11/07/2026
ஒஸ்மானியாவின் கலைப்பிரிவை பாதுகாத்து தக்க வைக்க பழைய மாணவர் சங்கம் அதீத முயற்சி – பதில் அதிபர் தலைமையில் அவசர கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் 2028 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரம் கலைப்பிரிவிற்கு புதிய மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்கள் ஏனைய பாடசாலைகளுக்கு இணையும் முன்பாக எமது பாடசாலைக்கு உள்ளீர்ப்புச் செய்யும் விசேட கலந்துரையாடல் பாடசாலை அதிபர் ஜனாபா எம்.எஸ்.எப்.சப்னா அவர்களின் தலைமையில் கடந்த 2026.06.28 ஆம் திகதி பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2028 ஆம் ஆண்டு கலைப்பிரிவிற்கு தற்போது 2025 (2026) க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்தவர்களிலிருந்து கலைப்பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் இணைந்து கொள்ளாவிடின் ஒஸ்மானியாவின் உயர்தரம் கலைப்பிரிவு 2028 இடைநிறுத்தப்பட்டு பாடசாலை 1C தரத்திலிருந்த (Type 2) தரத்திற்கு செல்லக் கூடிய அபாயம் காணப்படுகின்றமை கவலைக்கிடமான நிலமையாகும்.
மேற்படி நிலமையை முன்கூட்டியே சீர் செய்வதற்கு பாடசாலையின் அதிபர் ஜனாபா சப்னா அவர்கள் தலைமையில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் க.பொ.த. சாதாரணம் சித்தி பெற்று உயர்தரம் கற்க தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்பட்டு அவர்கள் தெரிவு செய்துள்ள உயர்தரம் துறைகள், பாடங்கள் உள்ளடங்களான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது எமது பாடசாலையில் கலைப்பிரிவில் பல்துறை சார் பாடங்களையும் கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கற்பித்தலின் சிரேஸ்ட தன்மைகள் தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், இங்கு கலைபிரிவில் தயாங்காமல் இணையுமாறும் வலியுறுத்தினர்.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் சசான் மற்றும் முன்னாள் செயலாளர் அப்துல்லாஹ் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலைப்பிரிவை தொடர்ந்து தக்க வைக்க வேண்டியதன் அவசியம், ஒஸ்மானியாவின் கடந்த கால உயர்தரக் கற்றல் நடவடிக்கைகள், தற்போது கலைப்பிரிவில் முன்பை விட விருப்பத்திற்குரிய பாடங்களை தேர்வு செய்வதற்கான எல்லைகளின் அதிகரிப்பு (தமிழ், புவியியல், அரசியல் விஞ்ஞானம், சித்திரம், இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகம், அறபு- 07 பாடங்கள்), பாடசாலை சங்கங்களின், அனுசரணையாளர்களின் உயர்தக் கற்றலுக்கான கடந்தகால மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் விரிவான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டன.
தற்போதைய நிலமையில் கலந்துரையாடலுக்கமைவாக காணப்படும் நிலமையாவது, யாழ் ஒஸ்மானியா மற்றும் கதீஜா மகா வித்தியாலயத்திலிருந்து உயர்தரம் தகைமை பெற்ற 10 மாணவர்களில் 05 மாணவர்கள் வேறு துறைகளை (விஞ்ஞானம், வர்த்தகம், கணிதம், தொழில்நுட்பம்) தெரிவு செய்துள்ளதுடன், ஏனைய 05 பேரில் இருவர் கலைப்பிரிவில் எமது பாடசாலையில் இல்லாத பாடத்தெரிவுகள் இரண்டை தெரிவு செய்துள்ளதுடன், ஏனைய மூவரும் பாடசாலை தெரிவு தொடர்பில் இதுவரை இறுதி முடிவுகளை எடுக்காத நிலமையை உறுதிப்படுத்த முடிந்தது.
கலைப்பிரிவை தெரிவு செய்துள்ள இருவரில் பாடத்தெரிவில் உள்ள மாற்றுத் தெரிவுகளுக்கான தீர்வுகள் மற்றும் இதுவரை பாடசாலை தெரிவை மேற்கொள்ளாத மூலர் உள்ளிட்ட ஏனைய 05 மாணவர்களையும் பெற்றோர்களுடன் தனித்தனியாக சந்தித்து எமது பாடசாலையில் கலைப்பிரிவை தொடரச் செய்வதற்கான பாரிய முயற்சியை பழைய மாணவர் சங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த முயற்சி எமது பாடசாலையின் கலைப்பிரிவை தொடர்ந்து தக்க வைப்பதற்கான முயற்சியுடன், பாடசாலையின் 1 C தரத்தை தொடர்ந்தும் பாதுகாப்பதற்கான இறுதி முயற்சியாகும்.
இவ்விடயத்தில் குறித்த மாணவர்களை எமது பாடசாலையில் இணைய வைப்பதற்கான முயற்சிகளை சமூக ஆர்வலர்களும், சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து பாடசாலைக்கு ஒத்துழைப்பு வழங்கு வகையில் பங்களிப்பு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சமூக ஆர்வலர்களின் அவ்வாறான முயற்சிகளை பாடசாலை பெரிதும் எதிர்பார்க்கின்றது.
2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பெறுபேறு ரீதியாக உயர்தரத்திற்கு தகுதி பெறாத, சில பாடங்களை அடுத்த ஆண்டு பரீட்சாத்திக்களுடன் இணைந்து எடுத்துக் கொடுத்து கற்பதற்கு சந்தர்ப்பம் உள்ள மாணவர்களை உயர்தரத்தில் இணைப்பது தொடர்பிலும் பழைய மாணவர் சங்கம் கவனம் செலுத்தி வருவது விசேட அம்சமாகும்.
எமது பாடசாலையில் உயர்தரத்திற்கு மாணவர்களை உள்ளீர்த்து 2028 ஆம் ஆண்டு கலைப்பிரிவை தக்க வைப்பதற்காக எமது பாடசாலையிலிருந்து 2025 (2026) க.பொ.த சாதரணம் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வை பழைய மாணவர் சங்கம் உம்முசார பவுண்டேசன் அனுசரணையில் அண்மையில் நடாத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி கலந்துரையாடலில் உயர்தர கலைப்பிரிவு ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள், இரு பாடசாலையினதும் உயர்தர தகுதி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப்பிரிவு
யா/ஒஸ்மானியாக் கல்லூரி.
2026.07.11