22/03/2026
வகுப்பறை எப்போது குழந்தைகளுடையதாகிறது?
எம். எம் சுரேந்திரன் எழுதிய புத்தகம்
தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் மலையாளப் புத்தகத்தின் பெயரைத் தமிழாக்கம் செய்தால் "எப்போது வகுப்பறை குழந்தைகளுடையதாகிறது?" என்று கிடைக்கும். 1994 முதல் காசரகோடு, கண்ணூர் மாவட்டங்களில் துவக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த திரு எம். எம் சுரேந்திரன் தான் ஆசிரியர்.
அப்புத்தகத்திலிருந்து ஒரு காட்சியை நம்முடைய துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் மனத்தில் பதிய வைக்கும் முயற்சியே இப்பதிவு. முதலில் புத்தகத்தில் தந்துள்ள ஓரிரு காட்சியைப் பார்ப்போம். பிறகு அதைப் பற்றி அலசுவோம்.
முதல் வகுப்பு, முதல்தர வகுப்பு என்ற தலைப்பின் கீழ் இந்நிகழ்வு இடம்பெறுகிறது.
இது அவர் நடத்திய வகுப்பின் நேரடிப் பதிவு
ஓநாய் கோழியைப் பிடிக்க வருவதும் அப்போதும் ஏற்படும் குழப்பங்களும் கோழிக்கு உதவ வரும் நண்பர்களும் என கதையைக் குழந்தைகள் உருவாக்குகிறார்கள். ஆனால் ஆசிரியரிடம் அவர்கள் ஒரு நிபந்தனை விதித்துள்ளனர். அது கதை உருவாக்கி முடிந்தால் அதை ஒப்பனையோடு நடத்துக்காட்ட வாய்ப்பளிக்க வேண்டும். அவர் அதற்கு ஒத்துக்கொள்கிறார்.
குழந்தைகள் குழுவாக அமர்கிறார்கள். கதை உருவாக்குகிறார்கள். கதாபாத்திரங்கள் பேசு வேண்டிய வசனங்களை எழுதுகிறார்கள். (ஆம் ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் தாம் வசனங்கள் எழுதுகிறார்கள்.) பிறகு கதாபாத்திரங்களை முடிவு செய்கிறார்கள். பேச வேண்டிய வசனங்களைப் பேசிப் பார்த்து பழகுகிறார்கள்.
அங்கங்கு ஓடி வந்து இந்த சொல்லை எப்படி எழுத வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆசிரியர் தம் குறிப்பேட்டில் எழுதிக் காட்டுகிறார்.
வகுப்பறை பொருட்கள் வீடாகவும் கூடாகவும் மாறுகிறது. குழந்தைகள் கதாபாத்திரங்களாக மாறுகிறார்கள். நாடகம் அரங்கேறுகிறது.
அடுத்த காட்சிதான் எனக்கு மிகவும் பிடித்தது.
இணையத்தில் தேடியபோது ஒரு படம் கிடைத்தது. ஒரு பூவின் படம். எந்தப் பின்னணியும் இல்லை. யாரோ ஒரு குழந்தை வரைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
அதைக் குழந்தைகளுக்குக் காட்டினேன். எவ்விதப் பின்னணியும் இல்லாத ஓர் ஒற்றைப் பூவின் படம் எப்படி அழகான செயல்பாடாக மாறுகிறது.
விளையாட யாரும் இல்லாமல் தனியாக இருக்கும் ரோஜாப் பூ. அப்போது ஒரு புழு வந்தது. ரோஜாப் பூச்செடியின் இலையைக் கடித்துத் தின்றது. அப்போது ஒரு காகம் வந்தது. புழுவைக் கொத்தித் தின்றது. பிறகு தன் வீட்டுக்குப் போனது.
ஆதிதேவ் என்ற மாணவன் எழுதிய கதை இது. இவர் பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட, தான் நினைப்பதைப் பகிர்ந்துகொள்ள தயங்கி நிற்பவர். முதலில் எழுத சற்றுச் சிரமப்பட்டவர் இப்போது சரளமாக எழுதுகிறார்
அவருடைய சுயஅனுபவம்தான் கதையாக வெளிப்பட்டுள்ளது. ஆதிதேவைப் போலவே வேறு குழந்தைகளும் கதை எழுதத் தொடங்கியுள்ளனர்.
நாளும் கதை எழுத வேண்டும். ஒப்பனையோடு நாடமாக மாற்ற வேண்டும். எழுதத் தெரியாவிட்டால் எப்படி கதை வசனம் எழுதுவது? எழுத்து குழந்தைகளின் தேவையாக மாறிய பல செயல்பாடுகளில் ஒன்றை இங்கே தருகிறேன்.
பூவின் படத்தைக் காட்டி
"இந்தப் பூ உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?"
"ம்... நல்ல பூ"
"இந்தப் பூ எங்கே இருக்கிறது?"
"பூந்தோட்டத்தில் இருக்கலாம்."
"இல்லை ஐயா, அதொரு பள்ளிக்கூடத்தின் முன்னால் நிற்கிறது."
"பள்ளி செல்லும் வழியருகில்"
"ஒரு வீட்டின் முன்னால்"
"அல்ல. ஒரு காட்டில்"
"இதெல்லாம் தவறு. இந்தப் பூ ஒரு குளக்கரையில் நிற்கிறது. குளத்தில் வாழும் தவளைதான் இப்பூவின் நண்பன்."
மெல்ல ஒரு கதை உருவாகத் தொடங்கிவிட்டது.
அடுத்த ஒரு கேள்வியையும் கேட்டேன்.
"இந்தப் பூ மகிழ்ச்சியாக இருக்கிறதா? கவலையாக இருக்கிறதா?"
"கவலையாக இருக்கிறது."
ஒட்டு மொத்த வகுப்பும் ஒரே குரலில் சொன்னது.
கொஞ்சம் பேர் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கொஞ்சம் பேர் கவலையாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள் என்ற என் கணிப்பு தவிடுபொடியானது. இப்படி நம் கணிப்பு தவிடுபொடியாகும்போது நீங்கள் குழந்தைகளுடன் சரியான வழியில் உறவாடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தலாம்.
"ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?"
"பூவுக்குச் சுற்றும் பாருங்கள். கறுத்த புள்ளிகளைப் பார்த்தீர்களா... அது கவலையாக இருப்பதால்தான் கறுத்த புள்ளிகளை இட்டுள்ளது."
எல்லோரும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
"ஏன் அது கவலைப்படுகிறது?"
குழந்தைகள் யோசனைகள் மூழ்கினார்கள்.
"இனி யாரும் உரக்கச் சொல்ல வேண்டாம். குழுவாக அமர்ந்து கதையெழுதுங்கள்."
"கதை எழுதிமுடித்ததும் நடித்துக்காட்ட வாய்ப்புத் தரவேண்டும் என்பதை மறைந்துவிடாதீர்கள்."
மூவர் கொண்ட குழுக்களாக அமர்கிறார்கள். பூவுக்குப் பெயர் சூட்டுகிறார்கள். பூக்குட்டி.
பூக்குட்டி பூந்தோட்டத்தில் இருக்கிறது. அவளுக்குத் தோழிகள் யாரும் இல்லை. அதனால் பூக்குட்டி கவலைப்பட்டாள். பூக்குட்டியின் கவலையைக் கண்டு பட்டாம் பூச்சி வந்தது. இனிமேல் நான்தான் உன் தோழி. பூக்குட்டியிடம் சொன்னது. பூக்குட்டி சிரித்தாள்.
குளக்கரையில் பூ வசித்து வந்தது. பூவுக்குத் தாகம் எடுத்தது. குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும். தண்ணீர் இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன். பூ அழுதது. குளத்திலுள்ள தவளை அழுகைச் சத்தத்தைக் கேட்டது. தவளை ஒரு குடுவையில் தண்ணீர் கொண்டு வந்தது. செடிக்கு அடியில் ஊற்றியது. பூ மகிழ்ந்தது.
சற்று வேறுபட்ட கதை
ஒரு காற்று வந்தது. பூக்காரனின் பூக்கூடையிலிருந்த ஒரு பூ கீழே விழுந்தது. பூ அழுதது. அப்போது மழை வந்தது. அந்தப் பூ ஒரு செடியாக மாறியது. அடுத்த நாள் பூக்காரன் வந்தான். பூ பறித்தான். கூடையில் வைத்தான். கடைக்குப் போனான்.
வேறுபட்ட பல கதைகள் இன்னும் இருக்கின்றன. இடப்பற்றாக்குறை, நேரப்பற்றாக்குறை கருதி அவற்றைப் பற்றி கூறவில்லை.
அப்புறம் என்ன...?
கதையை வகுப்பில் வாசிக்கிறார்கள்.
யார் யார் எந்தெந்த வசனம் பேசவேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். மேசை கடையாக மாறுகிறது. இரண்டு கைகளை தலைமேல் வைத்து கூடைசெய்கிறார்கள்...
நாடகத்தின் அரங்கேற்றம் நடக்கிறது.
*********************************************************************************************
இந்த நிகழ்ச்சியை அலசிப் பார்ப்போமா?
ஒப்பனை செய்து, கதை மாந்தர்களாக மாறி, நாடகம் நடிப்பது குழந்தைகளுக்குப் பிடித்துள்ளது. அந்த விருப்பத்தை எழுத்துச் செயல்பாடாக, வாசிப்புச் செயல்பாடாக மாற்றுகிறார் ஆசிரியர். எப்படி?
• ஆசிரியர் கதையைத் தேர்ந்தெடுக்கவில்லை.
• குழந்தைகளே கதை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்குகிறார்.
• கதையை எழுதச் சொல்கிறார்.
• எழுதிய கதையை வாசிக்கிறார்கள்
• அதன் அடிப்படையில் கதாபாத்திரங்களை முடிவு செய்கிறார்கள்.
• வசனம் எழுதுகிறார்கள்.
• ஒத்தி்கை பார்க்கிறார்கள். நடிக்கிறார்கள்.
இப்படிநிலைகளுள் குழந்தைகளிடம் கதை எழுதச் சொல்வதுதான் மிக மிக முக்கியமான முடிவு. குழந்தைகளுக்கு எழுதத் தெரியுமா? அந்த எழுத்து தெரியுமா? இந்த எழுத்தை நான் இதுவரை கற்பிக்கவில்லையே என்றெல்லாம் அவர் .யோசிக்கவில்லை. நாடகம் நடிக்க கதை எழுத வேண்டும். அவ்வளவுதான். கதை எழுதுவது குழந்தைகளின் தேவை. தெரியாவிட்டால் அவர்கள் வந்து கேட்பார்கள். அப்போது உதவினால் போதும்.
நாம் தற்போது வகுப்பில் நடைமுறைப்படுத்துவது போல் ஓர் எழுத்தை அறிமுகப்படுத்த ஒரு பாடம் அந்த எழுத்தை பல முறை பார்க்க, எழுத பல பக்கங்கள். வலுவூட்ட பல செயல்பாடுகள் என்ற படிநிலைகள் இல்லை.
அவர்களுக்குத் தேவைப்பட்டால் அவர்கள் எழுதுவார்கள். அவ்வளவுதான். ஆனால் அதற்கு உதவுவதற்காக ஆசிரியர் நாட்குறிப்பு எழுதுவார், பாடல் எழுதியிருப்பார், உரையாடல் எழுதியிருப்பார். இங்கெல்லாம் கதைக்கருதான் முக்கியம் கருத்துத்தான் முக்கியம். பொருள் பொதிந்த சூழல்தான் முக்கியம்.
இதைத்தான் கருத்துப் பரிமாற்ற முறை என்கிறோம். (Whole Language Approach) நம் மொழியியல் வல்லுநர்கள் எழுத்துகளை அடுக்கி வைத்த அதே முறையில் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எழுத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முறையை அவர் பின்பற்றவில்லை. சுரேந்திரன் அவர்கள் நடைமுறைப்படுத்தியதைத்தான் நாம் குழந்தை மையம் என்று இத்தனை காலமாகச் சொல்லி வந்திருக்கிறோம். அது வகுப்பறையில் எப்படி அமலாக்கப்படும் என்பது அறியாமலே..)
குழந்தைகளால் கதை உருவாக்க முடியுமா? அவர்கள் ஒன்றாம் வகுப்பு தானே. பெரியர்களான நாம் தானே கற்றுக்கொடுக்க வேண்டும். முதலில் நாம் நிறைய கதைகள் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களால் கதை சொல்ல முடியும்... அப்பப்பா... எத்தனை எத்தனை நியாயங்கள் நாம் சொல்லியிருக்கிறோம். சுரேந்திரன் குழந்தைகளை நம்புகிறார். வாய்ப்பளிக்கிறார். அவ்வளவுதான். அது ஒரு வரிக்கதையாக இருக்கலாம். பிறகு அது பெரியதாக மாறலாம். இதைத்தான் நாம் ஆக்கவியம் (Constructivism) என்கிறோம். சில்வியா ஆஷ்டன் வார்னர் எழுதிய The Teacher என்ற புத்தகத்தில் விவரித்துள்ள முறை. துவக்க வகுப்புக் குழந்தைகளுக்காக அமெரிக்காவில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில் கற்பிக்கத் தொடங்கிய சில்வியா தோற்றுப் போய் மாவோரிக் குழந்தைகளிடம் நான் உங்களுக்காக எழுதப்போகிறேன் என்ன எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேட்டதிலிருந்து ஆக்கவியம் உருவெடுக்கிறது.
நேரம் கிடைக்கும்போது புத்தகத்திலுள்ள பிற கருத்துகளைப் பார்க்கலாம்.
ஜி. ராஜேந்திரன்
07/03/2026
Co- Regulation
ஒரு தாத்தா கரடியும் குட்டிக்கரடியும் நடக்கப் புறப்பட்டார்கள். சற்று தூரம் நடந்திருப்பார்கள். ஓர் அருவியின் சத்தம் கேட்டது.
"அருகே ஓர் அருவி இருக்கிறது. அப்படியானால் சிறிய ஆறு இருக்கும். வா உனக்கு நான் நீச்சல் கற்றுத்தருகிறேன்" என்றார் தாத்தா.
"ஐயோ வேண்டாம் வேண்டாம். எனக்குத் தண்ணீர் என்றாலே பயம்" குட்டிக்கரடி சொன்னது.
"ஓ... அப்படியா... சரி நீந்த வேண்டாம். வா அருவியைப் பார்த்து விட்டு வரலாம்" என்று நடக்கத் தொடங்கினார். குட்டிக்கரடியும் பின்னால் நடந்தது.
"ஆகா... அருவி கொட்டுது பார்" தாத்தாக்கரடி சற்று தள்ளி நடந்தார்.
"பார் இங்கே தண்ணீர் மெதுவாக ஒழுகுது" என்றபடி ஒரு கையால் தண்ணீரைத் தொட்டார். "ஆகா ஜில்லென்று இருக்கிறது. வா வந்து சும்மா தொட்டுப் பார். அவ்வளவு நன்றாக இருக்கிறது" என்று குட்டிக்கரடியை அழைத்தார்.
சும்மா தொட்டுத்தான் பார்ப்பேமே என்றபடி அந்த ஓடையின் அருகே வந்தது. கையால் ஓடும் நீரைத் தொட்டது.
"ஆமா நல்லா ஜில்லென்று இதமாக இருக்கிறது" குட்டிக்கரடியும் சொன்னது.
"என்னைப் பார். இப்படிச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்" என்றபடி கையை அப்படியும் இப்படியும் ஆட்டினார். குட்டியும் அதுபோல் ஆட்டியது. "ஆகா நன்றாக இருக்கிறது" என்று உற்சாகத்தோடு தாத்தாகரடியைப் பார்த்துச் சொன்னது.
அப்போது தாத்தாக் கரடி கரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் தண்ணீரில் தாழ்த்தி வைத்து முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டிருந்தது. முகத்திலோ அவ்வளவு மகிழ்ச்சி.
நாமும் அதுபோல் செய்து பார்ப்போமே என்று கரையில் உட்கார்ந்து கால்களைத் தண்ணீரில் தாழ்த்தி முன்னும் பின்னும் ஆட்டியது.
நானும் அதுபோல் செய்கிறேன் என்று சொல்வதற்காகத் திரும்பிப்பார்த்தால் தாத்தாக்கரடி தன்னை மறந்து கால்களை வேகம் வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தது. அதன் உடல் எல்லாம் நனைந்திருந்தது
குட்டிக்கரடியும் அதுபோல் வேகம் வேகமாக கால்களை ஆட்ட குட்டிக்கரடியின் உடலும் நனைந்திருந்தது.
"நான் தண்ணீரில் இறங்கப்போகிறேன். இந்தக் குளிர்ந்த நீர் நம் உடலைத் தழுவிப் போவது அவ்வளவு சுகமாக இருக்கும். நீ நீந்த வேண்டாம். விருப்பம் இருந்தால் இறங்கி நின்றால் மட்டும் போதும்" என்றபடி தாத்தாக் கரடி நீரில் இறங்கியது. தயங்கித் தயங்கிக் குட்டிக்கரடியும் இறங்கியது.
அப்படி கைகால்களை ஆட்ட குட்டிக்கரடி தண்ணீரில் நீந்தத் தொடங்கியிருந்தது.
"ஆகா என்னாலும் நீந்த முடிகிறதே...நீந்துவது என்பது இதுதானா? நான் என்னவோ ஏதோவென்று நினைத்தேன்" குட்டிக்கரடி நீந்திக்கொண்டே சொன்னது.
இந்தக் கதையைச் சொல்லி விட்டு Dr. Ammu Lukose என்பவர் இன்றைய ஒரு முக்கிய பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறார்.
இந்தத் தாத்தா ஒருபோதும் குட்டிக்கரடியைக் கேலி செய்யவில்லை. "தண்ணீரைப் பார்த்துப் பயப்படும் நீயொரு பயந்தாங்ககொள்ளி. உனக்கு எல்லாமே பயம்தான். எப்பத்தான் உன் குணம் மாறுமோ?" என்றெல்லாம் திட்டவில்லை. மாறாக குழந்தையே அறியாமல் மெல்ல மெல்ல குழந்தையை நீந்த வைத்துவிட்டார்.
குழந்தைகள் கைபேசித் திரைக்குள் சிக்கிக்கொண்டுள்ள இக்காலத்தில் அருகே இருந்து இதுதான் நல்லது இதெல்லாம் நமக்குத் தேவையில்லாதது. நீ வேண்டாம் என்ற சொன்னதற்குள் இவ்வளவு சுகம் இருக்கிறது என்றெல்லாம் குழந்தைகள் அறியாமலே எடுத்துச் சொல்லவும் அவர்களை அனுபவிக்கச் செய்யவும் ஒருவர் இன்றைய சமூகச் சூழலில் இல்லை என்பதுதான் முக்கிய பிரச்சனை.
குழந்தைளின் மூளை இன்னும் முதிர்ச்சியடைவில்லை. காலம் கடந்து கிடைக்கும் மகிழ்ச்சிக்காகக் காத்திருக்க அவர்களால் முடியாது. அதற்குப் பதில் உடனடி கிடைக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அதற்குக் குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது. குறை சொல்லக் கூடாது என்கிறார்.
நான் பயிற்சியில் அடிக்கடி கூறும் ஒரு கருத்துக்கு இந்தக் கதை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. அதனால் இது எனக்கு மிகவும் பிடித்துப் போனது. துவக்கநிலை வகுப்பறைகளில் ஆசிரியர் பின்பற்ற வேண்டிய அருமையான கருத்துக்கு அருமையான எடுத்துக்காட்டு.
அந்தக் கருத்து
கற்கிறோம் என்று தெரியாமலே கற்பதுதான் உண்மையான கல்வி
ஜி. ராஜேந்திரன்
01/03/2026
விளையாட்டாகப் பேசுவதை சொத்து இப்போது விரும்புவதில்லை. "போட்டு வாங்குவதை" அவரால் இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. உறவினர்களுக்கு வேறு பல தகவல்கள் தெரிந்துகொள்ள விருப்பம் இருக்கும். அதைச் சுற்றி வளைத்துக் கேள்வி கேட்டு மடக்கலாம் என்ற அவர்களின் எண்ணத்தைச் சட்டெனப் புரிந்துகொள்கிறார்.
"நேத்தைக்கு எங்கே போனீங்க...?"
"எத்தனை எடத்துக்குப் போறோம். அதையெல்லாம் ஞாபகம் வச்சு சொல்ல முடியுமா...?"
"பள்ளிக்கூடம் எல்லாம் எப்படிப் போகுது?"
"பள்ளிக்கூடம் எப்படிப் போகும்... எப்பவும் போலப் போகும்"
பள்ளிக்கூடத்தில் உனக்கு யார் யார் பிரண்ட்ஸ்?"
"அவங்கள உங்களுக்குத் தெரியாதே... அப்ப சொன்ன புரியுமா?"
போன்ற பதில்களைக் கூறுகிறார்.
மட்டுமல்ல நாம் ஏதாவது கூறும்போது அச்செய்திக்கான ஆதாரங்கள் தேடுகிறார். "சரி நான் போய்ட்டு வர்றேன்" என்று அப்பா கூறினால் "ஆப்பீஸுக்குப் போகலையா? பையைக் காணோம்" என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்.
அவர் அப்பா சிரித்துக்கொண்டே "நான் திருச்சூரில் தங்காமல் இன்று மாலையே திரும்பி வந்திருவேன்".
"ஓ...ப்ராப்ர்டி விசிட்டா...?"
இது இப்படியிருக்க
கடந்த ஆறேழு மாதங்களாக ஸ்பைடர் மேன் பைத்தியமாக மாறியிருந்தார். விடுமுறை நாட்களில் காலை முதல் மாலை வரை தொலைக்காட்சியில் ஸ்பைடர் மேன்தான். பள்ளி விட்டு வந்தால் உறங்கச் செல்லும்வரை தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்தான். எல்லா கதாபாத்திரங்களின் பெயர்களும் தெரியும்.
வேண்டாம் என்று சொன்னால் கேட்கமாட்டார்...
சலிப்படையட்டும் விட்டுவிடுவோம் என்று ஒரு சில வாரங்கள் விட்டாலும் அவர் அதைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கும்போது சற்று கவலையாக இருக்கும்.
இவரை எப்படியாவது, பத்து நிமிடமாவது நாம் சொல்வதைக் கேட்க வைக்க வேண்டும் என்று நான் சொல்ல உங்களால் முடியாது என்று மனைவி சொல்ல ஈகோ சடைகுடைந்தெழ... மனம் திட்டத் தீட்டத் தொடங்கியது.
கவனத்தைக் கவரும் முதல் வாக்கி்யம் என்ற உத்தியை விட்டுப் பார்த்தேன்.
"காலையில் அந்தச் செடியிலுள்ள மொட்டைப் பார்த்தேன். என்ன அழகு தெரியுமா...? சூரியன் வந்தால் விரியத் தொடங்கும். பூ மலர்வதைப் பார்க்கலாம் வா..."
ம்ஹூம்...
செய்தித்தாள் வந்ததும் அதை விரித்து வைத்து "மோளூ இங்கே பாரு.. (மனைவியை மோளூ என்றுதான் அழைப்பேன்) அந்த யானை ரோட்டுக்கு நடுவே நிற்கிறது... நெற்றிப்பட்டம் கட்டிய பதினெட்டு யானைகளைப் பார்..."
ம்ஹூம்... தலையைக் கூடத் திருப்பவில்லை.
மனைவியின் சிரிப்புச் சத்தம் சற்று உரக்கக் கேடகத் தொடங்கியது.
அப்படி இருக்கும்போதுதான் என் நண்பன் ஒரு ரீல்ஸ் ஒன்றைப் பகிர்ந்திருந்தான். மாத்ரூபூமி புக்ஸ் தங்கள் புத்தகக் கடையில் நடத்தும் "ஒரு கதையுண்டு" (ஒரு கதை இருக்கிறது.) என்ற நிகழ்ச்சி.
சாதாரணமாக இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் மாத்ருபூமி புக்ஸ் இந்த முறை குழந்தைகளுக்கான நிகழ்ச்சியாக நடத்தியிருந்தார்கள். திரு கல்பற்ற நாராயணன் அவர்கள் எழுதிய "எந்தா கத" (ஆகா.. என்னா கதை!!!) என்ற புத்தக அறிமுகமும் அதிலுள்ள இரண்டு கதைகளைக் கூறும் நிகழ்ச்சி. எழுத்தாளரும் பங்கெடுக்கிறார். அதனால்தான் நண்பன் அதை எனக்கு அனுப்பினான்.
முதல் கதையைக் கேட்டேன். உடனே நிறுத்திக்கொண்டேன். சொத்துடன் சேர்ந்து இந்தக் கதையைக் கேட்டால் எப்படி இருக்கும் என்ற எண்ணம்தான் காரணம். எனக்கும் கதையைக் கேட்க வேண்டும் என்ற அடங்காத ஆசை இருந்தும் நான் அடக்கிக்கொண்டேன்.
இனி இதை சொத்துவிடம் கூறி அவரை இழுத்து இதற்குள் மூழ்கச் செய்ய வேண்டும். அதில்தான் வெற்றி. என்ன செய்வது?
நேற்று எர்ணாகுளத்திற்குப் போய்க்கொண்டிருந்தோம் அவர் பின்னிருக்கையிலிருந்து எதையோ வரையவோ எழுதவோ செய்துகொண்டிருந்தார். நானும் மனைவியும் முன்னாலிருந்து பேசிக்கொண்டிருந்தோம்.
நான் சட்டென "நேற்றைக்கு ஒரு ரீல்ஸ் பார்த்தேன். – எந்தா கதை என்பதுதான் நிகழ்ச்சியின் பெயர். குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கெடுத்திருந்தார்கள்" என்று மட்டும் கூறிவிட்டு வேறு பேச்சுக்குத் தாவினேன்.
மனைவி புரிந்துகொண்டார். வேறு பேச்சில் மூழ்க உதவினார்.
இரண்டு மணி நேரம் கடந்திருக்கும். நான் மீண்டும் "எந்தா கத நிகழ்ச்சியில் முதல் கதையைக் கேட்டேன். அதுவும் பாதிதான் கேட்டேன். பூரண கர்பிணியான அந்தத் தாய்ப்புலிக்கு என்னாச்சு என்று தெரியவில்லை அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று மட்டும் சொல்லிவிட்டு வேறு பேச்சுக்குத் தாவினோம்.
இன்று அந்த அதிசயம் நடந்தது.
சொத்தின் அம்மா தொலைக்காட்சி பார்ப்பதைக் கொஞ்சம் அதட்டினார். சாதாரணமாக அதட்டினால் கண்டுகொள்ள மாட்டார். அவர் பாட்டுக்குத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார். ஆனால் இன்று அதை விட்டுவிட்டு என் அறைக்கு வந்தார். "அந்தத் தாய்ப்புலிக்கு என்னாச்சு என்று பார்க்கலாமா" என்று கேட்டு அந்த ரீல்ஸைப் பார்த்தோம்.
பார்த்தது மட்டுமல்ல – இரண்டு கதைகளையும் கேட்டோம். சிரித்தோம். என் சிரிப்பு உண்மையான சிரிப்பாக இருந்தது. முன்னரே நான் அந்தக் கதையைப் பார்த்திருந்தேன் என்றால் அந்த உண்மைத்தன்மை இருந்திருக்காது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மட்டுமல்ல அந்தக் கதையைப் பற்றி நான் கூறும் கருத்து வாக்கியங்கள் நேர்மையானவையாக இருக்கும். சொத்திற்காகச் சொன்னதாக இருக்கா.
அவருக்காக இதைச் செய்கிறோம். மறைமுகமாக வேலை வாங்குகிறோம் என்றெல்லாம் புரிந்துகொண்டால் அதிலிருந்து விலகிப் போகிறார். அது நாம் கொடுக்கும் ஒரு வேலையாக மாறுகிறது. கொஞ்சம் கட்டாயப்படுத்தி்னால் கடனே என்று செய்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்.
இப்படிப்பட்ட குழந்தையிடம் அடுத்த ஆண்டு முதல் "இதுதான் க, இதுதான் கா... வீட்டிலிருந்து எழுதி வரணும். படித்துக் காட்டணும்" என்று சொல்லப்போகிறார்கள் ஆசிரியர்கள்.
இந்தக் கதை கேட்ட நிகழ்வில் ஒரு லாபம் இருக்கிறது. அடுத்தமுறை நான் இத்தனைச் சிரமப்படாமல் "எந்தா கதையின் அடுத்த ரீல்ஸ்" வந்திருக்கிறது என்று மட்டும் சொன்னால் போதும். அதே நேரத்தில் க, கா வுக்கு ஆசிரியர்கள் ஒவ்வொருமுறையும் குழந்தைக்குக் கொடுக்கும் அழுத்தத்தின் அளவை இருமடங்காகக் கூட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
27/02/2026
தேர்வு – மதிப்பீடு – ஓர் ஒப்பீடு
வணக்கம் ஐயா.
தங்களுக்கு அன்பும் நலமும்.
கற்றலடைவை மதிப்பீடு செய்வதற்கு படித்தல், எழுதுதல் தவிர்த்து நம்மிடமுள்ள வேறு கருவிகள் எவை? ஐயா...
இங்கு மதிப்பீடு என்ற சொல்லை நீங்கள் தேர்வு என்ற சொல்லோடு இணைத்துப் பார்க்கிறீர்களா என்று எனக்கோர் ஐயமுண்டு. நாம் பல வேளைகளில் இரண்டையும் ஒன்றென நினைத்துக் குழப்பிக்கொள்கிறோம்.
தேர்வு என்ற சொல்லுக்குள் பொதிந்திருக்கும் பொருள் என்ன?
சிலரை நான் தேர்ந்தெடுக்கப் போகிறேன். காரணம் தேவையானவர்களைவிட அதிகப்படியானோர் விண்ணப்பித்திருப்பதால், அல்லது ஒரு பெருங்கூட்டத்திலிருந்து சிலரை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டியிருப்பதால் நான் பயன்படுத்தும் கருவி தேர்வு.
இங்கு வடிகட்டுதல் நடக்கும். தேர்வு எழுதுவோரை எப்படிக் குழப்புவது என்பதுதான் தேர்வு நடத்துவோரின் முக்கிய நோக்கமாக இருக்கும். மறந்து போக வாய்ப்புள்ளவை, ஏதோ ஒரு மூலையில் யாருடைய கவனத்தையும் கவராத தகவல்கள் விடையாக வரும்படி வினாக்கள் அமைப்பது, எல்லாவற்றையும் விட குறைந்த நேரத்திற்குள் கூடுதல் வினாக்களுக்கு விடையளிப்பது என்ற மாபெரும் தந்திரத்தைப் பயன்படுத்தி நம்மைப் பந்தயக் குதிரைகளாக்கி மாற்றுவது இதன் நோக்கம்.
பன்னெடுங்காலமாக இந்த உத்தியையே பள்ளிகளிலும் பயன்படுத்தி வந்ததால்தான் நம் கல்விமுறை இப்படி இருக்கிறது.. புதிய எதையும் கண்டுபிடிக்காதது ஏன், இத்தனை கோடி மக்களி வாழும் நாடாக இருந்தும் நோபல் பரிசு ஏன் கிடைக்கவில்லை போன்ற வினாக்களுக்கான பல விடைகளுள் முக்கியமான விடை இது. இந்த முறையில் கற்று வந்த பெற்றோர்கள் வறுமையிலிருந்து கரையேறியதும் இம்முறைக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அதுவே வாழ்வின் இலக்காகிப் போனது.
தோற்றவர்களை அம்போ என்று விட்டுவிடும் இந்தத் தேர்வு. அடுத்தமுறை வெற்றி பெறுவது என்பது உங்கள் பொறுப்பு. அதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்த அமைப்பு விலகி நின்று வேடிக்கை பார்க்கும்.
அதனால் தேர்வுக்குப் பதில் எழுதும் குறுக்கு வழிகள் என்னென்ன, விடைத்தாள் திருத்துவோரை எப்படியெல்லாம் ஏமாற்றலாம், உன்னை ஒரு புத்திசாலி என்று காட்டிக்கொள்ள என்னென்ன செய்யலாம் விரைந்து பதில் எழுத உதவும் உத்திகள் என்னென்ன போன்றவற்றைக் கற்பிக்கும் கோச்சிங் மையங்கள் உருவாக இந்தத் தேர்வு முறை காரணமாகின்றன.
மற்றொரு முக்கிய விளைவு – உயர்மட்ட ஊழல் – வினாத்தாள் கசிவு, அப்பட்டமான காப்பியடி, தேர்வுப் பட்டியலில் இடைச்செருகல்... என எத்தனை எத்தனை குளறுபடிகள்... நேர்மையைக் குலைக்கும் செயல்கள், கல்வியின் குறிக்கோளையே கேள்விக்குள்ளாக்கும் செயல்கள் இவை.
கீழ்மட்ட நிலையில் - காலையில் சேவல் கூவியது என்று கதை சொல்லத் தொடங்கும் ஆசிரியை காலையில் கூவியது எது, காலையில் சேவல் என்ன செய்தது, சேவல் கூவியது எப்போது என ஒரு வாக்கியத்திலுள்ள மூன்று சொற்களும் விடையாக வரும்படி கேள்வி கேட்பது இதன் வேறொரு வடிவம்.
மொழிப்பாடங்களில் நான்கு வரியில் ஒரு குட்டி பத்தியைத் தந்து கீழே மூன்று கேள்விகள் கேட்கும் பழக்கம் இதிலிருந்து உருவானதுதான். தேர்வு மையமான அணுகுமுறை அல்லது தேர்வு மயமான அணுகுமுறை. NAS, SLAS என இதற்கு வலுசேர்க்கும் அமைப்புசார் தேர்வகள் வேறு.
சுருக்கமாக தேர்வு எப்படியோ அப்படியே கற்பித்தல் என்றோ தேர்வுக்காகக் கற்பித்தல் என்றோ தற்போதைய வகுப்பறைச் செயல்பாடுகள் மாறுவதற்கு இத்தேர்வு பெரும் காரணமாக இருக்கிறது.
வேறொரு பெரிய தீமை என்னவென்றால் வகுப்பறையில் அவசியம் நடக்க வேண்டிய பல அழகழகான செயல்பாடுகளை ஒதுக்கித் தள்ளவோ, நடைமுறைப்படுத்தி நேரமில்லாமல் போகவோ இது காரணமாகிறது.
தொடர்பற்ற தகவல்களை மூளையில் தக்க வைத்துக்கொள்ள முடியாத பலரைத் தற்கொலைக்குத் தள்ளவும் இது காரணமாகிறது. வேறொன்று ஒரு தேர்வுக்கும் அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவோருக்குக் கொடுக்கும் வேலைக்கும் அவ்வளவு பெரிய தொடர்பில்லை என்பது மிக மிக அப்பட்டம். நகைப்புக்கு வழி வகுக்கும் செயல்பாடு.
தேர்விலிருந்து மதிப்பீடு எப்படி மாறுபடுகிறது? பார்ப்போம்.
நமக்கு ஒரு கல்வி சார் நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை அடைய ஒரு செயல்பாட்டை முடிவு செய்கிறோம். செயல்பாட்டை நடைமுறைப்படுத்துகிறோம் அதனாலேயே அந்த நோக்கத்தை நோக்கி நாம் முன்னேறுகிறோமா, அந்த நோக்கம் நிறைவேறியதா என்று ஒவ்வொரு நிலையிலும் பரிசோதிப்போம்
நோக்கத்தை முடிவு செய்வதிலிருந்து, அதற்கான செயல்பாட்டைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து நம் மதிப்பீடு துவங்குகிறது. சரியான திட்டமிடல் பாதி வெற்றி என்ற பொன்மொழி இங்கு நினைவுகூர்வது நல்லது.
கல்வியில் நாம் நோக்கங்கள் எல்லாம் தெளிவற்று இருப்பவையோ அல்லது அடைய முடியாதவையோ, அல்லது வாழ்நாள் எல்லாம் தொடர்ந்து வருபவையோ ஆக இருப்பதைப் பார்க்கலாம். வாசிப்புத்திறனை வளர்ப்பது, கதைஎழுதும் திறனை வளர்ப்பது, ஆதாரத்தோடு தன் வாதத்தை முன்வைப்பது... கற்ற கருத்துகளைப் பொருத்தமான சூழலில் பயன்படுத்துவது என எதை எடுத்தாலும் அந்தத் திறனின் துவக்கத்தையும் முடிவையும் தெளிவுற, அளந்து ஓர் எண்ணுக்குள் அடக்க முடியாததைப் பார்க்கலாம்.
வேறொன்று எல்லோரிடமும் எல்லாத்திறனும் ஒரே வேகத்தில் வளரா என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
நான் எந்த ஆண்டு எந்த மாதம் எந்தத் தேதி எந்தக் கிழமை எத்தனை மணிக்கு நான் இளைஞனானேன் என்று ஒரு மாணவர் கேட்டால் நம்மால் எப்படி பதில் சொல்ல முடியாதோ அப்படி இந்தத் திறன் எந்த நாள் எந்தச் செயல்பாட்டின் மூலம் வளர்ந்தது என்று நம்மால் கூறமுடியாது.
பல நாட்கள் பல செயல்பாடுகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும்போது ஒரு செடியில் பூ மலர்வதுபோல் இந்தத் திறன் மெல்ல குழந்தைகளிடம் முகிழத் தொடங்கும்.
அதனாலேயோ தொடர்ந்து கவனிப்பது, குழந்தைகள் ஒரு செயல்பாட்டில் எந்தளவுக்கு ஈடுபடுகிறார்கள் என்பதை அவர்கள் தரும் குறிப்புகளிலிருந்து ஊகித்துணர்வது, அதற்கேற்ப நாம் நடைமுறைப்படுத்தும் செயல்பாடுகளில் தேவையான மாற்றங்கள் செய்வது மீண்டும் நடைமுறைப்படுத்துவது என நம் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதனால்தான் நாம் பயிற்சியில் ஆசிரியர் ஓர் ஆய்வாளர் என்ற கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
இங்கு எப்படிக் கவனிப்பது, எப்படி பதிவு செய்வது, எப்படி அறிக்கை தயாரிப்பது என்று நாம் யோசிக்கத் தொடங்கினால் இது முற்றிலும் பொருளற்ற செயல்பாடாக மாறிவிடும்.
தொடர்ந்து செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்களா, வகுப்பறைக் கலந்துரையாடல்களில் ஈடுபடுகிறார்களா, கொடுக்கும் பணிகளை முடித்து வருகிறார்களா, புத்தக வாசிப்பில் ஈடுபடுகிறார்களா, படைப்பாக்கச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்களா, பள்ளி நிகழ்வுகளில் பங்கெடுக்கிறார்களா என பல கூறுகளை உட்படுத்தியது மதிப்பீடு.
சாம்பார் வைக்கும்போது ஒவ்வொரு நிலையிலும் சுவைத்துப் பார்த்து தேவையான பொருட்களை அளவுக்கேற்பச் சேர்ப்பது போன்றது மதிப்பீடு. அதனால்தான் மதிப்பீடு முழுமையானது, தொடர்ச்சியானது என்றோம்.
உண்மையில் மதிப்பீட்டை எண்களுக்குள் அடக்கக் கூடாது. இது பண்பு சார்ந்தது. குணம் சார்ந்தது. காத்திருப்பது, கனிவோடு அணுகுவது, பலவழிகளில் முயற்சி செய்வது போன்றவைதாம் இதற்கான முறை
இங்குதான் நான் அடிக்கடி சொல்லும் Performance Indicators மிக மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம் நீங்கள் நினைத்த மதிப்பீடு இங்கு நான் குறிப்பிட்ட மதிப்பீடு என்றால் அதற்கு படித்தலும் எழுதுதலும் மிகக் குறைவாகத்தான் உதவும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்.
இது கல்விக்கு மிக மிக அவசியம் ஆவது ஏன்?
ஆசிரியர் புத்தகம் வாசிக்கும்போது மாணவர்கள் கொட்டாவி விட்டால் வாசிப்பை நிறுத்தி வேறு சுவையான புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவது மதிப்பீடு.
ஒரு பாடத்தில் மாணவர்களுக்குத் தெரிந்த தகவல்கள் மட்டுமே இருக்கிறது என்று புரிந்துகொண்டால் அந்தப் பாடத்திற்குப் பதில் மாணவர்கள் முடிவு செய்யும் வேறொரு பாடத்தைத் தேர்ந்தெடுத்தல் அல்லது உருவாக்கி நடத்துதல் என்பது மதிப்பீடு.
எழுத்துச் செயல்பாட்டில் ஆர்வம் காட்டாதோர் அதிகம் இருப்பின் என்ன எழுதலாம் என்று மாணவர்களிடம் கேட்டு எழுத வாய்ப்பளிப்பது மதிப்பீடு.
ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் பல உத்திகளுள் சில குழந்தைகள் விரும்பினால் மீண்டும் மீண்டும் அந்த உத்தியை ஆசிரியர் பயன்படுத்துவது மதிப்பீடு.
இங்கு ஆசிரியரை முழுமையாக நம்பித்தானாக வேண்டும். அவருடைய கருத்துக்கு அளவுகடந்த மதிப்புண்டு. காரணம் வருடம் முழுவதும் அவர் குழந்தையைக் கவனித்திருக்கிறார்.
மற்றொன்று குழந்தைகளின் படைப்புகளின் தொகுப்பு,
மூன்றாவது ஒரு மாணவரைப் பற்றி பிற மாணவர்கள்தம் கருத்து
நான்கு அந்தக் குழந்தையுடன் நாம் நடத்தும் நீண்ட தொடர் கலந்துரையாடல்
ஆனால் இந்த மதிப்பீட்டை நாம் இறுகப் பற்றிக்கொள்ளும்போது பந்தயத்தில் நாம் பங்கெடுக்க முடியாமல் போய்விடும். அடுத்த வீட்டுக் குழந்தையுடன் நம் குழந்தையை ஒப்பிட முடியாமல் போய்விடும். இந்த மாநிலத்தை அந்த மாநிலத்தோடு ஒப்பிட்டுப் பெருமைப்பட முடியாமல் போய்விடும்.
இதையெல்லாம் தியாகம் செய்ய நாம் ஆயத்தமாக இருக்கிறோமா என்ன?
ஜி.ராஜேந்திரன்
18/02/2026
குறைவே நிறைவு
ஒரு செயல் செய்ய, செயலில் ஈடுபட ஒருவரை உற்சாகப்படுத்துவது எப்படி? f
அப்படி உற்சாகப்படுத்தினால் அது நிலைத்து நிற்குமா?
ஊக்கமூட்டுதல் என்றால் உண்மையில் என்ன?
ஆகா, அருமை, சிறப்பு என்றெல்லாம் பாராட்டினால் உற்சாகம் ஏற்படுமா?
போன்ற பல வினாக்கள் ஆசிரியப் பயிற்சியின் போது கலந்துரையாடலுக்கு உள்ளாவதுண்டு.
அப்போது கூறிய ஒரு கருத்துக்குப் பக்கபலமாக மேலும் ஓர் எடுத்துக்காட்டு நிகழ்வு நேற்று நடந்தது.
சொத்தின் ஐந்தாம் பிறந்தநாளுக்கு ஒரு பரிசு கிடைத்தது. அது ஒரு குடில். சிறிய நெகிழிக்குழாய்களை இணைத்து அதன் மேல் ரெக்ஸின் துணியை விரித்தால் குடில் தயார்.
கடந்த ஆண்டும் இப்படியொரு பரிசுப்பொருள் கிடைத்திருந்தது. அன்று அதை மகள்தான் அக்குடிலைக் கட்டி உதவினார்.
இம்முறை அவர் வேலையில் அமர்ந்துவிட்டார். நான் பார்வையாளனாக உட்கார்ந்திருந்தேன்.
சொத்து வந்தார். பொட்டலத்தைப் பிரித்தார். மூன்று நிறத்தில் இருந்த குழாய்கள், இணைப்பான்கள் துணி ஆகியவற்றை எடுத்துத் தனித்தனியாக வைத்தார். எங்கே அந்த யூசர் மேன்யுவல் என்று தேடத் தொடங்கினார். (எனக்கு இந்த வார்த்தை அறிமுகமாவது நாற்பதாவது வயதில் என்று நினைக்கிறேன். காரணம் அத்தகைய ஒரு பொருளை வாங்கும் தேவை ஏற்பட்டதேயில்லையே..)
அது அந்த ரெக்ஸின் துணியோடு ஒட்டியிருந்தது. அதைக் கண்டுபிடித்தார். ஒரு முறை பார்த்தார். அவரே அடுக்கத் தொடங்கினார். அவர் குழாய்களை ஒவ்வொரு முறை தவறாக இணைக்கும்போது, எழுந்துபோய் உதவு உதவு என்று எனக்குள் இருக்கும் ஆசிரியப் பேய் தள்ளியது. நான் அடிக்கிக்கொண்டேன். என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்று என்னை நான் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
மீண்டும் அந்தத் துண்டுத்தாளைப் பார்த்தார். தவறான இணைப்புகளைத் திருப்பிப் பொருத்தினார். குடிலுக்கான சட்டம் தயார். துணியை விரித்தார். அது அவருக்குச் சற்றுச் சிரமமாக இருந்தார். அம்மாவை அழைத்தார். அவரும் அம்மாவும் சேர்ந்து அதை அந்தச் சட்டத்தின் மேலே விரித்தார்கள்.
சொத்து ஹே... என்று கரவொலி எழுப்பிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நானும் அவருடன் இணைந்துகொண்டேன்.
கூறவந்த கருத்து என்ன?
பிறர் உதவியில்லாமல், தனியாக, சற்றே சவாலான ஒரு செயலைச் செய்து முடிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதுதான் உண்மையான, நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும் உற்சாகத்தைத் தரவல்லது. ஊக்கமளிப்பது.
இந்த உற்சாகத்தின் மிகப்பெரிய பலம் என்ன தெரியுமா?
தன்னம்பிக்கையைப் பெருக்குவதோடு, தோல்விகள் வந்தாலும் துவளாமல் இருப்பது. சவாலான புதிய சூழல்களைத் துணிவோடு எதிர்கொள்வது... போன்றவை.
ஆனால் வகுப்பறையில் நாம் உதவி செய்து உதவி செய்து இம்மகிழ்ச்சி அனுபவிப்பதைத் தவிர்த்துவிடுகிறோமோ
கற்றலை எளிமைப்படுத்தி எளிமைப்படுத்தி குழந்தைகள் அகவூக்கம் அடைவதைத் தடுத்துவிடுகிறோமோ என்று அஞ்சுகிறேன்.
சில நாட்கள் முன்பு இக்கருத்தைப் பற்றிக் கலந்துரையாடியபோது ஆசிரியை ஒருவர் தன்னனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
அவருக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தையைச் சற்று அதிக கவனத்தோடு அக்கறையோடு வளர்க்க முற்பட்டிருக்கிறார். அதனால் இரண்டாவது குழந்தையை அந்தளவுக்குக் கண்டுகொள்ளவில்லை. அதனாலேயே இரண்டாவது குழந்தை தானாக பல செயல்களைச் செய்யக் கற்றுக்கொண்டது. அதே நேரத்தில் முதல் குழந்தைக்கு எல்லாவற்றும் அம்மா வேண்டும். இரண்டாவது குழந்தை கொஞ்சம் புத்திசாலித்தனத்தோடு சிந்திக்கும். யாரையும் எதிர்பார்க்காமல் தன் வேலைகளைச் செய்து முடிக்கும்.
அவர்கள் இருவரும் வளர்ந்த பிறகு முதல் குழந்தை அம்மாவிடம் என்னை ஏன் தங்கையைப் போல் வளர்க்கவில்லை என்று புகார் சொன்னதாம்.
சற்றே சவாலான செயல்பாடுகளைக் குழந்தைகளுக்குக் கொடுப்போம். உதவுவதைக் குறைத்துக்கொள்வோம். ஆசிரியப் பேயைச் சற்றுக் கட்டுப்படுத்துவோம்.
குறைவே நிறைவு என்பதை மறக்காமல் இருப்போம்.
ஜி. ராஜேந்திரன்
30/01/2026
மலையாளத்திலிருந்து...
நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளின் கற்பனையாற்றலை விரிவுபடுத்த வேண்டும் என்று எனக்குள் ஓர் ஆவேசம் தள்ளும். அதற்குச் சிறந்த வழி கதைதானே....
அப்புறம்...
"அப்படி நம் முயல்குட்டி அம்மா முயலிடம் சொன்னது. நான் காட்டின் அரசனாக வேண்டும்."
ஒரு முன்னிருக்கை எழந்து நின்றது.
"முயல்குட்டி அதுதான் சொல்லிச்சுண்ணு உங்களுக்கு எப்படித் தெரியும்? அவங்கெல்லாம் தமிழிலா பேசுவாங்க...?"
"அல்லல்ல... விலங்குகள் எல்லாம் அவங்க மொழியில்தான் பேசுவாங்க. அந்த மொழி எனக்கும் உனக்கும் புரியாது. ஆனால் கதை எழுதுபவர்களுக்குப் புரியும். அப்படித்தான் இத்தனை கதைகள் உருவாகுது..."
என் பதில் அவருக்கு அவ்வளவு மனநிறைவு அளித்தது என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் இருக்கையில் அமர்ந்துகொண்டார். தற்காலத்துக்கு நான் தப்பித்தேன்.
நான் ஓரக்கண்ணால் பார்த்தேன். இருக்கையின் நுனியில்தான் இப்போதும் அமர்ந்திருக்கிறார். எந்த நிமிடத்திலும் அடுத்த கேள்விக்கணை அவரிடமிருந்து எய்யப்படலாம்.
"கடவுளே என்னைக் காப்பாற்று" என்று முணுமுணுத்தபடி கதைக்குள் குதித்தேன்.
"அம்மா முயல் முயல்குட்டியோடு சொன்னது. மகனே. நாம் எல்லாம் சிறிய விலங்குகள். நம்மால் இத்தனை பெரிய காட்டின் அரசனாவது எல்லாம் நடக்காத காரியம். அதைக்கேட்ட முயல் குட்டி சொன்னது. எனக்கு நல்ல அறிவு இருக்கிறது. அதைப் பயன்படுத்தி நான் அரசனாவேன்."
முன்னிருக்கை பட்டனைத் தட்டிவிட்டதுபோல் சட்டென எழுந்தார்.
"முயல் குட்டிக்குப் பைத்தியம் பிடிச்சிண்ணு நெனக்கிறேன். யானை ஒரு மிதி மிதிச்சா அது சட்னியாகிடும். அப்புறம் சிங்கம் கடலை மிட்டாய் சாப்பிடுவது போல் அதைச் சாப்பிடலாம்."
"ஹ ஹ் ஹா..." வகுப்பு மொத்தமும் சிரித்தது.
அவரோ பாகுபலி போல் மார்பை விரித்து நின்றுகொண்டிருந்தார்.
அந்த வகுப்பிலுள்ள தந்திரசாலி குழந்தை எழுந்து வந்து இச்சூழலை எப்படி சமாளிப்பது என்பதற்கான ஒரு வழியை என் காதில் சொன்னது.
"டீச்சர் அவன வெளயாடப் போகச்சொல்லங்க... அவன் போனதக்கப்புறம் நாம் கதை சொல்லலாம்..."
"ஆகா.. அருமையான ஐடியா... நான் முன்னிருக்கை குழந்தையிடம் கேட்டேன்.
"உங்களுக்கு வெளயாடப் போகணுமா?"
அவர் ஒரு நொடி யோசித்தார். அப்புறம் "வேண்டாம் வேண்டாம் இங்கேயே இருந்துக்கறேன். அதான் நல்லாருக்கு..."
அதாவது என் கதையைக் கிழித்துத் தொங்கவிட்டுட்டுத்தான் அவர் அடங்குவார் போல...
நான் வேறு வழியில்லாமல் மீண்டும் கதைக்குள் குதித்தேன்.
"அம்மா முயல் முயல்குட்டியின் காதில் ஒரு வழி சொன்னது. காட்டின் அரசனாவதற்கான இரகசியம். அந்த இரகசியம் என்னவாக இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்?"
"ஓஹோ... அப்படீண்ணா இது கேட்பதற்கான கதையல்ல. எங்கள பேச வைப்பதற்கான கதையா...?"
அவர் கையால் வாயை மூடி உள்ளுக்குள் சிரித்தார்.
"இந்தக் கதை வேண்டாம். நாங்க சும்மா கேட்கிறோம். அதற்குத் தகுந்த கதை சொல்லுங்க..."
குழந்தைகள் மொத்தமாக அவர் கருத்துக்கு வழிமொழிந்தனர்.
அந்த தந்திரசாலி மீண்டும் என் காதில் ஓர் இரகசியம் ஓதினார்.
"நாளைக்கு அவனோட அத்தைக்குக் கல்யாணம். அவன் லீவெடுப்பான். அப்போ நாம கத சொல்லுவோம். இப்ப சொல்ல வேண்டா..."
"என் ராசா... இந்த மாதிரி தந்திரமெல்லாம் சொல்லித்தர நீயில்லாவிட்டால் என் நிலைமை என்னவாகியிருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது."
அதற்குள் மணிச்சத்தம் கேட்டது.
"அம்மா முயல் முயல் குட்டியின் காதில் சொன்ன இரகசியம் என்னாண்ணு நாளைக்கு யோசிட்டு வாங்க. நானும் யோசிக்கிறேன்." நான் கற்பனையாற்றலை விரிவுபடுத்தும் வகுப்பை முடித்தேன்.
"அப்புறம் நாம் எல்லாரும் முயல் குட்டியின் வீட்டுக்குப் போய் நாம யோசிச்ச இரகசியத்தைச் சொல்லலலாம்." முன்னிருக்கைக் குழந்தையும் என் கற்பனை வகுப்பின் முடிவு விழாவில் பங்குகொண்டார்.
இவரை உண்டு இல்லைண்ணு...
நான் கண்களை உருட்டுவதற்கு இடையே அவன் டோம் அண்டி ஜெரி காட்டூணில் வரும் ஜெர்ரியைப் போல ஒரு நொடிக்குள் ஓடி மறைந்தார்.
அந்த தந்திரசாலி எனக்கு இப்படி ஆறுதல் கூறினார்.
"நீங்க நாளைக்கு எங்க கிட்ட கேள்வி கேட்காத, சும்மா கேட்கறதுக்கான கதை சொல்லுங்க. அப்போ அவன் எதுவும் கேட்கமாட்டான். பிரச்சனை இருக்காது."
"போங்கடா... நீங்களும் உங்க கற்பனையும்."
எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். கற்பனையை விரிவுபடுத்த வந்த ஆவேசம்... மண்ணாங்கட்டி.
அந்த நேரம் என் குலகுருவின் அருள் வாக்கு நினைவுக்கு வந்தது.
(இது சில வருடங்களுக்கு முன்பு வைரலான ஒரு சிறுவனின் காணொளியில் அவர் கூறிய வாக்கியம். ஒரிகாமி செய்வதற்காக தாளெடுத்து ஏதோ செய்வார். ஆனால் அது சரியாகவில்லை. அப்போது அவர் சொன்னது இது. அன்று நிறையப் பேர் அக்காணொளியைப் பகிர்ந்துகொண்டனர்.)
"கொஞ்சம் பேருக்குச் சரியாகும், கொஞ்சம் பேருக்குச் சரியாகாது"
அவ்வளவுதான். இதுக்குப்போய்....
மிக்க நன்றி குரு...
இவங்களுக்கிடையே நிண்ணு பொழைக்கணும்னா நீங்கதான் காப்பாத்தணும்...
வி. கெ. தீபா.
PC: The Indian School