08/09/2025
சேவையிலிருந்து ஓய்வு பெறும் Library Miss, திருமதி N. ராஜேந்திரன்
02.01.2001 ஆம் திகதி மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் பாடசாலை ஆய்வுகூட பொறுப்பாளராக அரச சேவையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி N. ராஜேந்திரன் ஆறு வருடங்கள் அங்கு சிறப்பாக கடமையாற்றி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய
கல்லூரியில் தனது கடமையைத் தொடர்ந்தார். இரு முன்னணி பாடசாலைகளில் கடமையாற்றிய அனுபவத்துடன் காத்தான்குடி மட்/மம/அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் 09.07.2013 ஆம் திகதி முதல் சேவையில் இணைந்து கொண்ட திருமதி N. ராஜேந்திரன் ஆய்வுகூட உதவியாளராகவும் பின்னர் பாடசாலை நூலகப் பொறுப்பாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். எமது பாடசாலை மாணவர்களால் அன்று முதல் இன்று திருமதி ராஜேந்திரன் அவர்கள் Library Miss என்று தான் அழைக்கப்படுகின்றார். இவரது திறமையின் காரணமாக பாடசாலை நிர்வாக வேலைகளிலும் இணைந்து செயற்பட்டார். குறிப்பாக மாணவர்களுக்கு பாடசாலை விடுகை பத்திரம் வழங்குதல், தரம் 10, 11 மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தல், உரிய பிறப்பு சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு அவற்றை பெற்றுக் கொடுத்தல் போன்ற பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிப்பார். மேலும் இப்பாடசாலையில் திருமதி N. ராஜேந்திரனிடம் முக்கியமான பணியொன்று வழங்கப்பட்டிருந்தது அதுதான் தரம் 6 வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பாகும். விண்ணப்பங்கள் விநியோகிப்பதிலிருந்து தெரிவுப் பரீட்சை நடாத்துதல், மாணவர்களை அனுமதித்தல், பெற்றோர் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் போன்ற முழு வேலைகளையும் இவரே செய்தார். இதனால் தரம் 6 இல் அனுமதி பெறும் எந்தவொரு மாணவருக்கும் library miss யை தெரியாதிருப்பதற்கு நியாயமில்லை. தற்போது 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர் இவர்களது அனுமதி இவரூடாகவே நடைபெற்றது. உயர்தர பரீட்சையின் பின்னர் விலகிய மாணவர்களோ சாதாரண பரீட்சையின் பின்னர் வெளியேறியவர்களோ library miss தான் அவர்கள் சேர்வதற்கும் விலகுவதற்கும் உதவியாக இருந்திருப்பார்.
தனக்கு 60 வயதாகுவதற்கு முன்னரே சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்து 29.07.2025 ஆம் திகதி முதல் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார். திருமதி N. ராஜேந்திரன் அவர்கள்.
அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நாளை சேவை நலன் பாராட்டும் நிகழ்வொன்றை திருமதி N. ராஜேந்திரன் அவர்களுக்கு நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலைக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவர்களினதும் சார்பாக திருமதி N. ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றிகளையும் பாரட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஓய்வு காலத்தை ஆரோக்கியமாகவும் சந்தோஷமாக கழிப்பதற்கு இறைவனை பிரார்திக்கின்றோம்.