03/08/2014
90களில் பிறந்தவர்கள் வருங்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் இடையே பாலமாக விளங்குகின்றார்கள். பழையதை விட முடியாமலும், புதியதை பிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக்கப்படுகிறவர்கள். 90களில் பிறந்தவர்களைப் பற்றி மேலே எழுதியிருப்பது கொஞ்சம்தான். இன்னும் நிறைய எழுதலாம்.
உலகிலேயே மிக வேகமாக வயதாகுவது யாருக்குத் தெரியுமா? 90களில் பிறந்த ஜெனரேஷன் Y மக்களுக்குத்தான். உத்தேசமாக 1985 முதல் 1995 வரை பிறந்த இவர்கள்தான் மிக வேகமாக வயதாகுபவர்கள். இங்கு வயது என்பது உடலளவில் அல்ல. மனதளவிலும், தாங்கள் சந்திக்கும் அனுபவங்களையும் குறிக்கிறது. 90களில் பிறந்தவர்களுக்கு என சில சிறப்புகள் இருக்கின்றன. சில விஷயங்களில் இவர்கள் கொடுத்து வைத்தவர்கள், சில விஷயங்களில் கொடுத்து வைக்காதவர்கள். 90களில் பிறந்தவர்களைப் பற்றிய ஒரு ஜாலி அலசல்.
90களில் பிறந்தவர்களும், கணினி & இணையமும்
90களில் பிறந்த இணையத்தையே இன்று இயக்குவது இந்த 90களில் பிறந்தவர்கள்தான்.
* ஏலியன் தலை போன்று இருந்த பழைய ஆப்பிள் ஐ மேக் கம்ப்யூட்டரின் மானிட்டரைப் பார்த்து, 'அதெல்லாம் பணக்காரன் வீட்டுல இருக்கரதுப்பா!' என்று வருந்தியவர்கள்.
* இன்று, அதே ஆப்பிள்-ன் ஐஃபோனில் 'டிஸ்ப்ளே சுமார்பா' என்று அலுத்துக்கொள்பவர்கள்.
* நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் கதையை, ஸ்டீவ் ஜாப்ஸ் கண்டுபிடித்த ஆப்பிள் என்ற கதையாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்போகிறவர்கள்.
* மைக்ரோசாஃப்ட் பெயின்ட்டில் பென்சில் டூல் மூலம் மவுஸால் தன்பெயரை கிறுக்கி, உலகின் முதல் டிஜிட்டல் கையெழுத்தைப் போட்ட வர்க்கத்தினர்.
* ஃபோட்டோஷாப்பில் ஹீரோவின் உடலுடன் தன் தலையை சுமாரான மார்ஃபிங்கில் வெட்டி ஒட்டி தன் 'அழகில்' மயங்கியவர்கள்.
* MS-DOS ஆபரேட்டிங் சிஸ்டமை பயன்படுத்தத் தெரிந்தவர்கள்.
* விண்டோஸ் 98ன் அருமையை உணர்ந்தவர்கள்.
* பக்கத்து வீட்டு அங்கிளின் ஹார்டு டிஸ்க்கை ஃபார்மட் செய்து விண்டோஸ் XP ஆபரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொடுத்து புளகாங்கிதம் அடைந்தவர்கள்.
* மைக்ரோசாஃப்ட் வேர்டு மென்பொருளில் தன் பெயரை WordArt மூலம் 3Dல் பார்த்து பெருமிதம் அடைந்தவர்கள்.
* அமெரிக்காவில் இருந்து வரும் மாமாவிடம் Palmtop இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்டவர்கள். கம்ப்யூட்டர் பாடத்தில் உள்ள 'பேஸிக்ஸ் ஆஃப் கம்ப்யூட்டர்' பகுதியில் வரும் அரித்மெட்டிக் அண்டு லாஜிக்கல் யூனிட் (ALU) என்றால் என்ன என்று கேட்டு ஆசிரியர்களைத் திணறடித்தவர்கள். சுருக்கமாக சொன்னால் முதல் தலைமுறை கணினி ஆசிரியர்களைக் கண்ட தலைமுறையும் 90களில் பிறந்தவர்கள்தான்.
* ஹாட்மெயில், ரெடிஃப் மெயில், யாஹூ மெயில் ஆகியவற்றில் மெயில் அனுப்பிய முதல்நாளே, வீட்டுக்கு வந்த தபால்காரரிடன் 'இன்னும் எத்தனை நாளைக்கு லெட்டர்லாம் அனுப்பிக்கிட்டு இருப்பாங்களோ?!' என அலுத்துக்கொண்டவர்கள்.
* Road Rash, Need for Speed (முதல் எடிஷன் ) போன்ற கேம்களை விளையாடிவிட்டு, கோடை விடுமுறை நாட்களை தெருவில் கழிக்காமல், வீட்டிலுள்ளேயே கழித்த முதல் தலைமுறையினர்.
* கூகுளின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்தவர்கள். யூடியூபுக்கு முன்னர் 'கூகுள் வீடியோஸ்' என்று ஒன்று இருந்ததைப் பற்றி தெரிந்து வைத்திருப்பவர்கள்.
* ஆர்குட்டில் தன்னுடைய 'க்ரஷ்' தன் ப்ரொஃபைலைப் பார்த்தாளா?/பார்த்தானா? என்று தெரிந்துகொள்வதற்காகவே அக்கவுண்ட் வைத்திருந்தவர்கள்.
* ஃபேஸ்புக்கின் ஆரம்ப காலத்திலும், ஆர்குட்டைவிட்டு அவ்வளவு சீக்கிரம் வெளியே வராதவர்கள்.
* ட்விட்டரை இன்றும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாதவர்கள்.
* கூகுள் +, ஹிட்டாகாது என்று பயன்படுத்தாமலேயே சொல்பவர்கள்.
* இணையத்தில் லைவ் ஸ்ட்ரீம் மூலம் டிவி சேனல்களைப் பார்த்து, 'நான்லாம் நெட்லயே டிவி பார்ப்பேனே!' என்று சொன்னவர்கள்.
* தன் பெயரில் வலைப்பூ ஆரம்பித்து, அதை இன்னொரு கணினியில் போட்டுப் பார்த்து பெருமிதம் அடைந்தவர்கள்.
மொத்தத்தில் 90களில் பிறந்தவர்கள். இன்றைய இணையத்தின் குழந்தைகள்!