20/10/2024
السلام عليكم ورحمة الله وبركاته
முஸ்லிம்களில் சிறந்தவர் யார் ?
இந்த சூழ்நிலையில் இந்த ஆன்மீக பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக இருப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.
எனது அன்பு உறவுகளே!
எமது நாட்டில் எதிர்வரும் நவம்பர் 14ல் பாராளுமன்றத் தேர்தல் நடைபறப்போகிறது என்பது நாம் அறிந்த விடையமாகும். இந்த தேர்தலில் சிலர் போட்டியிடுகின்றனர். போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் தாம் ஆதரிக்கின்ற மற்றும் ஆதரிக்காதவர்களும் அடங்குகின்றனர். தேர்தல் வருவதற்கு முதல் இந்த தேர்தல் காலத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எமது தாய், தந்தை, உறவினர்கள் , நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர்கள் உட்பட எல்லோரையும் விடவும் நாம் நேசிக்கின்ற எமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளை நாம் எமது நினைவில் கொண்டு வருவோம்.
குறிப்பாக தேர்தல் காலங்கள் வந்தால் எம்மில் சிலர் நாவையும், கரத்தையும் எமது சில முஸ்லிம் சகோதரர்களின் உள்ளங்களை நோவினைப் படுத்துவதற்காக பயன்படுத்துகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் எம்மை சைத்தான் அல்லாஹ்வின் ஞாபகத்தை இல்லாமல் செய்கின்றான். மற்றும் அவன் இந்த தீய செயலை செய்வதில் ஆர்வத்தை தூன்டுகிறான். எமக்கு அல்லாஹ் ஹறாமாக்கிய எமது சகோதரனின் மானத்திலும் விளையாடுவதற்கு இது அல்லாஹ் தடுத்த விடையம் என்பதை நாம் கொஞ்சமும் சிந்திக்காமல் அதில் மேலும் அவன் ஆசையை அதிகரிக்கச் செய்கிறான்.
எனது அன்பு உறவுகளே!
وعن عبدالله بن عمرو بن العاص - رضي الله عنهما - يقول: إن رجلًا سأل رسول الله صلى الله عليه وسلم: أي المسلمين خيرٌ؟ قال:((من سلم المسلمون من لسانه ويده)) رواه البخاري ومسلم
முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே சிறந்தவர்; (அவரது இஸ்லாமே சிறந்தது)” என்று பதிலளித்தார்கள் (புகாரி,முஸ்லிம்).
பல மார்க்க அறிஞர்கள் இந்த செய்தியிலிருந்து மிக முக்கியமான ஒரு விளக்கத்தைச் சொல்கிறார்கள் அதாவது ஒரு முஸ்லிமை இவ்வாறு நோவினை செய்யக் கூடியவன் பூரணமான முஸ்லிமாக மாட்டான்.
அதே போன்று நாம் பேசக் கூடிய மற்றும் முக நூலில் பதிவிடக் கூடிய விடயங்கள் அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதே போன்று றகீப்,அதீத் என்ற மலக்குமார்கள் நாம் பேசக் கூடிய வார்த்தைகளை பதிவு செய்கிறார்கள். (ஸூறா காப் வசனம் 18ல் مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ)
எல்லாம் நாளை மறுமை நாளில் எம் முன் கொண்டு வரப்படும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
அதே போன்று இந்த தீய செயல்களால் நோவினைக்கு உள்ளா கின்ற எமது சகோதரன் நாளை மறுமை நாளில் அவனது பாவங்களை எமக்கு தந்துவிட்டு எமது நன்மைகளை எடுத்துக் கொண்டு அவன் இலகுவாக சுவனம் நுழைந்து விடுவான். நாம் செய்யக் கூடிய நன்மைகளே மிகக் குறைவு அதையும் அந்த சகோதரன் பறித்து விட்டால் எமது நிலைமை என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
எனவே முடியுமான வரை இந்தக்காலத்தில் மட்டுமல்லாமல் எல்லா நிலைகளிலும் நாம் எமது நாவையும் கரத்தையும் பாதுகாப்பதற்கு முயற்சிப்போமாக!
வல்ல அல்லாஹ் எம் அனைவருடைய பாவங்களை மன்னித்து அவன் தயாரித்து வைத்திருக்கக் கூடிய சுவனத்தில் நபி (ஸல்) அவர்களோடு நுழைவிக்கச் செய்வானாக.
هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم
MHM. ஆதில் சூரி (ஸஹ்வி,மதனி)
2024.10.20