09/10/2024
கடந்த வாரம் இந்த பேஸ் புக்கிலே, O/L results வெளியாகி, பலர் 9Aக்களை எடுக்க, உற்சாகமாக கிடந்தது. அவற்றை பார்த்த போது, சந்தோஷமாக இருந்தாலும், சில விடயங்களை சொல்லியாக வேண்டும் எனத் தோன்றியது.
1. இந்த 9Aயை தலைக்குள்ளே ஏற்றுதல்.
உண்மையைச் சொல்லப் போனால், இந்த 9A, ஒரு மாணவரின் திறமையை சொன்னாலும், ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாதது. சில நேரங்களில் அபாயகரமானது.
சிலருக்கு, “எனக்கு 9A” என்ற எண்ணம் வந்துவிட, A/Lம் O/L போலத்தான் என்ற எண்ணத்தில் திரிய, குடும்பமெல்லாம் பிள்ளை டாக்டருக்கு படிக்குது, என்ஜினியருக்கு படிக்குது என ஏற்றி விட, A/L தலை குப்புற கவுத்து விடும்.
நான் O/Lஇல் மாவட்டத்தில் 31வது இடம்- ரிசல்ட் 9A, C. A/Lஇல் மாவட்டத்தில் முதலாமிடம், எனக்கு முன்னால் இருந்த பலர் காணாமல் போக, ஒரு சிலருக்கே மருத்துவபீடம் கிடைத்தது. லிஸ்ட்டிலேயே இல்லாத பலர், உள்ளே வந்தார்கள்.
2. 9A என்பது உங்களின் திறமையை அளவிடும் கருவிதான். ஆனால் இந்த திறமையை கொண்டு ஒரு நல்ல நிலையை அடையாவிடின், உங்கள் வாழ்நாள் பூராக கவலைப்படுவீர்கள்
கொழும்பு மருத்துவபீட, சத்திரசிகிச்சை பேராசிரியர் ஒருவர் சொன்ன வாசகம் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது- “உன்னுடைய கபாசிட்டிக்கு ஏற்ற இடத்தை, உன்னுடைய முயற்சியின்மையால் தவறவிட்டால், அது உன்னை வாழ்நாள் பூராக கவலைப்படுத்தும்”.
சிலர் A/Lஇல் தவறவிடுவார்கள், சிலர் யுனிவர்சிட்டியில், சிலர் அதன்பின்னரான மேற்படிப்பில்….
என்னுடைய ஆங்கிலத்தின் ஒசிலின் காரணமாக, யுனிவர்சிட்டியில் பெரிதாக சாதிக்கவில்லை. ஏதோ பட்டும் படாமலும்தான் பாசாக முடிந்தது. ஆனால் மேற்படிப்பில் ஆங்கிலம் தடையாக இல்லாததால், இந்த நிலையை அடைய முடிந்தது.
3. இதனை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு நடந்த சம்பவங்களை கோர்வையாக சொல்கிறேன்.
A/L படிக்கும் போது, நண்பர்களோடு ஒன்டுக்குள்ள ஒன்டாக இருந்துதான் படித்தேன். நைட் அவ்ட் போவது, ட்ரிப் போவது, விளையாடப் போவது, ஜுமைராத்தில் தங்குவது என பல நடவடிக்கைகளில் இருந்தாலும், நான் படிப்பில் கவனத்தை இழக்கவில்லை.
A/L எழுதிவிட்டு, ரெசல்ட் வரும்வரை காலை நேரத்தில் கிரிக்கட் விளையாடுவது வழமை. இதற்கு அநேகமான எனது வகுப்பு நண்பர்களும் வந்தார்கள்.
A/L ரிசல்ட் வந்து அடுத்த நாளும் விளையாடப் போனேன். கூடவே விளையாடிய மற்ற பல நண்பர்கள்- ஆ டொக்டர்- போல புடிங்க, டேய் டொக்டருக்கு சான்ஸ குடுடா என என்னைப் பற்றி கதைக்க, என்னோடு ஒன்டுக்குள் ஒன்டாக இருந்த, A/Lஇல் மருத்துவபீடம் கிடைக்காத சில நண்பர்களுக்கு, அதை தாங்க முடியாமல் போனது.
திடீரென நண்பர் குழாத்தில் இருந்து ஓரம் கட்டப்பட்டேன். ஒரு சில நண்பர்களைத் தவிர, மற்றையவர்கள் என்னோடும் என்னுடன் மருத்துவபீடம் வந்த நண்பர்களோடும் பேசுவதையும் நிறுத்தினார்கள். அதன் பின் போடுபட்ட நைட் அவ்ட்டுக்கும் நாங்கள் அழைக்கப்படவில்லை.
இரண்டு நண்பர்களின் முயற்சியில் திரும்ப இணைந்த போது
“நீங்க ரெசல்ட் வந்த உடனே மாறிட்டீங்கடா?”
“😳”
“நீ ஏன்டா அப்பிடி சொன்னாய்?”
“எப்பிர்ரா?”
“…………”
“அப்பிடித்தானேடா உன்ன வழமையா கூப்பிர்ர”
“இப்ப உங்களுக்கு தலக்கணம் வந்திட்டு”
“இவன் பாசாகல்ல என்டு அவன்ட ஊட்ட எவ்வளவு பிரச்சின தெரியுமா? அவன சந்திக்க நீ ஏன் போகல்ல?”
“எப்பயாச்சும் அவன்ட ஊட்ட நான் போய் இரிக்கனா?”
“இல்ல”
“அப்ப எப்பிர்ரா இப்ப போற”
கடைசியில்- நான் மருத்துவபீடம் எடுபட்டதே அங்கே பிரச்சினையாக இருந்தது 😩.
இந்த சம்பவங்கள் என் வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் தொடர் கதையாகிப் போகின. நான் பேஸ் புக்கில் பிரபலம் ஆகிட்டேன் என்பதற்காகவே என்னுடன் பழகுவதை விட்ட நண்பர்களும் உண்டு.
பொறாமைப் படுபவர்களாக இல்லாமல், பொறாமைப் படத் தக்கவர்களாக இருங்கள். உங்களில் சிலருக்கு நான் சொன்ன இந்த மூணாவது விடயம்- A/L result வரும்போது விளங்கும்.
Dr Ahamed Nihaj
MBBS, MD-Orthopaedics, DSICOT, FEBOT, FRCSEd (Tra & Ortho), FRCS (Eng)
Consultant Orthopaedic surgeon