11/05/2013
முஹம்மது (ஸல்) அவர்கள்
பாலைவனத்தில் மலர்ந்து
பாரெங்கும் மனம்
வீசிய பாரிஜாதம்தான்
எங்கள் பயகம்பர் (ஸல்)
அவர்கள்...
அறியாமை
இருள் விரட்ட
அறிவொளி பாய்ச்சிய
அற்புத ஆதவன்
அவர்...
இரை பிடிக்க
வலை பிண்ணும்
சிலந்தி கூட
இவர் எதிரிகளிடம்
பிடியாதிருக்க
வலை பிண்ணியதன்றோ...?
ஒரெழுத்தும் படியாத
உம்மி நபிதான்
ஆனால்
உலகுக்கே உபாத்தியானாரே...
அண்ணல் அவர்கள்
மரணித்தாலும்
அவர் காட்டிய
வழிகள்
இன்னும் அகலமாய்த்தான்
கிடக்கிறது
வாருங்கள்
அண்ணல் வழி
செல்வோம்
அகிலத்திலும்
ஆகிரத்திலும்
ஆனந்தம் பெறுவோம்.
புத்தளம் எம். ஸாலிஹ் அஸீம் நவமணி 20.07.1997
லொஸ்மெலா ஆக்கத்திறன் விருது – 1998
புத்தளத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது அஸீம் அவர்கள் முஹம்மது ஸாலிஹ் – பவுசுல் ஹினாயா தம்பதிகளின் புதல்வராவார். கவி புனையும் ஆற்றலும் வளமான இலக்கிய பிரக்ஞ்சை யும் மிக்கவர். பள்ளிப் பருவம் முதல் பல்வேறு இலக்கிய முயற்சிகளில் அதீத உணர்திறனோடு செயற்ப்பட்டவர். பிரதேச வெளியீடுகளான ‘கலைத்என்றல்’ ‘பெளர்ணமி’ ஆகியவற்றின் உதவி ஆசிரியராகவும் ‘புத்தளம் டுடே,’ ‘கரும்பு’ சஞ்சிக்கைகளின் பிரதம ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். ‘முஸ்லிம் கலாசார இலக்கிய வட்டம்’ செயலாளராகவும் ‘புத்தளம் அலை கலை வட்டம் தலைவராகவும்’ செயற்பட்டு தமது இலக்கிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளார். புத்தளம் சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர் தமது இயற் பெயரில் தேசிய நாளிதழ்கள் மற்றும் சஞ்சிசகைகளில் 1994ம் ஆண்டு தொடக்கம் 2003 வரை ஆக்கங்களை கிரமமாக எழுதி வந்துள்ளார். 1998ம் ஆண்டு LOGIC AND SCIEYTIFIC METHOD LEANERS’ ASSOCIATION (LOSMELA) ‘LOSMELA’ ஆக்கத்திறன் விருது’ அளித்து அவரை கெளரவித்தது. சுமார் 50 கவிகள் வானொலியில் வாசிக்கப்பட்டுள்ளன. 2003ம் ஆண்டு வரை சிறிது பெரிதுமாக 495 ஆக்கங்கள் வெளிவந்துள்ளன அதில் கவிதை – 193 கட்டுரை - 53 சிறுகதை - 27 தொடர் கதை – 01
இவரது படைப்புக்கள் வெளிவந்த ஏடுகள் சில -
மித்திரன், நவமணி, வீரகேசரி, சுடாமணி, ஜனனி. தினகரன் , தினக்குரல் , சங்கமம் . இடி , தினமுரசு, ப்ரியா , தினத்தந்தி ,தினமணி , சுடரொளி , மின்மினி ,அல்-ஹசனாத் , அமுது ...
2003ம் ஆண்டு முற்பகுதியுடன் சாலிஹ் அஸீமின் இலக்கிய படைப்புக்கள் அருகிவிட்டன வாழ்சூழலும் வாழ்வாதாரமும் விலங்கிட்டுவிட்டன எனக் கருதுகிறேன் இவை மனிதனின் ஆக்கத்திறனையும் நகர்வினையும் உறிஞ்சிவிடும். பூலோக கிராமத்தில் தேசமெங்கும் பரந்திருக்கும் புத்தளம் முகநூல் அபிமானிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் அவரின் கவி ஆற்றலை செழுமைப் படுத்துவதற்கு கரம் கோற்பது காலத்தின் தேவையாகும். இது சாலிஹ் அஸீம் அவர்களின் இலக்கிய மீள்வருகைக்கு உந்துசக்தியாக அமையக்கூடும். அத்துடன் இவரின் கவிதைகள் தொகுத்து நூலுருவில் வெளியிடுதல் கவிதை இலக்கியத்திற்கு அணி சேர்க்கும், ஏனெனில், பேராசிரியர் கார்த்திகேச சிவதம்பி அவர்களின் வார்த்தையில் கூறுவதாயின் ‘சாலிஹ் அஸீம் ஒரு கவனிக்கப்படாத ஒரு கவிஞன்’