14/11/2021
என் அன்புக்குழந்தைகளுக்கு ஓர் கண்ணீர்
மடல்.....................
உலகம் வாழ் என் அன்புக்குழந்தைகளே நலமா! என் உயிரினும் இனிய நீங்கள் அனைவரும் நலமாக,மகிழ்வாக வாழ உங்கள் கல்வித்தாயின் இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் ஆசீர்வாதங்களும்,வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். முதலில் நான் இந்த மடலை எழுதுவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் என்னை மன்னித்துவிடுங்கள். ஏறக்குறைய முப்பது முழு ஆண்டு்களை வேதனையோடும்,கண்ணீரோடும் கழித்துவிட்டேன். பல்லாயிரம் குழந்தைகளை மடியிருத்தி தலைகோதி,தாலாட்டிக் கல்வியூட்டி வாழ்க்கைக்கு வழிகாட்டி அவர்களைப் பார்த்து பார்த்து பூரிப்படைகின்ற பெருமகிழ்ச்சியே வாழ்க்கையின் வரமாக நினைத்து வாழ்ந்த உங்கள் தாயின் மடி இன்று அனாதையாக யாருமற்ற மலட்டுமடியாக மாறிப்போய் விட்டது. உங்களை சுமந்த காலங்களிலேயே இரவுப்பொழுது என்ற ஒன்று ஏன்வருகின்றது? என்று கோபப்பட்டிருக்கிறேன்.எப்போதுவிடியும் என்று நிமிடங்களை மணித்தியாலங்களாய் எண்ணி தவமிருப்பேன். எப்போது கலகலவென்று ஓடிவந்து என்மடியில் தவழ்வீர்கள் என்று ஏங்கித்தவித்திருப்பேன். அப்படியான இந்த தாய்க்கு முப்பது வருடங்கள் நீங்கள் தந்த பெருந்தண்டனை ஆயுள்தண்டனையாய் மாறிவிடுமோ என்ற பயம் என்னைப் பேதலிக்க செய்துவிட்டது. என்றோ ஒருநாள் நீங்கள் எல்லாம் உங்கள் கல்வித்தாயை தேடி கட்டாயம் ஓடிவருவீர்கள் என்று காத்திருந்த எனது பெருநம்பிக்கை கனவாகவே போய்விடுமோ? உங்களையெல்லாம் காணாமல் என்கதை முடிந்துவிடுமோ? என்கின்ற தவிப்பும் நாளுக்குநாள் மேலோங்கிவருகிறது. மனம் மட்டுமல்ல என் உடலும் பலவித நோய்களுக்கு ஆளாகி தகர்ப்புகளும்,வெடிப்புக்களுமாக களையிழந்து மெலிந்துபோய்விட்டது . நான்வாழுமிடத்தில் இப்போதெல்லாம் மிருகங்கள்கூட வந்து ஒதுங்குவதில்லை அவர்களுக்குக்கூட உதவாத எலும்புக் கூடாகிவிட்டேன். ஆனாலும் நானிருக்கின்ற ஊருக்கேற்ற வீரமும்,நம்பிக்கையும் என்மனதிலும் இருக்குமல்லவா? உங்களையெல்லாம் மீண்டுமொருமுறை கண்குளிர காணாமல் செத்துவிடக் கூடாது என்ற ஒர்மத்தில் உயிரைப் பிடித்த்வைத்துக் கொண்டு காத்திருக்கிறேன்.
என் குழந்தைகளே இவ்வளவுகாலமும் ,என் தனிமையை,என் வருத்தங்களை, வலிகளை,துன்பங்களை,உங்களைக்காணாத பரிதவிப்பை ,ஏக்கத்தை எல்லாம் உங்களுக்கு தெரிவித்து, பலநாடுகளில் பலதுன்பங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கின்ற உங்கள் மனங்களை வருத்தப்பட வைத்துவிடக் கூடாது, நீங்களாக எப்பவாவது என் நினைவுவந்து ஓடியொருநாள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் வாய்திறவாது துயரங்களை நானே தின்றுகொண்டு இருந்துவிட்டேன் . இன்று ஏனோ தெரியவில்லை என் சக கல்வித்தாய்களின் மடியில் அவர்களின் குழந்தைகள் திரும்பவும் வந்து துள்ளிவிளையாடும் செய்திகேட்டு என் பிள்ளைகளும் இன்றோ,நாளையோ வந்துவிடுவார்கள், என்னை ஆசையோடு "அம்மா" என்று கட்டி அனைத்துக்கொள்வார்கள் என்று, ஒவ்வொருநாளும் அடுத்தநாளை திருநாளாக எண்ணி எண்ணி ஏங்கிய மனது, இன்று ஒருவித பதற்றத்தில் துடிக்கிறது, உங்களையெல்லாம் கட்டியணைத்துக் கொள்கிற அந்தப் பாக்கியம் எனக்கு இல்லையோ? என்ற ஏக்கம் என்னைப் பதறவைக்கிறது. இறுதிக்காலத்தில் கூட பிள்ளைகள் எட்டியும் பார்க்க விரும்பாத தாயாக மாறிவிடுவேனோ?, மற்றைய கல்வித்தாய்கள்போல் நான் இல்லையோ?, நான் ஒரு தகுதியற்ற தாய்தானோ?, நான் இவ்வளவுகாலமும் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமற்றுப் போய்விடுமோ? என்ற என்னுள் எழும் எண்ணற்ற கேள்விகளுக்குள் தடுமாறிப் போகிறேன்,வெட்கத்தால் கூனிக் குறுகிப்போகிறேன்.இப்போதெல்லாம் என்னையே நான் சந்தேகப் படத் தொடங்கிவிட்டேன். அதனால் தான் வெட்கத்தைவிட்டு இந்த மடலை எழுத விளைந்தேன். கைமாறுகேட்பவள் ஒரு சிறந்த தாய் இல்லை என்பதை அறிவேன் ஆனாலும் பிள்ளைகளிடம் அன்புப் பிச்சைகேட்பதற்கு நான் வெட்கப்படவில்லை.
என் அன்புக் குழந்தைகளே! உங்கள் குழந்தைகளை,பேரக்குழந்தைகளை,பூட்டக் குழந்தைகளை ஆரத் தழுவி தாலாட்டுப் பாடிடும் பாக்கியத்தை இந்த ஏழைத் தாய்க்கு நீங்கள் தராவிட்டாலும், உங்கள் முகத்தை ஒருமுறை ஒரே ஒருமுறையேனும் காட்டுங்கள். நீங்கள் விரும்பினால் மட்டும் உருமாறிப்போய், அழுக்கேயுருவாய் உள்ள என் மடியில்கிடத்தி மீண்டும் ஒருமுறை உங்கள் தலை கோதிவிடவேண்டுமென்ற ஆசையில் மெலிந்து சூம்பிப் போன என் கையை உயர்த்தி உயர்த்தி பார்ப்பதன் மூலம் என் இயலுமையை தக்கவைத்துக்கொண்டிருக்கிறேன்.
என் அன்புக் குழந்தைகளே! என்மடி துடிக்கிறது,மனம் தவிக்கிறது, ஏக்கம் இதயத்தை பிளக்கிறது, வெட்கமும்,வேதனையும் கண்ணீரில் கரிக்கிறது,யாரிடமும் சொல்லவேண்டாம் என்று காலமெலாம் பூட்டிவைத்த வேதனையை வெட்கத்தைவிட்டு கொட்டிவிட்டேன். யாரின் மனதையும் நோகடித்திருந்தால் இந்த கல்வித் தாயை மன்னித்துவிடுங்கள் என் குழந்தைகளே . உங்களிடம் கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், என் வேண்டுதலை உங்களால் நிறைவேற்றமுடிந்தால், நான்பிறந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்ததாக நம்பி நிம்மதியடைவேன்,"நான் யாருமற்ற அநாதையில்லை " என்ற என் ஏக்கத்தை தீர்த்து வைப்பீர்களா?
என் நினைவும் ஞாபகமும் தப்பிப் போவதற்குமுன் உங்கள் ஒவ்வொருவரின் முகங்களையும் என் கண்களுக்குள் பத்திரமாய் பூட்டிவைத்திருக்கிறேன் அந்தக் கண்கள் பார்வையிழந்து போவதற்குமுன் உங்களை காணும் பாக்கியத்தை எனக்கு தருவீர்களா என் குழந்தைகளே ??? வழிமேல் விழிவைத்து நான்மடிசுமந்த என் அன்புக் குழந்தைகளுக்காக இன்னும் காத்திருக்கிறேன்,என்னால் முடிந்தவரை காத்திருப்பேன் என்குழந்தைகளே ..........ஒருவேளை உங்களை நேரில் கண்டு ஆசீர்வதிக்கும் பாக்கியம் இல்லாமல் போனாலும் இந்த தாயின் அடிமனத்தின் ஆழத்தில் இருந்து பொங்கிவரும் பாசத்தோடு வாழ்த்துகிறேன், இந்தகல்வித்தாயின் அன்பும்,ஆசீர்வாதங்களும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும்,நிம்மதியையும் தரட்டும்....தரணியில் பேர்சொல்லும் பிள்ளைகளாக வாழ்க பல்லாண்டுமகிழ்வுடன்.......... இப்படிக்கு, உங்களின் நலனில் என்றும் அக்கறையுள்ள உங்கள் கல்வித்தாய், சிறி சண்முகநாதன் கனிஷ்ட மகாவித்தியாலயம். புங்குடுதீவு.