02/08/2026
#தற்கொலைசெய்தல்...
தற்கொலை என்பது இலகு வாய்பாடாக மாறியிருக்கிறது.
இதனால், வீட்டிலே பிள்ளைகளை பெற்றோரும்; வகுப்பிலே பிள்ளைகளை ஆசிரியர்களும் தண்டிக்க அஞ்சுகின்றனர்.
என் நண்பனுக்கு ராஜபக்ச மற்றும் மைத்திரி ஆட்சிக்காலத்தில் இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் ஒரே ரோச்சர்.
ஒவ்வொரு நாளும், ஒன்றுவிட்ட நாளென அடிக்கடி வந்து அவனை விசாணை செய்வர். அவனுடைய மனைவியும் போராளியாக இருந்தவர்.
எல்லா விடயங்களையும் என்னிடம் மட்டுமே சொல்லி ஆறுதல் பெறும் அவன், ஒரு கட்டத்தில் தான் தற்கொலை செய்ய போவதாகவும் என்னிடம் சொன்னான்.
'நீ தற்கொலை செய். உன் இழவு வீட்டுக்கு நான் வரமாட்டேன். ஆயுதம் தூக்கி போராட நினைத்த உனக்கு, எப்படி இப்படியொரு கோழைத்தனம் வந்தது..? நீ இனி என்னுடன் பேசாதே' என்று சொல்லிவிட்டேன்.
மறுபடியும் அன்று இரவு என் வீட்டுக்கு வந்தான். வழமைபோல் உரையாடினோம்.
அவன் தற்கொலை என்ற சொல்லை மறந்து இன்று பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன என்று நினைக்கிறேன். இப்பவும் உயிர் நண்பர்களாகவே பழகுகிறோம்.
உண்மைதான் நண்பர்களே, என்னுடன் பழகிய ஊர் நண்பர்கள்; உறவுகள்; தொழில் செய்யும் இடங்களில் சகபாடிகள் செய்த அநியாயங்கள்; இலக்கியவெளியில் இலக்கியக்காரர்கள் எனக்கென திரிபுபடுத்திய கட்டுக்கதைகள் என்று சொல்லிக்கொண்டு போனால், அந்த மன அழுத்தங்களுக்காக நான் இருநூறுக்கும் மேற்பட்ட தடவை தற்கொலை செய்திருக்க வேண்டும்.
அதிலும், படித்த எழுத்தாளர் ஒருவர் தான் எழுதுகின்ற சிறுகதைகளில் வருகின்ற வக்கிரமான ஒரு பாத்திரத்திற்கு 'உதயன்' என்ற நாமம் சூட்டி எழுதி மகிழ்ந்திருக்கிறார். அதை தன் வாயால் பலரிடம் 'உவனைப்பற்றித்தான் எழுதியிருக்கிறேன்' என்று பலரிடம் புலம்பியும் இருக்கிறார்.
அந்த சிறுகதையை வாசித்த அவருடைய குடும்பமும், அவருக்கு சொம்பு தூக்கிகள் சிலரும் அதை பறை தட்டி சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். தங்கள் மனம் நிறைய சிரித்தார்கள்.
இவறெறுக்கெல்லாம் மௌனமே எனது மொழியாக இருந்தது.
வெளிமாவட்டத்தில் படிப்பிக்கின்ற காலத்தில், தற்கொலைகளை அடிக்கடி அறிவேன்.
• தாய் தற்கொலை.
• தந்தை தற்கொலை
• மாணவன் தற்கொலை
• மாணவி தற்கொலை
என்ற செய்திகளை அடிக்கடி கேட்பேன்.
இதற்கு பிறகுதான், மாணவர்களிடம் சில விடயங்களை கட்டாயம் சொல்ல ஆரம்பித்தேன்.
'பிள்ளைகளே, உங்கள் சகபாடியின் மரண வீட்டிற்கு போயிருக்கிறீர்கள்தானே..!'
'ஓம்... சேர்...'
'நீங்களும் அங்கு அழுதிருக்கிறீர்களா..?'
'ஓம்... சேர்...'
'அங்கே, அந்த அழுகை எப்படி உங்களுக்குள் வந்தது..?'
'தாய், தகப்பன், சகோதரர்கள், உறவுகள் சொல்லி அழும்போது எங்களுக்கும் தானாக அழுகை வந்தது, சேர்..'
'இதை சொல்வது எமோசனல் என்று. அத்துடன் நான் செத்தாலும் இப்படித்தானே பாசமழை பொழிய உறவுகள் அழுவார்கள்... என்ற எண்ணம் உங்களுக்குள் தோன்றி மறையும் அல்லவா..?'
'ஓம்... சேர்... ஓம் சேர்...'
'இந்த எண்ணம் உங்களுக்குள் பதிந்து போயிருக்கும். பிறகொரு நாளிலே அப்பா அம்மா சகோதரனோ, ஆசிரியரோ ஏதோவொரு சந்தர்ப்பத்திற்காக உங்களை கடுமையாக பேசும்போது அல்லது அடிக்கும் போது மறைந்திருந்த எமோசன் உங்களுக்குள்ளே வெளிப்படும். நான் மிகவும் அவமானப்பட்டுவிட்டேனே என்றும் உடனே தோன்றும். நான் செத்தால்தான் என் அருமை இவர்களுக்கு புரியும். இந்தபார் தற்கொலை செய்கிறேன் என்று உடனே ஒரு முடிவெடுக்குறியள்...'
'...................'
'உங்கள் ஊரிலே இப்படி யாராவது தற்கொலை செய்து செத்து போனால், அங்கே எப்படியெல்லாம் அழுவார்கள் என்று நான் சொன்னேன் தானே...!'
'ஓம் சேர்...'
'அப்படி அழுத அப்பா, அம்மா, சகோதரர், உறவுகள், நண்பர்கள் யாராவது அதே கவலையோடு இப்பவும் இருக்கிறார்களா..?'
'கவலை இருக்கும்தானே சேர்...'
'கவலை நிறைய இருக்கும். ஆனால், கல்யாண வீடு; சாமத்தியவீடு; கோயில் திருவிழா வந்தால் போகிறார்கள்தானே...'
'போகிறார்கள்...'
'இதுதான் வாழ்க்கை. ஒருவர் இறந்தபோது சொல்லி அழுத மனநிலையுடன் யாரும் வீழ்வதில்லை. அதற்கு பிறகு வருகிற நன்மை விடயங்களில் கலந்து சந்தோசமாகவே வாழ்வதே வாழ்க்கை. உங்களுக்காக, உங்களை நினைத்துக்கொண்டே யாரும் வாழ மாட்டார்கள். முதலில் உங்களுக்காக நீங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொள்ளுங்கள்...'
இப்படியான அறிவுறுத்தல்களையே மாணவரிடம் நான் சொல்லு வருகிறேன்.
மாணவர்களுக்கு விருப்பமுள்ள ஆசிரியர்களுள் நானும் ஒருவனே..!
அன்புள்ள ஆசிரியர்களே ..!
இவற்றைவிடவும் நல்ல செய்திகளை உங்கள் மாணவர்களுக்கு சொல்லி தற்கொலைகளை குறைக்க இயலுமெனில் அவற்றினை இதிலே பதிவிடுங்கள். என் மாணவர்களுக்கும் அவற்றினை நான் சொல்கிறேன்.
சு.உதயகுமார்