று வந்தால் பரீட்சை முடிய உங்கள் வசதிக்கேற்ற சுற்றுலா ஒன்றுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
23. பிள்ளையை நித்திரையின்றி படிக்க வைத்தல், சாப்பிட விடாமல் படிக்க வைத்தல்.எந்த நேரமும் ஓய்வு ஒழிச்சலின்றி படிப்புக்காகக் கூட்டித் திரிய வேண்டவே வேண்டாம்.
24.பரீட்சை நாளில் தூய்மையான ஆடைஅணிந்து காலையில் இறைவழிபாட்டைச் செய்து உடல் நலம் பேணக் கூடிய இலகுவான உணவை அருந்தி நேரத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்.
25. வீட்டில் அன்பான சூழலை ஏற்படுத்துங்கள். கற்றலுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள்.
குறிப்பு - நண்பர்களே விரும்பினால் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.