19/10/2024
இலங்கை அரசினால் பல்கலைக்கழகமொன்றில் அல்லது உயர்கல்வி நிறுவனமொன்றில் முழுநேரக் கற்கைநெறி ஒன்றை தொடரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமை பரிசில்கள் அல்லது நிதி உதவிகள் பற்றி விளக்கம்.
இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகங்களுக்கு அல்லது உயர்கல்வி நிறுவனங்களுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் போது, மகாபொல (Mahapola) புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகை (Bursary) என்ற இரண்டு நிதித் திட்டங்களை (இரண்டில் ஏதாவது ஒன்று மாத்திரம் ஒரு மாணவருக்கு வழங்கப்படும்) வழங்குவதற்கு முன்னெடுப்புகளை மேற்கொள்ளும். இவற்றில் ஏதாவது ஒன்றை மாத்திரம் பெறுவதற்கு மாணவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் என்பதை பின்வருமாறு நோக்கலாம்.
1. மகாபொல புலமைப்பரிசில்
ஒவ்வொரு ஆண்டும் மகாபொல புலமைப்பரிசில் தொகையைப் பெறுவதற்கு தகுதியான மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவு செய்கிறது.
#விண்ணப்பம்:
மேற்படி தகுதியானவர்களை தெரிவு செய்ய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது (ப.மா.ஆ) ஒவ்வொரு மாணவருக்கும் விண்ணப்பப் படிவங்களை தனித்தனியாக வழங்கும். தற்காலத்தில் இவைகள் நிகழ்நிலை (Online) விண்ணப்பங்களாக மாணவர்களுக்கு அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குறித்த விண்ணப்பத்தை மாணவர்கள் ப.மா.ஆ. தீர்மானிக்கும் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தி சமர்ப்பித்தல் வேண்டும்.
ப.மா.ஆ. உடன் முழுநேர மாணவராவர் ஆவதற்கு விண்ணப்பிக்கும் போது குறித்த மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கே விண்ணப்பப் படிவங்கள் அனுப்பி வைக்கப்படும். எனவே மாணவர்கள் குறித்த மின்னஞ்சல்களை செயலில் (Active) வைத்திருத்தல் வேண்டும்.
#வகைகள்
இப்புலமைப் பரிசில்கள் தகுதி (Merit) மற்றும் சாதாரண புலமைப்பரிசில்கள் என இரண்டு (02) முறைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. க.பொ.த (உ/த) இல் அதிக மதிப்பெண்கள் (Z Score) பெற்ற மாணவர்களுக்கு Merit புலமைப்பரிசில் வழங்கப்படும் அதேவேளை க.பொ.த (உ/த) பரீட்சை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாதாரண புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. மொத்த புலமைப் பரிசில்களின் எண்ணிக்கையில் 10% Merit அடிப்படையில் வழங்கப்பட மீதமுள்ள 90% சாதாரண புலமைப் பரிசில்களுக்கு வழங்கப்படும்.
#மாதாந்த #கொடுப்பனவு
Merit புலமைப்பரிசில் தொகையாக ஒரு மாணவருக்கு மாதாந்தம் ரூபா. 5050.00 வும், சாதாரண புலமைப்பரிசில் தொகையாக ஒரு மாணவருக்கு மாதாந்தம் ரூபா. 5000.00 வும் வழங்கப்படும்.
குறித்த உதவி தொகையானது மகாபொல நம்பிக்கை நிதியத்தினால் (Mahapola Trust Fund) புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடப்படும். மக்கள் வங்கி அல்லது இலங்கை வங்கி போன்ற அரச வங்கிகளில் மாத்திரம் மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை வைத்திருத்தல் வேண்டும்.
2. மாணவர் உதவி தொகை
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும்/ உயர் கல்வி நிறுவனங்களும் மாணவர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
#விண்ணப்பம்
இதற்காக பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழகம் தீர்மானிக்கும் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தி கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
ப.மா.ஆ. ஊடாக உள்ளக மாணவராக விண்ணப்பிக்கும் போது மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கே விண்ணப்பப் படிவங்கள் அனுப்பி வைக்கப்படும். எனவே மாணவர்கள் குறித்த மின்னஞ்சல்களை செயலில் (Active) வைத்திருத்தல் வேண்டும்.
வருடாந்த குடும்ப வருமான எல்லை;
மாணவர் உதவி தொகையானது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை மையப்படுத்தியே வழங்கப்படுகின்றன. இத்தெரிவில் பெற்றோர்களின் வருடாந்த வருமானம் ரூபா 500,000.00 க்கு சமமாக அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் மாத்திரமே இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி பெறுவார். இது அரச கொள்கையின் அடிப்படையில் எதிர்காலத்தில் மாற்றம் பெறலாம்.
மாணவரின் பெற்றோர் பிரிந்திருந்தால் அதனை உறுதி செய்து கொள்வதற்குரிய ஆவணச் சாட்சிகளை முன்வைத்து அல்லது அவ்வாறு பிரிவது தொடர்பான எந்தவொரு சட்டபூர்வமான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்காத பட்சத்தில் உரிய போலீஸ் பிரிவு அறிக்கையுடன் கிராம அலுவலர் அறிக்கை பெறப்பட்டதன் பிற்பாடே வருமான எல்லையினை தீர்மானிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
மாணவர் திருமணம் முடித்திருந்தால் மணம் முடித்த மாணவர் வேறு குடும்பமாக கருதப்பட்டு அவர்களின் வருமானம் வருடாந்த வருமானமாக கணக்கில் எடுக்கப்படும்.
மேற்குறித்த வருடாந்த வருமான எல்லையில், 19 வயது அல்லது அதற்கு அதற்கு கீழான வயதில் இருக்கும் கூடிய பட்சம் 03 மாணவர்கள் வரை பாடசாலை செல்கின்ற சகோதரன் அல்லது சகோதரிக்காக ரூபா. 24,000.00 வீதம் பெற்றோரின் வருடாந்த வருமானத்தில் இருந்து கழிக்கப்படும்.
அதேபோல், எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்வி நிறுவகத்திலும் கற்கை நெறியொன்றைத் தொடர்கின்ற மாணவர் ஒருவருக்கு ரூபா. 36,000.00 வீதம் இரண்டாவது பிள்ளையில் இருந்து மேலே செல்லும் விதத்தில் வழங்கப்படுவதுடன் இத்தகைமையானது தீர்மானிக்கப்படுவது முதல் பிள்ளையானது உதவித்தொகை அல்லது மகாபொல என்பவற்றை பெறாத பட்சத்தில் மாத்திரமேயாகும். இதற்கான சாண்றுப்படுத்தப்பட்ட ஆவணங்கள் சமர்பிக்கப்படுதல் வேண்டும்.
இதில் குறிப்பிட்டு கூறப்பட வேண்டிய விடயம் யாதெனில், வருமானம் எனும் போது அரச அல்லது தனியார் ஊழியராயின் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்த்து இதர கொடுப்பனவுகள் அனைத்தும் சேர்த்த சம்பளம் (Gross Salary) மாதாந்த வருமானமாகக் கொள்ளப்படும். அத்துடன், பெற்றோரின் பெயரில் காணப்படும் ஏனைய இதர வருமானங்களும் இதில் கணக்கில் எடுக்கப்படும். இந்நிதியுதவி கிடைக்காத மாணவர்களின் பெற்றோர் ஒய்வு பெறும் மரணிக்கும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் மீண்டும் இக்கொடுப்பனவிற்காக விண்ணப்பிக்க முடியும்.
மாதாந்த கொடுப்பனவு
இவ்வுதவி தொகையானது ஒரு மாணவருக்கு மாதாந்தம் ரூபா. 4000.00 வழங்கப்படும்.
குறித்த உதவி தொகையானது பல்கலைக்கழகத்தினால் உதவி தொகைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தீர்மானிக்கின்றபடி மக்கள் வங்கி அல்லது இலங்கை வங்கி போன்ற அரச வங்கிகளில் மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை வைத்திருத்தல் வேண்டும்.
#தவணைகள்
உதவி தொகைகள் ஒரு கல்வி ஆண்டுக்கு 10 தவணைகள் வீதம், நான்கு வருட கற்கையாயின் 40 தவணைகளும் மூன்று வருட கற்கையாயின் 30 தவணைகளுக்கு செலுத்தப்படும்.
#உதவி #தொகையில் #தடங்கல்
உதவி தொகை செலுத்துதல், அதனை நிறுத்துதல் அல்லது இரத்துச் செய்தல் போன்றன பின்வரும் விடயங்களின் அடிப்படையில் அமையும்.
1. ஒவ்வொரு உதவித்தொகை பெறும் மாணவரும் சம்பந்தப்பட்ட கற்கையில் ஈடுபட வேண்டும் என்பதோடு வகுப்புகளுக்கு சமுகமளிக்கும் வருகை வீதம் #80% கட்டாயம் இருத்தல் வேண்டும்.
2. ஒழுக்காற்று நடவடிக்கைகள் மீது விரிவுரைகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்ட, பல்கலைக்கழக சொத்துக்களை சேதப்படுத்தி அதற்கு தண்டனை விதிக்கப்பட்ட, பகிடிவதை மீதான தண்டனை விதிக்கப்பட்ட, அவமானகரமான செயல்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்ட மாணவர்கள் அவர்களின் உதவித்தொகை தவணைகளை பெறுவதற்கு பல்கலைக்கழகங்கள்/ உயர் கல்வி நிறுவனர் பரிந்துரைகளைச் செய்யாது.
நன்றி