18/08/2026
🟠⚪🟠 2073-வது நாளின் காலைத்தியானம் 19/08/2026 !!!
இந்த காலைவேளையில் “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்"...... BEFORE I FORMED YOU IN THE WOMB I KNEW YOU" என்று (JEREMIAH) எரேமியா 1:5-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
நம் தேவனாகிய கர்த்தர், நாம் ஒவ்வொருவரும், பிறப்பதற்கு முன்பே நம்மைப்பற்றி அறிந்தவராய், தனிப்பட்ட நோக்கத்துடன் தேர்ந்தெடுத்து, வாழ்க்கைக்கான காரியங்களை திட்டமிட்டு, செயல்படுத்துகிறார்.
நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அடியும் அவருடைய பார்வையில் இருக்கிறது. ஆகவே, நம் எதிர்காலத்தைக் குறித்து நாம் பயப்படத் தேவையில்லை. நாம் ஒருபோதும் தனியாக இல்லை.
நம் தேவன், நம் தாயின் கர்ப்பத்திலேயே நம்மை வடிவமைத்தார். உடல் உறுப்புகள் எல்லாம் சரியாக இயங்கும்படி செய்து, நல்லதொரு தோற்றத்தை கொடுத்து உருவாக்கினார்.
அப்போஸ்தலனாகிய பவுல், கலாத்தியர் 1:15-ல் “…நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்” என்று குறிப்பிடுகிறார்.
நமது தாயின் கருவில் உருவாகுமுன்னே கர்த்தர் நம்மை முன்குறித்துள்ளார். எரேமியாவை, தேவ ஜனங்களுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொல்லும்படிக்கும், மற்றவர்களின் குறைகளை வெளிப்படுத்தி, புத்திமதி கூறி கடிந்து கொள்ளவும் தெரிந்து கொண்டார். சிம்சோனை, தாயின் கருவில் இருக்கும்போதே அவன் நசரேயனாக இருப்பான் என்று முன்குறித்தார்.
எனவே பிரியமானவர்களே, நம்மை சிருஷ்டித்த நம் கர்த்தர், நமது உள்ளிந்திரியங்களை அறிந்தவராய், நம்மீது கண்ணோக்கமாயிருந்து, நமக்கு துணை செய்வார் என்பதால் உற்சாகமடைவோம்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே,
இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்களை தாயின் வயிற்றில் உருவாக்குமுன்பே நீர் எங்களை அறிந்தீர் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.
ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp-7400472200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.
17/08/2026
🟢⚪🟢 2072-வது நாளின் காலைத்தியானம் 18/08/2026 !!!
இந்த காலைவேளையில், "ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது"..… "I WILL SAVE YOU, AND YOU WILL BE A BLESSING. DO NOT BE AFRAID, BUT LET YOUR HANDS BE STRONG” என்று (ZECHARIAH) சகரியா 8:13-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
தேவனாகிய கர்த்தர், எருசலேம் ஆலயம் கட்டப்படவேண்டும் என்று பல தீர்க்கதரிசிகள் மூலமாக சொல்லிவந்தார். முதலில் உற்சாகத்தோடு ஆரம்பித்த இஸ்ரவேலர்கள், எதிர்ப்புகள் வந்ததும் தளர்ந்து போனார்கள். எருசலேம் தேவாலயப் பணிகள் நின்றுபோய் மக்கள் சோர்வடைந்திருந்த வேளையில், தேவன் இந்த தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தார்.
நமது வாழ்வில் வரும் எதிர்ப்புகளும், பிறருடைய வார்த்தைகளும் நமக்கு மனச்சோர்வை உண்டாக்கலாம். ஆனால் நாம் கர்த்தரை மாத்திரம் விசுவாசித்து, எதற்கும் பயப்படாமல் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம்.
கர்த்தர், நம்மைச் சாபத்திலிருந்து விடுவித்து, நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி நம்மை உயர்த்துகிறார். எனவே சோர்ந்துபோகாமல் நமது கைகளைத் திடப்படுத்தி நற்காரியங்களைச் செய்யத் தொடங்குவோம்.
மேலும், தேவன் நமக்கு கொடுத்துள்ள வளங்கள், தாலந்துகள் மற்றும் வரங்களை நாம் புறக்கணிக்காமல், ஒளித்துவைக்காமல், கர்த்தருடைய நாம மகிமைக்கென்று பயன்படுத்த வேண்டுமென்று கர்த்தர் விரும்புகின்றார்.
எனவே பிரியமானவர்களே, தேவன் தரும் இரட்சிப்பை நாம் பெற்று, மற்றவர்களுக்கு நன்மையும் ஆசீர்வாதமுமான வாய்க்காலாக வாழுவோம். நம் மூலமாகப் பலரின் வேதனைகள் நீங்கும்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே,
இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர், நாங்கள் மற்றவர்களுக்கு
ஆசீர்வாதமாயிருக்கும்படி எங்களை இரட்சித்து, எங்கள் பயத்தை நீக்கி, எங்கள் கைகளை திடப்படுத்துவீர் என்று விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே…. ஆமென்.
ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200.
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India.
NMPF - Mumbai India
16/08/2026
🟤⚪🟤 2071-வது நாளின் காலைத்தியானம் 17/08/2026 !!!
இந்த காலைவேளையில், “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு" …... "GREAT PEACE HAVE THOSE WHO LOVE YOUR LAW” என்று (PSALM) சங்கீதம் 119:165-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
நாம் எதை அதிகமாக நேசிக்கிறோமோ அதற்கு மிகுந்த முக்கியத்துவத்தைக் கொடுத்து, அதிக நேரத்தை செலவிடுவோம். அதுபோல, நாம் வேதத்தை அதிகமாக நேசித்தோமானால் அதை வாசிக்கவும், தியானிக்கவும், தரமான, தாராளமான நேரத்தை செலவிடுவோம்.
இயேசுவின் நாமங்களில் ஒன்று ‘சமாதானப் பிரபு’ என்பதாகும். நாம் இயேசுவையும், அவருடைய வார்த்தையையும் நேசிக்கும் போது அவருடைய சமாதானம், நதியைப் போன்று நம் உள்ளங்களையும், இல்லங்களையும் நிரப்பும்.
கர்த்தருடைய வார்த்தை என்பது விலையேறப்பெற்ற பொக்கிஷம். அதனை விலையுயர்ந்த புதையல்களைத் தேடுவது போல ஒவ்வொரு நாளும் நாம் தேடிக் கருத்தாய் வாசிக்கவேண்டும்.
சிலர், தேவனுடைய பாதத்திலே தனிமையிலே அமர்ந்து, இன்னும் சிலர், குடும்பமாக சேர்ந்து வேதத்தை வாசித்து தியானிக்கின்றனர். அநேகர், சபைக்கு சென்று, இணைந்து தேவனை ஆராதித்து, வேத வார்த்தைகளை தியானித்து ஜெபிக்கின்றனர். அனைத்தும் நல்லது.
ஆம், சங்கீதம் 1:2-ல் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று கூறப்பட்டுள்ளது.
எனவே பிரியமானவர்களே, வேதத்தை கருத்தாய், பிரியமாய் வாசிப்போம். நம் வாழ்வில் ஆறுதலும், சமாதானமும் உண்டாகும் என்பது நிச்சயம்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே,
இந்த நாளின் வார்த்தையின்படியே உம்முடைய வேதத்தை அதிகமாய் நேசித்து, வாசித்து, தியானித்து, மிகுந்த சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே.... ஆமென்.
ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India
15/08/2026
🔵⚪🔵 2070-வது நாளின் காலைத்தியானம் 16/08/2026!!!
இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், "அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்" ..... "HE MUST BECOME GREATER; I MUST BECOME LESS” என்று (JOHN) யோவான் 3:30-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தும்படி முன்னோடியாக வந்தவர்தான் யோவான் ஸ்நானன். அவரது சீஷர்கள் சிலர், இயேசுவைக்குறித்து அவரிடம் கேட்டபோது, ‘நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் …. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்’ என்று பதிலளித்தார்.
யோவானைக் குறித்து இயேசு “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை” என்று சாட்சி கொடுத்ததாக மத்தேயு 11:11-ல் பார்க்கிறோம். ஆனால் யோவான், எந்தவொரு பெருமையும் கொள்ளாமல், தன்னைத் தாழ்த்தினார். இயேசுவே முதன்மையானவர் என்பதில் உறுதியாக இருந்தார்.
இன்று, ஆண்டவருடைய அருட்பணியில் ஈடுபட்டிருக்கும் அநேகர், இயேசுவுக்குக் கொடுக்கவேண்டிய முதலிடத்தைத் தங்கள் ஊழியத்துக்கும், ஊழியத்தில் காணும் வெற்றிகளுக்கும் கொடுத்து, தங்களது பெயரையும், புகழையும் பரப்பி விடுகிறார்கள்.
1 பேதுரு 5:5- ல் “…. பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
நமது குடும்ப வாழ்விலும், சபையிலும் மற்றும் ஊழியத்திலும் நம்மைத் தாழ்த்தி தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, நிச்சயமாகவே அவர், நம்மை ஆசீர்வதித்து, வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவார்.
எனவே பிரியமானவர்களே, கிறிஸ்துவை மாத்திரம் உயர்த்தி, அவரது பலத்த கரங்களுக்குள் அடங்கி இருந்து, அவருக்காய் ஊழியம் செய்வோம். நம்மை உயர்த்துபவர் தேவன் ஒருவர் மாத்திரமே.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே,
இந்த நாளின் வார்த்தையின்படியே, நீர் எங்களில் பெருகவும், நாங்கள் உம்மில் சிறுகவும் வேண்டுமென்று ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே….ஆமென்.
ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488.
WhatsApp- 7400472200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India
14/08/2026
🟠⚪🟠 2069-வது நாளின் காலைத்தியானம் 15/08/2026 !!!
🇮🇳 HAPPY 80th INDEPENDENCE DAY OF INDIA !!!
இந்த 80-வது சுதந்திரதின நாளின் காலைவேளையில், "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்"...."SO IF THE SON SETS YOU FREE; YOU WILL BE FREE INDEED" என்று (JOHN) யோவான் 8:36-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
அருள்நாதர் இயேசு இந்த பூவுலகில் அவதரித்தபோது, அவர் "மனுஷகுமாரன்" "நேசகுமாரன்" "தாவீதின் குமாரன்" மற்றும் "தேவகுமாரன்" என்றும் அடையாளப்படுத்தப் பட்டார். குமாரனாகிய இயேசுகிறிஸ்து, சகல அதிகாரமும் பொருந்தியவர்.
நம் வாழ்வின் பாவங்கள் நம்மை சிறைப்படுத்தி, அடிமைப்படுத்தி விடுகின்றன. நாம் கர்த்தருடைய பிரசன்னத்தில் நம்மை ஆராய்ந்து பார்த்து, நம் பாவங்களை அறிக்கையிட்டால், கர்த்தர் நமக்கு மெய்யான விடுதலையைத் தருகிறார்.
மேலும் சாபம், வியாதி, சிறையிருப்புகள், மற்றும் சாத்தானின் அடிமைபடுத்துதலிருந்தும், குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினாலன்றி வேறு ஒருவராலும் விடுதலை தரமுடியாது.
“கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” என்று 2 கொரிந்தியர் 3:17-ல் பார்க்கிறோம்.
ஆம், நம் குடும்ப வாழ்வில், தொழிலில், வேலையில் மற்றும் சரீரத்தில் காணப்படும் அனைத்து கட்டுகளும் அவிழ்க்கப்பட்டு, நாம் பூரண விடுதலையைப் பெறவேண்டும் என்றே நம் அன்பின் இயேசு விரும்புகிறார்.
எனவே பிரியமானவர்களே, இந்த நாளிலும் இயேசுவின் கரத்தில் நம்மை அர்ப்பணிப்போம். அவரே எல்லா சிறையிருப்புகளிலிருந்தும் நம்மை விடுவித்து, உயர்த்தி மேன்மைப்படுத்துவார்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளிலும், குமாரனாகிய நீர் எங்களை விடுதலையாக்கினால், அதுவே மெய்யான விடுதலை என்பதை உணர்ந்து செயல்பட எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.
ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488
WhatsApp- 7400472200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India
13/08/2026
🟢⚪🟢 2068-வது நாளின் காலைத்தியானம் 14/08/2026 !!!
இந்த காலைவேளையில், “என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்” — “FOR YOU, LORD, HAVE DELIVERED ME FROM DEATH, MY EYES FROM TEARS, MY FEET FROM STUMBLING” என்று (PSALM) சங்கீதம் 116:8-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
நம் தேவனாகிய கர்த்தர், நமது ஆத்துமாவை மரணத்துக்கும், ஆவிக்குரிய அழிவிலிருந்தும் பாதுகாக்கிறார்.
இயேசுகிறிஸ்து, “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள்” என்று சீஷர்களிடம் சொல்லி ஜெபித்ததாக மத்தேயு 26:38-ல் பார்க்கிறோம். இயேசுவின் ஆத்துமாவை யாராலும் அழிக்க முடியவில்லை. சரீரம் மரித்தாலும், அவர் சொன்னபடியே உயிரோடு எழுந்தார்.
அடுத்ததாக, நம் கண்களிலிருந்து வடியும் கண்ணீரை அவர் துடைக்கிறார். எசேக்கியா ராஜா மரணத் தருவாயிலிருந்தபோது, கர்த்தரை நோக்கி அழுது விண்ணப்பம் பண்ணினார். “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரை கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்”என்று கர்த்தர் அவருக்கு பதில் கொடுத்ததாக ஏசாயா 38:5-ல் பார்க்கிறோம்.
கடைசியாக, நாம் சறுக்கி விழுந்துவிடாமல், நமது கால்களைத் தாங்கிப் பாதுகாக்கிறார். தாவீது, கால் இடறினாலும், கர்த்தருடைய பலத்தோடு எழுந்து, இறுதிவரை கர்த்தருக்குப் பிரியமான பாதையில் நடந்து மேலான இடத்தைச் சுதந்தரித்துக் கொண்டார்.
எனவே பிரியமானவர்களே, இன்றைக்கும் அநேகர் பற்பல வேதனைகளோடு வாழக்கூடும். ஆனால், நாம் எண்ணிப்பார்க்க முடியாத அளவு கர்த்தர் நம்மைப் பாதுகாத்து வழிநடத்துவார்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே,
இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர், என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவிப்பீர் என்று விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே…. ஆமென்.
ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7 – 9967228488
WhatsApp – 7400472200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM – Chennai India.
NMPF – Mumbai India.
12/08/2026
🟤⚪🟤 2067 -வது நாளின் காலைத்தியானம் 13/08/2026 !!!
இந்த காலைவேளையில் “அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்"..... "HE IS ABLE TO HELP THOSE WHO ARE BEING TEMPTED” என்று (HEBREWS) எபிரேயர் 2:18-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
இயேசு கிறிஸ்து இப்பூமியில் வாழ்ந்த காலத்தில் சோதனைகளையும், துன்பங்களையும் அனுபவித்தார். எனவே, சோதனைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு அரணாக நின்று அவர்களைக் காப்பாற்றுகிறார்.
கர்த்தர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டபடியினாலே, நமக்கு வரும் சோதனைகள், அவமானங்கள், துக்கங்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். ஆகவே, சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
1 கொரிந்தியர் 10:13-ல் “…. உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் (தேவன்) இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” என்று கூறப்பட்டுள்ளது.
சோதனையைத் தாங்கும்படியான திராணி யோபுவுக்கு இருந்தது. அவன் தேவன்மீது வைத்திருந்த நம்பிக்கையின் அளவும் பெரிதாகவே இருந்திருக்கிறது.
ஆகவே யோபு “நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்” என்று யோபு 23:10-ல் கூறியுள்ளார்.
எனவே பிரியமானவர்களே, சிலவேளைகளில் தேவன், நமக்கும் சோதனைகளை அனுமதிக்கக்கூடும். நமது முழங்கால்களைத் திடப்படுத்துவோம். அதிலிருந்து தப்பிப்போகிற வழியை கர்த்தர் நமக்கு காண்பித்து விடுவிப்பார்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே,
இந்த நாளின் வார்த்தையின்படியே, பலவிதத்திலே சோதிக்கப்படுகிற எங்களுக்கு உதவி செய்ய நீர் வல்லவராயிருக்கிறார் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே…. ஆமென்.
ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7-9967228488
WhatsApp- 7400472200.
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India
11/08/2026
🔴⚪🔴 2066-வது நாளின் காலைத்தியானம் 12/08/2026 !!!
இந்த காலைவேளையில், “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” ..... "THE LORD ALMIGHTY IS WITH US; THE GOD OF JACOB IS OUR FORTRESS” என்று (PSALM) சங்கீதம் 46:11-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
நமது அன்றாட வாழ்வில், நமது குடும்பங்களில், வேலை செய்யும் இடங்களில், கல்வி ஸ்தாபனங்களில் அநேக உலக எதிரிகளை சந்திக்கிறோம். மற்றும், ஆவிக்குரிய எதிரியான சாத்தான், தீய திட்டங்களை தீட்டி நம்மை கீழே விழத்தள்ள முயற்சிக்கிறான்.
இந்த சூழ்நிலைகளில், நம் சேனைகளின் கர்த்தர் நம்மோடிருந்து, ஒன்றும் நம்மை மேற்கொள்ளாதபடி, எதிரியை முறியடித்துப் போடுகிறார்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட வேளையிலே, பார்வோன் தனது சேனையுடன் பின்தொடர்ந்தபோது, ஜனங்கள் மிகவும் பயந்தார்கள். ஆனால் சேனைகளின் கர்த்தர்,
அவர்கள் சார்பாக யுத்தம் பண்ணி, அவர்களை பாதுகாத்தார்.
ஏசாயா 31:5-ல் “பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார், அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்” என்று பார்க்கிறோம்.
மேலும், எவரும் உதவி செய்யக்கூடாத உபத்திரவத்தின் வழியாக நாம் கடந்துசென்றாலும், யாக்கோபின் தேவன் நமக்கு அடைக்கலமாக இருந்து நம்மை விடுவிப்பார்.
எனவே பிரியமானவர்களே, எல்லாவித கடினமான சூழ்நிலைகளிலும், தோல்விகளிலும் நம்பிக்கையை இழக்காமல், நமக்காக போராட சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்று உறுதியாயிருப்போம். வெற்றி நமக்கு நிச்சயம்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே,
இந்த நாளின் வார்த்தையின்படியே, சேனைகளின் கர்த்தராகிய நீர் எங்களோடிருந்து, யாக்கோபின் தேவன் எங்களுக்கு உயர்ந்த அடைக்கலமாக இருந்து எங்களை பாதுகாக்க ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே…. ஆமென்.
ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7-9967228488
WhatsApp 7400472200.
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India
10/08/2026
🟣⚪🟣 2065-வது நாளின் காலைத்தியானம் 11/08/2026 !!!
இந்த புதியநாளின் காலைவேளையில், "கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்" …... "BUT YOU LORD, ARE A SHIELD AROUND ME, MY GLORY, THE ONE WHO LIFTS MY HEAD HIGH” என்று (PSALM) சங்கீதம் 3:3-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
யுத்தமுனையில் நிற்கும் போர்வீரர்களுக்கு ‘கேடகம்’ ஓர் அத்தியாவசியமான உபகரணமாயிருக்கிறது. பல திசையிலிருந்து எதிரிகளின் தாக்குதல், அம்புகள், கணைகள் வரும்போது கேடகத்தின் பின்னே தங்களை மறைத்து பாதுகாத்துக் கொள்வார்கள். கேடகமானது மரணத்திலுமிருந்து ஒரு வீரனைப் பாதுகாக்கின்றது.
தாவீது, பலவிதமான ஆபத்துக்கள் தன்னை சூழ்ந்து கொண்டாலும் கர்த்தரே, தன் தலையை உயர்த்துகிறவர் என்பதில் உறுதியாயிருந்தார். ஆம், கர்த்தரே அவருக்கு துணைநின்று அவரை உயர்த்தி, மகிமையான சிங்காசனத்தில் அமர வைத்தார்.
உபாகமம் 33:29-ல் “உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே” என்று பார்க்கிறோம்.
நம் வாழ்விலும், எதிரிகளின் தாக்குதல் அதிகரிக்கும் போது, கர்த்தர் நமக்கு கேடகமும், பலனுமாயிருந்து நம் எதிரிகளை மடங்கடித்து, நம்மைப் பாதுகாத்து நம் தலையை உயர்த்துகிறார்.
மனிதர்கள் நம்மை இழிவுபடுத்த மற்றும் அவமானப்படுத்த எண்ணினாலும், கர்த்தர் நமக்குரிய மரியாதையையும் கௌரவத்தையும் திரும்பத் தந்து, தம் மகிமையால் நம்மை நிரப்புகிறார்.
எனவே பிரியமானவர்களே, நமது எல்லா இக்கட்டான சூழ்நிலைகளிலும், கர்த்தர் நமக்கு கேடகமாக இருந்து நம்மைப் பாதுகாத்து, நம் தலையை உயர்த்தி மேன்மைப்படுத்துவார். ஆகவே கலங்கவோ, பயப்படவோ வேண்டாம்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே,
இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர், எங்கள் கேடகமும், மகிமையும், எங்கள் தலையை எப்பொழுதும் உயர்த்துகிறவருமாயிருக்கும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே....
ஆமென்.
ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM- Chennai India
NMPF- Mumbai India
09/08/2026
🟠⚪🟠 2064-வது நாளின் காலைத்தியானம் 10/08/2026 !!!
இந்த காலைவேளையில், “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்"…... "MY GRACE IS SUFFICIENT FOR YOU, FOR MY POWER IS MADE PERFECT IN WEAKNESS” என்று (2 CORINTHIANS) 2 கொரிந்தியர் 12:9-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
'கிருபை' என்பதன் பொருள் இரக்கம், கருணை மற்றும் தயவு ஆகும். தகுதியில்லாத ஒருவனுக்கு, தகுதியான ஒன்றை கொடுப்பது தான் கிருபை. அதாவது நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுவதற்கு நமக்கு எந்த தகுதியும் இல்லை. ஆயினும
அவர் கொடுக்கக்கூடிய ஈவுதான் கிருபை.
நமது பரம பிதா, ஒரு தாயைப்போலவும், தந்தையைப் போலவும் இருந்து, நமக்கு அறிவுரை கூறி, கண்டித்து, தண்டித்தாலும், அவரது கிருபையினால் ஆற்றித் தேற்றி நடத்துகின்றார்.
சங்கீதக்காரன் “என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது” என்று சங்கீதம் 94:18-ல் கூறியுள்ளார்.
நம் வாழ்விலும் எதிர்பாராத போராட்டங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் முட்களைப்போல நம்மை நெருக்கி பெலவீனங்களை கொண்டு வந்திருக்குமானால், தேவனையே சார்ந்து கொள்வோம். எல்லா பெலவீனமும் மாறி, தேவ கிருபையை முழுமையாக பெற்றுக் கொள்வோம்.
அப்போஸ்தலனாகிய பவுல் “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’’ என்று பிலிப்பியர் 4:13-ல் கூறியுள்ளார்.
எனவே பிரியமானவர்களே, எவ்வளவு இக்கட்டுகளைக் கடந்து வந்தாலும், கர்த்தர் தமது கிருபையினால் தாங்கி, பெலவீனங்களை மேற்கொள்ளும் பெலன் தந்து, நிச்சயமாய் நமக்கு வெற்றியைத் தந்தருளுவார்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே,
இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்கள் வாழ்க்கையிலே உமது கிருபை எங்களுக்குப் போதுமானதாக இருந்து, எங்கள் பலவீனத்திலே உம்முடைய பலம் பூரணமாய் விளங்க ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே....
ஆமென்.
ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India