28/08/2026
பொருளியல் படித்த எல்லோரும் "பொருளியலாளர்கள்" இல்லை!
உயர்தரத்தில் உயிரியல் படித்து மருத்துவத் துறையில் MBBS பட்டம் பெற்றவர்கள் எல்லோரையும் நாம் "வைத்தியர்" என்கிறோம்.
உயர்தரத்தில் கணிதம் படித்து பொறியியல் துறையில் BSc Engineering பட்டம் பெற்றவர்கள் எல்லோரையும் நாம் "பொறியியலாளர்" என்கிறோம்.
ஆனால், உயர்தரத்தில் பொருளியல் படித்துக் கலை அல்லது விஞ்ஞான துறையில் BA or BSc in Economics பட்டம் பெற்றவர்கள் எல்லோரையும் "பொருளியலாளர்" என்று சொல்ல முடியுமா? நிச்சயமாக இல்லை.
ஏன் இந்த வேறுபாடு என்பதை 3 முக்கியக் காரணங்களின் அடிப்படையில் நோக்கலாம்:
1. தொழில்முறை உரிமமும் கல்வித் தகுதியும் (Professional Licensing vs Academic Degree):
MBBS அல்லது BSc Engineering பட்டப்படிப்புகள் என்பது வெறும் பாட அறிவு சார்ந்தவை மட்டுமல்ல, அவை முறையான தொழில்முறைத் தகுதிகள் (Professional Qualifications) ஆகும்.
இவற்றை படித்து முடிப்பவர்களுக்குப் பட்டம் கிடைத்தவுடன் அந்தந்தத் தொழில்முறை கவுன்சில்கள் மூலம் வைத்தியம் பார்க்கவோ அல்லது பொறியியல் திட்டங்களைச் செயல்படுத்தவோ சட்டப்பூர்வ உரிமம் (Licensing) கிடைக்கிறது.
ஆனால், BA or BSc in Economics என்பது ஓர் அடிப்படைப் பட்டப்படிப்பு (Academic Degree) மட்டுமே. இதற்கு எந்தவொரு சட்டப்பூர்வ தொழில்முறை உரிம அமைப்பும் (Licensing Body) இல்லை.
2. ஆராய்ச்சியும் நிபுணத்துவமும்
(Level of Expertise):
மருத்துவம் மற்றும் பொறியியலில் இளங்கலை முடித்த உடனே அவர்கள் அந்தத் துறையின் நேரடிச் செயல்பாட்டாளர்களாக மாறிவிடுகிறார்கள். ஆனால், பொருளியல் துறையைப் பொறுத்தவரை வெறும் இளங்கலை அறிவு மட்டுமே ஒருவரை முழுமையான நிபுணராக்க முடியாது.
பொருளாதாரக் கோட்பாடுகள், புள்ளிவிவர மாதிரிகள் (Econometrics), சந்தைப் பகுப்பாய்வு ஆகியவற்றில் முதுகலை (MA / MSc) அல்லது கலாநிதிப் (PhD) பட்டம் பெற்று, ஆழமான ஆராய்ச்சி அனுபவம் கொண்டவர்களையே உலகம் "பொருளியலாளர்" (Economist) ஆகக் கருதுகிறது.
3. வேலை வாய்ப்பின் தன்மை
(Broad Career Paths):
MBBS படித்தவர் மருத்துவத் துறையிலும், பொறியியல் படித்தவர் பொறியியல் சார்ந்த தளங்களிலுமே பெரும்பாலும் இயங்குகிறார்கள். ஆனால், பொருளியலில் பட்டப்படிப்பு முடிப்பவர்கள் அனைவரும் பொருளியல் ஆராய்ச்சியாளர்களாக மாறுவதில்லை. அவர்கள் வங்கித் துறை, கணக்கியல், நிர்வாகம், பங்குச்சந்தை, தரவுப் பகுப்பாய்வு, அரசியல் மற்றும் கல்வித்துறை எனப் பல்வேறு தளங்களுக்குப் பிரிந்து சென்றுவிடுகிறார்கள்.
சுருக்கமாகக் கூறின், MBBS மற்றும் Engineering என்பவை குறிப்பிட்ட ஒரு தொழிலுக்கான பாதைகள் (Career Paths); ஆனால் Economics என்பது ஒரு பரந்த அறிவாற்றல் பாடம் (Academic Subject).
பொருளியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அப்பாட அறிவை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரக் கொள்கைகள், சந்தைப் போக்குகள் மற்றும் நிதி அமைப்புகளைப் பகுப்பாய்வு செய்து தீர்வுகள் வழங்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுபவரை மட்டுமே நாம் உண்மையான "பொருளியலாளர்" எனக் குறிப்பிட முடியும்.
எனவே, ஒரு "பொருளியலாளர்" (Economist) ஆக வேண்டும் என்ற கனவோடு பொருளியல் துறையைத் தேர்வு செய்பவர்கள், ஏதோ ஓர் அரசு வேலை கிடைத்தால் போதும் என்ற குறுகிய எண்ணத்தோடு நின்றுவிடாமல்:
1). ஆய்வுச் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்:
உலக மற்றும் உள்ளூர் பொருளாதார நிகழ்வுகளை வெறும் தரவுகளாகப் பார்க்காமல், அதன் பின்னணியை ஆராயும் ஆய்வு மனப்பாங்கைத் (Analytical Mindset) தொடர்ந்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
2). ஆய்வு நிறுவனங்களில் அனுபவம் பெறுங்கள்:
தத்துவார்த்தப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஏதேனும் ஒரு முன்னணி பொருளாதார ஆய்வு நிறுவனத்தில் (Research Institute) இணைந்து கள அனுபவம் பெறுங்கள்.
3). பட்டமேற்படிப்பைத் தொடருங்கள்: பொருளியல் துறையில் உங்கள் நிபுணத்துவத்தை உயர்த்திக் கொள்ள முதுகலை (Master's) அல்லது அதற்கு மேற்பட்ட உயர் ஆய்வுக் கல்வியைத் தொடருங்கள்.
நண்பர்களே, நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்த வழிகாட்டல்களை இவ்வளவு விரிவாக யாரும் சொல்லித் தரவில்லை.
இன்று என் 40 வயதை நெருங்கும் வேளையில்...
இலங்கையின் முன்னணி ஆய்வு நிறுவனங்களிலும், பட்ட மேற்படிப்பு நிறுவனங்களிலும் எனது பெயரும் ஒரு ஓரத்தில் பதிவாகிறது என்றால், அதை இறைவனின் பேரன்பு அன்றி வேறென்ன சொல்ல!
- என். சிவரூபன்