12/08/2026
#வரலாற்றை_மீட்டெடுக்கும்_ஒரு #உரையாடல்
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்பது வெறுமனே கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல; அது நமது அடையாளம், பண்பாடு, அறிவுப் பாரம்பரியம், கடல் வழித் தொடர்புகள், சமூகப் பங்களிப்புகள் மற்றும் எதிர்காலப் பயணத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான அறிவியல் தளமாகும்.
இந்த வரலாற்றுப் பார்வையில், பேராசிரியர்எம் எஸ் எம் அனஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கலாநிதி முபிஸால் அபூபக்கர் மற்றும் சட்டத்தரணி அஜ்மீர் ஆகியோர் இணைந்து இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக ஒரு சிந்தனையூட்டும் உரையாடலில் ஈடுபட்டோம்.
அரபு வணிகர்களின் வருகை முதல் இந்தியப் பெருங்கடல் வர்த்தக வலையமைப்புகள் வரை; இலங்கையின் துறைமுக நகரங்களின் வளர்ச்சி முதல் முஸ்லிம் சமூகங்களின் உருவாக்கம் வரை; சூஃபி மரபுகள், தரீக்காக்கள், அறிஞர்கள், அவ்லியாக்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் பங்களிப்பு , நவீன இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மற்றும் சமூகப் பயணம் போன்ற பல்வேறு பரிமாணங்கள் இந்த உரையாடலில் கவனத்திற்கு வந்தன.
குறிப்பாக, இப்னு பதூதாவின் 14ஆம் நூற்றாண்டு இலங்கைப் பயணம், ஆதம் மலையுடனான முஸ்லிம் மரபுத் தொடர்பு, இந்தியப் பெருங்கடல் வழியாக நிகழ்ந்த அறிவு மற்றும் ஆன்மீகப் பரிமாற்றங்கள், பின்னர் இலங்கையில் வளர்ந்த சூஃபி மரபுகள் மற்றும் தரீக்காக்கள் போன்ற விடயங்கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஒரு பரந்த Indian Ocean Islamic History என்ற கோணத்தில் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.
வரலாறு என்பது கடந்த காலத்தை நினைவுகூர்வதற்காக மட்டும் அல்ல; “நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எவ்வாறு உருவானோம்? இனி எங்கு செல்ல வேண்டும்?” என்ற கேள்விகளுக்கான அறிவார்ந்த பதிலைத் தேடுவதற்கான முயற்சியாகவும் அமைகிறது.
ஆதாரங்களுடன் வரலாற்றை மீள்பார்ப்பதும், வாய்மொழி மரபுகளையும் ஆவண வரலாற்றையும் விமர்சன ரீதியாக அணுகுவதும், அடுத்த தலைமுறைக்கு உண்மையான வரலாற்றுப் புரிதலை வழங்குவதும் நம் அனைவரின் பொறுப்பாகும்.