09/10/2024
*Outstanding Students of GHSS BSR #04*
*திரு. செந்தில்குமார்*
பள்ளிப்பருவத்து செயலாக்கங்களை சுமார் 35 வருடங்களுக்கும் மேலாக இன்றுவரை நடைமுறை படுத்தி வரும் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர் திரு. செந்தில்குமார். எனக்கு நேரிடையாக இவரிடம் பரிச்சயம் உண்டு. திரு. செந்தில் அவர்களை பள்ளி காலத்திற்கு பிறகு (1982) இன்னும் நான் நேரில் சந்திக்கவில்லை எனினும் இந்த பதிவில் திரு. செந்தில் அவர்களை குறித்து நான் எழுதப்போவது அனைத்தும் சுமார் 42 வருடங்களுக்கு முந்தைய என் நினைவுகளே.
திரு. செந்தில் அவர்கள் என்னுடைய வகுப்பு தோழர் இல்லை எனினும் சமகாலத்தில் பள்ளியில் பயின்ற நண்பர். ஒரு பள்ளி நண்பர் சுமார் 42 வருடங்களுக்கு பிறகும் உங்களது நினைவில் வலம் வந்துகொண்டிருக்கிறார் எனில் - நிச்சயம் அவருடைய சில சிறப்பான குணாதிசயங்கள் உங்களை கவர்ந்திருக்கவேண்டும் என்பது உண்மை. அந்த வகையில் திரு. செந்தில் அவர்களின் சில அல்ல பல குணாதிசயங்கள் இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது.
திரு. செந்தில்…. என்னுடைய பார்வையில் முற்றிலும் வித்தியாசமான ஒரு மாணவர் அப்போது. தமிழில் “அர்ப்பணிப்பு உணர்வு” என்ற ஒரு வார்த்தை உண்டு. அதனை இவருடைய செயல்பாடுகள் வாயிலாக நான் நன்கு உணர்ந்துள்ளேன். இத்தனைக்கும் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களும் கிடையாது. என்னுடைய சுபாவப்படி எனது பள்ளி வாழ்க்கையில் ஒரு மாணவர் தன்னுடைய செயல்பாடுகளில் - உத்வேகத்தையும், உற்சாகத்தையும், சிரத்தையையும் காண்பிக்கிறார் எனில் - தொலைவில் இருந்தே அவரை நன்கு கவனிக்க துவங்கிவிடுவேன். அதற்கு உதாரணமாக பல மாணவர்களை கூறமுடியும் என்றாலும் - இங்கு திரு. செந்தில் அவர்களைப்பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.
பள்ளிப்பருவத்தில் இருக்கும்போது - தன்னுடைய பெற்றோர்களுக்கு தொழில் முறையில் உதவி செய்வது என்பது - எல்லோருக்கும் சாத்தியமானது அல்ல. ஆயினும், நிறைய மாணவர்கள் அதற்கு விதிவிலக்காக இருந்துள்ளார்கள். இப்போதும் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் திரு. செந்தில் அவர்கள் தன்னுடைய பள்ளி படிப்பு நேரம் போக - எப்போதெல்லாம் அவருக்கு ஓய்வு கிடைக்கிறதோ - அப்போதெல்லாம் அவர் தன்னுடைய பெற்றோர்களுக்கு உதவிக்கரமாக இருந்துள்ளார். இது எவ்வளவு உன்னதமான செயல் என்பது நான் பள்ளி மாணவனாக இருந்தபோது சிறிது மட்டும் உணர்ந்தேன். ஆனால், இப்போது வாழ்க்கையை ஓரளவுக்கு வாழ்ந்து பார்த்துவிட்ட பிறகு புரிகிறது - அவர் அன்று செய்த செயல் எவ்வளவு உன்னதமானது என்று. ஆம், அவருடைய பெற்றோர்கள் - நிஜ வாழ்க்கையின் உண்மையை அவரை உணரும்படி செய்ததாலேயே - திரு. செந்தில் அவர்கள் ஒரு ஆரோக்கியமான மாணவராக தன்னை மெருகேற்றிக்கொண்டார்.
திரு. செந்தில் அவர்களின் பெற்றோர், அவருடைய சகோதரர் அனைவரையும் நான் அறிவேன். ஓரளவுக்கு அவர்களிடம் பழகியும் உள்ளேன். பள்ளி படிப்பில் அவர் ஒரு சராசரி மாணவருக்கு உண்டான உத்வேகத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதையும் தாண்டி - விளையாட்டு துறையில் அவர் கொடுத்த உச்ச கட்ட பரிமளிப்பு என்பதே - அவர் காலத்திய அனைத்து மாணவர்களின் மனதில் திரு. செந்தில் அவர்கள் இன்றும் நீக்கமற நிறைந்திருப்பதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
திரு. செந்தில் அவர்கள் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளியில் பயின்ற காலத்தில் - *தடகள விளையாட்டுக்களில்* செய்த சாதனைகள் அளப்பறியது. அது தவிர, பூப்பந்து விளையாட்டிலும் பாராட்டிற்குரிய பரிமளிப்புகளை நிறைய கொடுத்துள்ளார். நேர பராமரிப்பில் மிகுந்த திறமைசாலி. ஒரு நாளின் 24 மணி நேரத்தை மிகச்சரியாக திட்டமிட்டு - படிப்பிற்கு, விளையாட்டிற்கு, வீட்டிற்கு - என்று சரியான விகிதத்தில் பிரித்துக்கொண்டு செயல்படுவார்.
ஹாஷ்ய உணர்வு மிக்கவர். தன்னுடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதில் வல்லவர். நல்ல மரியாதை தெரிந்தவர். நாங்கள் இருவரும் அதிகம் பழகியிராவிட்டாலும் - நினைத்தவுடன் மனதில் மரியாதை தோன்றும் அளவிற்கு தன்னுடைய சுபாவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டவர். எங்களுடைய சந்திப்பு பெரும்பாலும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். எங்களை மறந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட நாட்கள் அவை. நாங்கள் இருவருமே விளையாட்டு துறையில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று கோப்பையை நமது பள்ளிக்கு பெற்று கொடுத்துள்ளோம். இதில் திரு. செந்தில் அவர்கள் - தடகள விளையாட்டில் தனி விளையாட்டு வீரராகவும், பூப்பந்து விலையாட்டில் சக அணி வீரர்களுடன் இணைந்தும் அந்த வெற்றியை பெற்றுள்ளார். நான் பூப்பந்து விளையாட்டு அணியுடன் இணைந்து அந்த வெற்றியை பெற்றேன். இந்த பெருமையும், புகழும் - நமது பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளிக்கும், தலைமை ஆசிரியர் திரு. தர்மசகாயம், உடற்பயிற்சி ஆசிரியர் திரு. நாகராஜ், உடற்பயிற்சி ஆசிரியை ஸ்ரீ. பார்வதி ஆகிய அனைவருக்கும் சேரும்.
திரு. செந்தில் அவர்கள் - தடகள விளையாட்டில் ஒரு தேர்ந்த விளையாட்டு வீரராக தன்னை உருவாக்கி கொள்வதற்கு எடுத்த பயிற்சிகள் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. திரு. செந்தில் அவர்களை நான் பள்ளி சீருடையில் பார்த்ததை விட அவருடைய தடகள பயிற்சி உடுப்பிலேயே அதிக முறை பார்த்துள்ளேன். பவானிசாகர் அண்ணா சிலை மைதானத்தில் அவர் எடுத்துக்கொண்ட அதி அற்புதமான பயிற்சிகளே பின்னாளில் அவரை ஒரு மிகச்சிறந்த தடகள விளையாட்டு வீரராக உருவாக்கியது.
பள்ளி படிப்பிற்கு பின் கல்லூரி படிப்பினை நிறைவு செய்த திரு. செந்தில் அவர்கள் தொழில்துறையில் மிகவும் சிறப்பான நிலையினை எட்டியுள்ளார். இந்த பதிவின் துவக்கத்தில் நான் எழுதியுள்ளது போல் இன்றும் விளையாட்டு துறையில் ஒரு பள்ளி மாணவரைப்போல் பரிமளிப்பை கொடுத்து வருகிறார். அவர் கடைபிடிக்கும் எளிமையும், வெளிப்படை தன்மையும் - இன்றளவும் அவரது நட்பு வட்டத்திலும், மக்கள் மத்தியிலும் ஒரு நல்ல ஆளுமையாக வலம் வர செய்துள்ளது.
காலம் கொடுத்த அனுபவங்களில் தன்னை ஒரு மிகச்சிறந்த பேச்சாளராக உருவாக்கிக்கொண்ட திரு. செந்தில் அவர்கள் மிக நீண்ட வருடங்களாக மேடைகளில் தன்னம்பிக்கை கொடுக்கும் உரைகளை நிகழ்த்தி வருகிறார். பிரபலமான பட்டி மன்ற பேச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார்.
தொழில்துறை, விளையாட்டு துறை, இலக்கிய துறை - ஆகிய அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வரும் திரு. செந்தில் அவர்கள் - இன்றும் தன்னுடைய பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் ஆரோக்கியமான நட்பை பராமரித்து வருகிறார். நண்பர் திரு. செந்தில் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை பாதையில் மென்மேலும் பல வெற்றிகள் பெற்றிட வாழ்த்தி வணங்குகிறோம்.
Author
J. Anbarasu
Admin
Model School, GHS, GHSS Bhavanisagar Alumini Association WhatsApp Group
Alumnus of GHSS BSR
1979 to 1982