03/08/2025
#சௌகரியமான_ஒரு_இடம் ( )
தனிக்குடித்தனம் குழந்தைகளிடத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? பெரும்பாலும் எதிர்மறையானதாகவே உள்ளன. மிகச் சாதாரணமாகவே பதினைந்து இருபது குழந்தைகள், ஏழெட்டு பெரியவர்கள் என இருந்தது கூட்டுக் குடும்பங்கள். செலவுகள் மிகப்பெரிய அளவில் இருக்கும். குறிப்பாக பண்டிகை கால செலவுகள் உச்சத்தை எட்டும். அத்தனையிலும் சிக்கனம் தான். பலசரக்கு, துணிமணிகள், விடுமுறை, பயணம், கல்வி என அத்தனையிலும் சிக்கனம் தான்.
ஒருவருக்கு என தனிப்பட்ட எதுவும் கிடையாது. ஒரு குழந்தைக்கு என தனிப்பட்ட எதுவும் கிடையாது. குடும்பத்திற்கு தான் முதலிடம். ஒரு தனிநபரா குடும்பமா என பார்த்தால் தனிநபர் தனது ஆசையை குடும்பத்திற்காக விட்டுக் குடுத்தே ஆக வேண்டும். அப்போது தான் குடும்பம் கூட்டாக இணைந்து நிலைக்கும்.
ஒரு குழந்தைக்கு பிடித்தது விருப்பமானது என்று எதுவும் கிடையாது. பண்டிகை காலங்களில் அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான துணி, ஒரே மாதிரியான கல்வி, அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்தே படிக்க வேண்டும். குடும்பத்தின் வேலைக்கே முதலிடம், படிப்பு இரண்டாம் பட்சம். குடும்ப வேலையை முடித்த பின்னரே படிக்க உட்கார முடியும். திட்டத்திற்கும், உழைப்புக்குமே முக்கியத்துவம்.
முன்னுக்கு வர வேண்டும் என்றால் திட்டமிட்டு உழைத்தே ஆக வேண்டும் என்பது மட்டும் தான் மனதில் பதிய வைக்கப்பட்டது. கூட்டு முயற்சியில், அணியின் தனிநபர்களின் தனித்தனி திறமைகள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டது. இணைந்து செயல்பட்டால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். ஒரு குழந்தைக்கு என, ஒரு தனி நபருக்கு என சௌகரியமான இடம் ஏதும் கிடையாது.
சௌகரியமான இடம் வேண்டும் என்றால் திட்டமிட வேண்டும், அதற்கேற்ப உழைக்க வேண்டும். படிப்பிலும் திட்டமிட்டு உழைத்தால் மட்டுமே நமக்கான சௌகரியமான இடத்தை நோக்கி நகர முடியும். படிப்புக்கு என தனியான நேரம் கிடைக்காது. குடும்பத்திற்காக உழைக்கும் நேரத்திற்கு மத்தியில் நமக்கான நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கி படிக்க வேண்டும். படித்து நமக்கான ஒரு சௌகரியமான இடத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வெறி இருக்கும். அதற்கான தேவையை அந்த அசௌகரியம் உருவாக்கி வைத்திருந்தது.
சௌகரியம் தேடி உழைத்து முன்னேறி போக வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு அத்தனை சௌகரியத்தையும் நாமே ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இருக்க இடம், உண்ண உணவு, கற்க பள்ளி, தூங்க அறை, படிக்க தனி அறை என அத்தனையும் அவர்கள் சௌகரியத்தில். மிகவும் சௌகரியமான இடத்தில் இருக்கும் அவர்களுக்கு தேவை என்பது அவசியம் என்பதோ ஆடம்பரமான தேவைகளாகத் தான் இருக்கின்றன. திட்டமிடல் மூலம், உழைப்பின் மூலம், கற்பதன் மூலம் இனி அவர்கள் சாதிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. உழைப்பின் பலன் அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கென பெரிய நோக்கங்கள் ஏதுமில்லை. ஏற்கனவே இருக்கும் சௌகரியம் அவர்களுக்கு எதையும் தேடிச் செல்ல வேண்டிய அவசியத்தை தேவையில்லாமல் ஆக்கி விடுகிறது. இந்த குழந்தைகளை நாம் நொந்து என்ன பிரயோஜனம்?!
- நாடோடி Nomad