16/10/2016
எமது பாடசாலையில் புதிதாக நியமனம் பெற்ற அதிபர் திரு. T.வரதன் அவர்கள் பதவியேற்ற ஒரு மாத காலத்தில் முன்னைய அதிபர் திரு. இரட்ணகுமாரினால் அவரது பதவிக் காலத்தில் செய்ய முடிந்திராத பல வேலைத் திட்டங்களை சிறப்பாக செய்து முடித்து, 200 வது ஆண்டு நிகழ்வுகளினையும் மிகவும் சிறப்பாகவும் பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் ஒழுங்கு படுத்தி நிறைவேற்றியமைக்கு பாடசாலையின் பழைய சமூகம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
அதிபர் திரு T.வரதன் அவர்களின் அதிபர் உரையினைக் கேட்ட போது பெரும்பாலான பழைய சமூகத்தினருக்கு முன்னைய அதிபர் திரு.சு.புண்ணியசீலன் அவர்களின் அதிபர் அறிக்கையின் நினைவு வந்திருக்கும். காரணம் இருவரது அறிக்கை சமர்ப்பிக்கும் முறைகள் ஒரே முறைமையானவை. அறிக்கையின் இறுதியில் எதிர்காலத்தில் பாடசாலைக்குத் தேவைப்படும் பௌதீக வளங்கள் பற்றிய ஒரு நீண்ட தேவைப்பாட்டை அவர் முன்வைத்திருந்தார். அதன் பிரதி பலனாக பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கௌரவ நிதி அமைச்சர் அவர்கள் 20 வகுப்புத் தொகுதிகளைக் கொண்ட ஒரு மூன்று மாடிக் கட்டடத்தினைக் கட்டுவதற்கு #ரூபா_50_மில்லியனை தருவதாகவும் பாடசாலையின் பயன்பாட்டிற்காக ஒரு பேருந்தினையும் வேறுசில தளபாட உபகரணங்களையும் வழங்குவதாக உறுதியளித்தார். இந்த வாக்குறுதிகள் எல்லாம் கிடைக்க எமது பாடசாலையில் வீற்றிருக்கும் புவனேஸ்வரி தாயைப் பிரார்த்தனை செய்வோம்.
இருப்பினும் புதிய அதிபருக்கு சவால் விடும் வகையிலே பாடசாலையின் தற்போதைய கல்வி மற்றும் இணைபாட விதான செயல்பாடுகளும் விளையாட்டுக்களும் உள்ளன. பாடசாலையில் விளையாட்டு துறையினை வளர்ப்பதில் தேவையான பௌதீக மற்றும் நிதிப் பிரச்சனைகள் காணப்படுகின்றது. எனவே இந்த பழைய பாடசாலைச் சமூகம் இந்தத் துறைகளைக் கருத்தில் கொள்ளல் வேண்டும். விளையாட்டுக்களுக்கு தேவையான உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தல் பாடசாலைக்கு வெளியே இருந்து மாதாந்தக் கொடுப்பனவு அடிப்படையில் பயிற்றுவிப்பாளர்களை பணியிலமர்த்தி பயிற்சிகள் வழங்க வேண்டும்.
அடுத்த படியாக சமுதாயத்திற்கு நல்ல பிரயைகளைத் தோற்றுவிக்கும் கடப்பாட்டினை இந்த பாடசாலை கொண்டுள்ளது. இதுவும் புதிதாக பதவி ஏற்றுள்ள அதிபருக்கு ஒரு சவாலாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....
நன்றிகள்
(கல்லூரியின் நிலைத்தகு அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியில் அக்கறை உடைய உங்களில் ஒருவன்)