24/08/2026
எச்சரிக்கை பதிவு
*_நாட்டு ⚖️ நடப்பு_*
*🤔மொபைல் மோகம்... குழந்தைகளை நாம் எங்கே அழைத்துச் செல்கிறோம்?*
கடந்த சில நாட்களில் வெளியான மூன்று செய்திகள் நிச்சயம் மனதை உலுக்கியிருக்கும்.
கேரளாவில் ஐபோன், பைக் வாங்குவதற்கான பணத்தேவையால், 13 வயது சிறுமி தனது நண்பர்களுடன் சேர்ந்து தாத்தாவை மூச்சுத்திணறச் செய்து கொன்றது...
மொபைல் மோகத்தைக் கண்டித்ததால், தெலங்கானாவில் தனியார் பள்ளி பெண் முதல்வரை 10-ம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து வீட்டுக்குச் சென்று கொன்றுவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது...
வாங்கிய ஐபோனுக்கு இஎம்ஐ கட்ட முடியாமல், மகாராஷ்டிராவில் குன்றிலிருந்து விழுந்து 18 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவரைக் காப்பாற்றச் சென்ற பெற்றோரும் உயிரை மாய்த்துக்கொண்ட
தாக வெளியான அதிர்ச்சி வீடியோ...
இந்த மூன்று சம்பவங்களும் ஒரே புள்ளியில் இணைகின்றன.
மொபைல் மோகம்!
இன்றைய இளம் தலைமுறையின் மனநிலை, ஆசைகள், கட்டுப்பாடுகள் மற்றும் டிஜிட்டல் உலகின் தாக்கம் குறித்து நம்மை தீவிரமாகச் சிந்திக்க வைக்கின்றன.
அந்த மூன்று சம்பவங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தபோது, சமீபத்தில் இருவர் பேசிக்கொண்டிருந்த உரையாடல் நினைவுக்கு வந்தது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பற்றித்தான் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“பையனை அடித்துவிட்டேன். சொல்றதே கேட்க மாட்டேங்கிறான். எப்போதும் மொபைலே கதியென்று கிடக்கிறான். படிப்பிலும் கவனம் செலுத்த மாட்டேங்கிறான். முன்பெல்லாம் கவிதை, ஓவியம் என்று ஏதாவது நன்றாகச் செய்வான். இப்போதெல்லாம் அந்தப் பக்கமே போவதில்லை. ரீல்ஸ்... ரீல்ஸ்... என்று இருக்கிறான்.
கூடவே தங்கையையும் அந்தப் பழக்கத்துக்கு ஆளாக்கிவிட்டான். இனிமேல் ஒரு நாளைக்கு 15 நிமிடம்தான் மொபைல் பார்க்க வேண்டும். அதுவும் என்னிடம் கேட்டுத்தான் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன்” என்றார்.
எதிரே கேட்டுக்கொண்டிருந்தவர், “எங்கள் வீட்டிலும் இதுதான் பிரச்சினை. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார்.
தொடர்ந்து அவர் சொன்னது இன்னும் கவனத்தை ஈர்த்தது.
“நாம வேலைக்குப் போறோம். வேலைக்காக மொபைல் பார்க்கிறோம். வீட்டில் மனைவியும் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். குழந்தைகள் தொந்தரவு செய்யாமல் இருக்க மொபைல் போனை கொடுத்துவிடுகிறோம். கடைசியில் அதுவே பெரிய பிரச்சினையாகிவிடுகிறது.
நாம் சொல்வதையெல்லாம் குழந்தைகள் நம்புவதில்லை. ‘ரீல்ஸ்ல வந்திருச்சுப்பா... அதுலேயே சொல்லிட்டாங்க’ என்று சொல்கிறார்கள். நாம் சொல்வதைவிட ரீல்ஸில் வரும் தகவல்களைத்தான் நம்புகிறார்கள்” என்றார்.
அந்த உரையாடல் என்னை யோசிக்க வைத்தது. என் வீட்டிலும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களும் மொபைல் போனை நோக்கி சிறிது சிறிதாக நகரும் தருணங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் கண்டிப்பாகச் சொல்லி போனைப் பிடுங்கி வைத்து விடுகிறேன்.
நாம் வளர்ந்த காலத்தில் ஒரு செய்தியைப் படித்தோம் என்றால், அது செய்தித்தாளில் வந்திருக்கிறதா என்று பார்த்தோம். பெற்றோர்கள் சொல்வதையும் ஆசிரியர்கள் சொல்வதையும் கேட்டோம். ஆனால், இப்போது ஒரு ரீல்ஸ் வருகிறது. ஒருவர் ஏதோ சொல்கிறார். சில நொடிகளில் அது ஆயிரக்கணக்கான குழந்தைகளின் மனதுக்குள் சென்று விடுகிறது.
அது உண்மையா? யார் சொன்னது? அதற்கான ஆதாரம் என்ன? என்ற கேள்விகளுக்கு இடமே இல்லாமல் போய்விடுகிறது.
பிரச்சினை குழந்தைகள் மொபைல் பயன்படுத்துவது மட்டுமல்ல. அவர்கள் மொபைலில் எதைப் பார்க்கிறார்கள், எதை நம்புகிறார்கள், அது அவர்களின் சிந்தனையை எப்படி மாற்றுகிறது என்பதுதான்.
இன்று விலையுயர்ந்த மொபைல் வேண்டும். நவீன பைக் வேண்டும். ரீல்ஸில் தெரியும் வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை என்ற எண்ணம் வருகிறது. படிப்பில் நாட்டம் குறைகிறது. சிலருக்கு வேலைக்குச் செல்லவே விருப்பம் இல்லாமல் போகிறது. உடனடி மகிழ்ச்சி, கவனம், அங்கீகாரம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் மனநிலை உருவாகிறது.
குழந்தைப் பருவத்தில் இப்படிப்பட்ட ஈர்ப்புகள் இருப்பது இயல்பாக இருக்கலாம். ஆனால், அளவுக்கு மீறிய செல்போன் பயன்பாடும், தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பதும் ஒரு பழக்கமாக மாறும்போது, அது நேரம், கவனம், தூக்கம், படிப்பு, குடும்ப உறவு என பலவற்றையும் பாதிக்கக்கூடும்.
இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல. நம்மையும் சேர்த்துத்தான்.
சில நாட்களுக்கு முன்பு பிபிசி தளத்தில் *நரம்பியல் மருத்துவர் ஒருவர் அளித்திருந்த விளக்கத்தைப் பார்க்க நேர்ந்தது.* *நீண்ட நேரம் தலைகுனிந்த நிலையில் மொபைல் பயன்படுத்துவது, குறிப்பாக கேமிங்* *மற்றும் வீடியோ பார்ப்பதில் தொடர்ந்து ஈடுபடுவது, கழுத்துப் பகுதியில் பாதிப்புகளை* *ஏற்படுத்தி, ஒரு பக்கம் கை, கால் செயலிழப்பு வரை கொண்டு செல்லக்கூடும் என்று* *அவர் எச்சரித்திருந்தார். அதிக நேரம்* *மொபைல் பயன்படுத்துவது தூக்கத்தையும் மனநலத்தையும் பாதிக்கக்கூடும்* *என்றும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து* *வருகின்றனர்* .
அதனால், குழந்தைகளிடம் மொபைலைப் பறித்துவிடுவது மட்டுமே தீர்வு அல்ல. மொபைலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும், அதில் வரும் தகவல்களை எப்படி மதிப்பிட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுப்பதுதான் முக்கியம்.
ரீல்ஸில் வந்தால் மட்டும் அது உண்மையாகிவிடுமா? ஒரு தகவலை நம்புவதற்கு முன்பு அதன் ஆதாரத்தைத் தேட வேண்டாமா? இந்தக் கேள்விகளை குழந்தைகளிடம் நாம் உருவாக்க வேண்டும்.
அதற்கு முன், ஒரு நாளைக்கு நாம் எத்தனை மணி நேரம் மொபைலில் இருக்கிறோம் என்பதையும் யோசிக்க வேண்டும். குழந்தைகளிடம் இருந்து மொபைலை விலக்கச் சொல்வதற்கு முன், நம் கைகளில் இருக்கும் மொபைலை நாம் எவ்வளவு கட்டுப்படுத்துகிறோம் என்பதையும் பார்க்க வேண்டும்.
மொபைல் நமக்கான ஒரு கருவியாக இருக்க வேண்டும். அது நம் வாழ்க்கையை இயக்கத் தொடங்கிவிடக் கூடாது.
குழந்தைகளை மட்டும் குறை சொல்லாமல், அவர்களுடன் சேர்ந்து நாமும் சில கட்டுப்பாடுகளை உருவாக்கிக்
கொண்டு பயணிக்க வேண்டிய நேரம் இது
நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய செல்போன் இன்று தவறான வழியில் பயன்படுத்தப்பட்டு பல குடும்பங்கள் சீர் கெட்டுப் போவதற்கு இந்த ஸ்மார்ட் போன்கள் முக்கிய பங்கு என்னும் கருத்தை யாரும் மறுக்காமல் இல்லை எனவே தங்களுடைய பிள்ளைகளை செல்போன் கொடுத்து கெடுத்து விடாமல் அவர்களை படிப்பில் கவனம் செலுத்தி அவர்களை செல்போன் மோகத்திலிருந்து அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இன்றைய பெற்றோருக்கு மிக மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தேன் நாளை அவர்கள் தவறான வழியில் செல்லும்போது அவர்கள் செய்யும் தவறுக்கு பெற்றோரும் ஒரு முக்கிய பங்கு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
திரு ரமேஷ்பாபு அவர்கள் DEO PS,
மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்),
வேலூர் மாவட்டம்.
(தங்களது செய்தி பதிவிற்கு பள்ளியின் சார்பாக நன்றி ஐயா)