21/09/2026
நபீ பெருமானார் அவர்கள் மீது “ஸலவாத் – ஸலாம்” சொல்வது ஒரு வணக்கமாகும்.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
நிச்சமயாக அல்லாஹ்வும், அவனின் “மலக்”குகளும் நபீ அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள். எனவே, விசுவாசிகளே! அவர்கள் மீது நீங்களும் “ஸலவாத்” சொல்லுங்கள். இன்னும் அதிகம் “ஸலாம்” உம் சொல்லுங்கள். (33-56)
மேற்கண்ட இத்திரு வசனத்தின் படி “முஃமின்”கள் – “முஸ்லிம்”கள் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்ல வேண்டும். அதிகம் “ஸலாம்” சொல்லவும் வேண்டும்.
இவ்வாறு செய்பவர்களுக்கு அல்லாஹ் அளவற்ற “தவாப்” நன்மைகளை வழங்குகிறான். அவனைப் பயங்கர வியாதிகளிலிருந்து பாதுகாக்கின்றான். வறுமை நீக்கி வற்றாத செல்வம் வழங்குகிறான். இவை போல் இன்னும் பல அருட்கள் சொரிகிறான்.
அல்லாஹ்வும், மலக்குகளும் “ஸலவாத்” சொல்கிறார்கள் என்றால் நாம் “ஸலவாத்” சொல்வது போல் اَللهم صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ என்று “மலக்”குகள் சொல்கிறார்கள் என்றால் அது ஒரு வகையில் பொருத்தமானதே. ஆயினும் அல்லாஹ் “ஸலவாத்” சொல்லும் போது மேற்கண்டவாறு اَللهم صَلِّ عَلَى مُحَمَّدٍ என்றுதான் சொல்கிறான் என்று விளங்கவும் முடியாது, விளக்கம் சொல்லவும் முடியாது. ஏனெனில் அல்லாஹ் “ஸலவாத்” சொல்லும் போது “அல்லாஹும்ம” இறைவா! என்று யாரை விழிக்கிறான்? இந்தக் கேள்வி ஒரு சிக்கலை ஏற்படுத்திவிடும்.
இதனால் மனிதர்களாகிய நாங்கள் اللهم என்று தொடங்கி “ஸலவாத்” சொல்வது போல் அல்லாஹ்வும் அவ்வாறு தொடங்கியே “ஸலவாத்” சொல்கிறான் என்று விளங்கிக் கொள்ளாமல் அல்லாஹ் அவர்கள் மீது அருள் புரிகிறான் என்றும், அதுவே அவன் அவர்கள் மீது சொல்லும் “ஸலவாத்” என்றும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதர்களும், மலக்குகளும் பெருமானார் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள் என்றால் اَللهم صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ என்றே சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக இன்னும் சில விளக்கம் உண்டு. தேவையேற்பட்டால் எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்!
சில நுட்பங்கள்:
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் எனக்கு ஒரு கேள்வி உண்டு. அதற்கான சரியான விடையைத் தெரிந்து கொள்வதற்காக அறிஞர்களால் எழுதப்பட்ட பல நூல்களை நான் வாசித்திருக்கிறேன். ஆயினும் அவற்றில் எந்த ஒரு நூலிலும் எனது சந்தேகத்திற்கான விளக்கத்தைக் காணவில்லை.
அல்லாஹ்வும், அவனின் “மலக்”குகளும் நபீ பெருமானார் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளதேயன்றி அவர்கள் “ஸலாம்” சொல்கிறார்கள் என்று சொல்லப்படவில்லை. இவ்வசனம் إِنَّ اللهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّوْنَ وَيُسَلِّمُوْنَ عَلَى النَّبِيِّ அல்லாஹ்வும், அவனின் “மலக்”குகளும் நபீ அவர்கள் மீது “ஸலவாத்”தும், “ஸலாமும்” சொல்கிறார்கள் என்று வந்திருந்தால் இக்கேள்விக்கு இடமில்லாமற் போயிருக்கும். அல்லாஹ்வும், மலக்குகளும் “ஸலவாத்” சொல்கிறார்கள் என்றால் அவர்கள் “ஸலாம்” சொல்வதில்லையா? ஏன் அவர்கள் சொல்வதில்லை? இதற்கான சரியான விடை தெரிந்தவர்கள் எனக்கு அறிவிப்பதை நான் விரும்பி எதிர்பார்க்கிறேன். அவர்களுக்கு நன்றியுள்ளவனாகவும், “துஆ” செய்பவனாகவும் இருப்பேன்.
ஆனால் அதே வசனத்தில் “ஈமான்” விசுவாசம் கொண்டவர்கள் “ஸலவாத் – ஸலாம்” இரண்டும் சொல்ல வேண்டும் என்று يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு சொல்லப்பட்டதற்கான காரணத்தை அறிஞர்களிடமிருந்து எதிர்பர்க்கிறேன்.
இத்திரு வசனத்தில் وَسَلِّمُوْا تَسْلِيْمًا “ஸலாம்” சொல்லுங்கள் என்று மட்டும் சொல்லப்படாமல் تَسْلِيْمًا என்றும் ஒரு சொல் வந்துள்ளது. அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கின்ற “ஹஸ்றத்”மார் இதற்கு விளக்கம் சொல்லும் போது “ஸலாம்” சொல்வதாக “ஸலாம்” சொல்லுங்கள் என்று பொருள் சொல்லித் தருவார்கள். அவர்கள் இவ்வாறு சொல்லித் தரும் பொருள் கல்வி கற்கும் மாணவர்களுக்கு விளங்குவதில்லை.
இதனால் விளங்காத மாணவன் “ஹஸ்றத்” அவர்களிடம் விளக்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்டால் அவர் நற்குணமுள்ளவராயிருந்தால் ஏதோ தனக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்லிக் கொடுப்பார். ஆனால் அவர் மூலக் கொதியுள்ளவராகவும், விளக்கம் சொல்லத் தெரியாதவராகவும் இருந்தால் மாணவனைக் கோபத்தோடு ஒரு பார்வை பார்ப்பார். அதோடு அவன் தலை குனிந்து விடுவான். பரீட்சை எழுதும் போது இவ்வாறு கேள்வி வந்தால் ஆசிரியர் சொல்லித் தரவில்லை என்று பதில் எழுதி பரீட்சையில் தோல்வி காணுவான். நானும் ஒரு முறை இவ்வாறு மாட்டியுள்ளேன். وَسَلِّمُوْا تَسْلِيْمًا என்ற வனத்தில் வந்துள்ள تَسْلِيْمًا என்ற சொல் மொழியிலக்கணத்தில் مَفْعُوْلٌ مُطْلَقٌ என்று சொல்லப்படும். இது ஒரு செயலைப் பலப்படுத்துவதற்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் வரும்.
உதாரணமாக اِضْرِبْ مُنَاسًا என்றால் “முனாஸ் என்பவனை அடி” என்று பொருள் வரும். இப் பொருளை கடுமையாக அடி என்று மாற்றுவதாயின் இதற்குப் பின்னால் ضَرْبًا என்று ஒரு சொல்லைக் கூற வேண்டும். உதாரணமாக اِضْرِبْ مُنَاسًا ضَرْبًا என்பது போன்று. இந்த வசனத்திற்கு “முனாஸை கடுமையாக அடி” என்று பொருள் வரும். அறபுக் கல்லூரிகளில் இவ்வசனத்திற்கு “முனாஸை அடிக்கிறதாக அடி” என்று பொருள் சொல்வார்கள். இதன் சுருக்கம் என்னவெனில் “முனாஸை கடுமையாக அடி” என்பதாகும்.
இவ்வாறுதான் سَلِّمُوْا تَسْلِيْمًا என்ற வசனமுமாகும். இதன் சுருக்கமான பொருள் என்னவெனில் “அதிகம் ஸலாம் சொல்லுங்கள்” என்பதாகும். “ஸலாம் சொல்வதாக ஸலாம் சொல்லுங்கள்” என்ற வசனத்தின் சுருக்கமான கருத்து இதுதான்.
எனவே, திரு வசனத்தின் படி பெருமானார் மீது “ஸலவாத்” எவ்வளவுதான் சொன்னாலும் ஒரு முறையேனும் “ஸலாம்” அதிகமாகச் சொல்ல வேண்டும்.
மேற்கண்ட திரு வசனத்தின் படி “ஸலவாத் – ஸலாம்” சொல்வதற்கு நேரம், காலம் அவசியமில்லை என்பது விளங்கப்படுகிறது. ஆயினும் “வுழூ” உடன் சொல்வது விரும்பத்தக்கதாகும்.
பெண்கள் சுத்தமில்லாத காலத்தில் வாயால் மொழியாமல், மனதால் “ஸலவாத் – ஸலாம்” சொல்வது பிழையாகாது. பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் கண்ணியம் கருதியே இவ்வாறு எழுதியுள்ளேன். இது தொடர்பில் - பெண்கள் தீட்டுடன் இருக்கும் காலத்தில் “ஸலவாத் – ஸலாம்” சொல்லலாமா? அல்லது சொல்ல முடியாதா? என்பது தொடர்பான தெளிவை எந்தவொரு இமாம்களின் நூலிலும் நான் காணவில்லை.
ஆனாலும் அல்லாஹ்வை “திக்ர்” செய்தல், “தஸ்பீஹ்” செய்தல் தொடர்பில் இரு வகையான கருத்துக்கள் உள்ளன. அது ஆகும் என்போர் ஆயிஷா நாயகி அறிவித்த
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ
“பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை “திக்ர்” செய்பவர்களாக இருந்தார்கள்” என்ற ஹதீதை ஆதாரமாகவும், கூடாது என்போர்
إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا عَلَى طُهْرٍ
“நான் அல்லாஹ்வை சுத்தமான நிலையிலேயே அன்றி “திக்ர்” நினைப்பதை வெறுத்தேன்” என்ற ஹதீதையும் ஆதாரமாகக் கொள்கிறார்கள். பெண்கள் சுத்தமில்லாத காலத்தில் “ஸலவாத்” சொல்வது தொடர்பான தெளிவான விபரம் அறிந்தோர் ஆதாரத்துடன் எனக்கு அறிவித்தால் அதை நான் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வேன்.
“ஸலவாத்” மட்டும் ஒரு நேரம் சொன்னாலும், ஆயிரம் முறை சொன்னாலும் அதைவிட ஒரு முறையாவது அதிகமாக “ஸலாம்” சொல்வது திரு வசனத்திற்குப் பொருத்தமாகும்.
மல சல கூடங்களில் - அவற்றின் உள்ளே ஸலவாத், ஸலாம் சொல்வதை தவிர்த்துக் கொள்வது கடமையாகும். “ஸலவாத் – ஸலாம்” மட்டுமன்றி சாதாரண விடயங்கள் பேசுவதும், திருக்குர்ஆன் வசனங்களையும், கண்ணியத்திற்குரிய பெயர்கள், வசனங்களை மொழிவதும் பாவமாகும்.
“ஸலவாத் – ஸலாம்” ஓத விரும்புவோர் தமக்குத் தெரிந்தவற்றை ஓத முடியும். அறபு மொழியில் “ஸலவாத் – ஸலாம்” சொல்வதே மிகச் சிறந்தது. ஆயினும் எந்த மொழியில் நபீ பெருமானார் அவர்கள் மீது “ஸலவாத் – ஸலாம்” சொன்னாலும் நன்மை நிச்சயமாகக் கிடைக்கும்.
“தப்லீக்” அமைப்பைச் சேர்ந்தவர்களும், அவர்களின் குட்டையில் ஊறிப் போனவர்களும் தொழுகையில் ஓதக் கூடிய “அஸ்ஸலவாதுல் இப்றாஹீமிய்யா” மட்டுமே நல்ல “ஸலவாத்” அதையே ஓத வேண்டுமென்று அடம் பிடிப்பார்கள். உண்மை அவ்வாறில்லை. “அஸ்ஸலவாதுல் இப்றாஹீமிய்யா” நல்ல ஸலவாத் என்பதில் எந்த மாற்றமுமில்லை. ஆயினும் “ஸலவாத்”தில் அவ்லியாஉகளால் எழுதப்பட்ட “ஸலவாத்”துகளும் அதிகம் உள்ளன. அவற்றில் நான் தினமும் ஓதி வருகின்ற “ஸலவாத்”தை இங்கு எழுதுகிறேன். இது உலகப் பிரசித்தி பெற்ற ஞான மகான் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களால் எழுதப்பட்டதாகும்.
விஷேடம் என்னவெனில் அவர்களுக்குப் பின் முத்திப் பழுத்த இறைஞான மகான்கள் தோன்றினாலும் அவர்களில் எவராலும் அதன் தாற்பரியத்தை தெளிவாகச் சொல்ல முடியாமற் போயிற்று. இது உலக அதிசயங்களில் ஒன்றாகும்.
اللهم صَلِّ عَلَى طَلْعَةِ الذَّاتِ الْمُطَلْسَمْ، وَالْغَيْثِ الْمُطَمْطَمْ، وَالْكَمَالِ الْمُكَتَّمْ، لَاهُوْتِ الْجَمَالْ، وَنَاسُوْتِ الْوِصَالْ، وَطَلْعَةِ الْحَقِّ، هُوِيَّةِ إِنْسَانِ الْأَزَلْ، فِىْ نَشْرِ مَنْ لَمْ يَزَلْ، مَنْ أَقَمْتَ بِهِ نَوَاسِيْتَ الْفَرْقِ إِلَى طَرِيْقِ الْحَقِّ، فَصَلِّ بِهِ وَمِنْهُ وَعَلَيْهِ وَسَلِّمْ تَسْلِيْمًا،
முற்றும்.