02/07/2026
இனிக்கும் கணக்கு – 112
கணக்குப்பிள்ளைக் காத்தவராயன்
அறைக்கதவு திறந்தே இருந்தது. இருந்தாலும் கதவில் மெதுவாக இரண்டு தட்டுத் தட்டுவிட்டு "உள்ளே வரலாமா?" என்று கேட்டாள் மஞ்சு.
"வா வா... உனக்காகத்தான் காத்திருக்கிறேன்" என்றார் அர்ச்சனா அண்ணி.
"ஓ... அப்படியானால் எனக்காக வேறொரு செயல்பாட்டை யோசித்திருக்கிறீர்கள் அப்படித்தானே?" என்றாள் மஞ்சு.
"ஆம். சரி செயல்பாட்டுக்கு வருவோம். நடனமாடும் எண்கள் என்று நான் சொன்னால் உன் மனத்தில் உதிக்கும் கருத்து என்ன?"
"நடனமாடும் எண்களா? எண்கள் கண் காது மூக்கு வைத்து கதாபாத்திரங்களாக மாறிவிட்டனவா?"
"இல்லை"
"நடனக் கலைஞர்களின் கால்கள் மேடையில் போடும் கோலத்தின் அளவுகளா...?"
"நடனக் கலைஞர்கள், மேடை ஆகியவை சரி. உனக்கொரு குறிப்பு தருகிறேன்"
"சொல்லுங்கள் சொல்லுங்கள்..."
"குழுநடனம்"
"குழுநடனத்திற்கும் எண்களுக்கும் என்ன தொடர்பு?"
"சரி. இப்போது நான் சொல்லும் எண்களை எழுதிக்கொள். குழுநடனம் என்று நான் ஏன் சொன்னேன் என்று புரியும்"
மஞ்சு குறிப்பேட்டைத் திறந்து எண்களை எழுத ஆயத்தமானாள்.
142857
285714
428571
571428
714285
857142
எண்களை எழுதிக்கொண்டே இருந்த மஞ்சு... "ஓ எனக்குப் புரிந்துவிட்டது. புரிந்துவிட்டது" என்று கூவினாள்.
"குழு நடனத்தின் போது நடனக் கலைஞர்கள் சுழன்று சுழன்று ஆடுவார்கள். பிறகு வரிசையில் நிற்கும்போது முன்பு முன்னால் நிற்பவர்கள் பின்னால் போகலாம். பின்னால் நிற்பவர்கள் முன்னால் வரலாம். இல்லையா...?"
"அதேதான்"
"வேறொருவர் வந்து இணையவோ, குழுவில் உள்ளவர் விட்டுப்போகவோ செய்வதுமில்லை"
"மிகச் சரி. இந்த ஆறு எண்களை முதல் எண்ணை ஒன்றால் இரண்டாவது எண்ணை இரண்டால், மூன்றாவது எண்ணை மூன்றால் என வகுத்துப் பார் உனக்கோர் ஆச்சரியம் காத்திருக்கிறது"
"சற்று நேரம் தாருங்கள். செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்" என்றபடி மஞ்சு ஈவு காணத் தொடங்கினாள். மூன்று வினாக்களுக்கு விடை கண்டுபிடித்ததுமே அவளுக்கு அந்த ஆச்சரியம் என்னவென்று புரிந்தது.
"ஓ இவர்கள்தாம் நடனக்குழு அடிப்படை உறுப்பினர்களா?
"ஹ் ஹ ஹா அப்படியும் சொல்லலாம்"
"இந்த நடனக்குழு உறுப்பினர்களை ஒருங்கிணைப்பவர் அல்லது நடனக்குழுவை நடத்திச் செல்பவர் யார் என்று தெரிய வேண்டுமா?"
"நிச்சயமாக. அதற்கு என்ன செய்ய வேண்டும்?"
"857142 உடன் இந்த அப்படி உறுப்பினர்களைக் கூட்டிப் பார்த்தால் தெரியும்"
கூட்டுத்தொகையைப் பார்த்த மஞ்சு "இவர் மறுபடியும் தன் முக்கியத்துவத்தைக் காட்டிவிட்டார்" என்று உரக்கச் சிரித்தாள்.
அவள் மனத்தில் ரஷ்யா நாட்டு அரசு நடனமான பாலே நடனத்தை இணையத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
தன் அறைக்குச் சென்றாள். அந்த நடனத்தைப் பார்த்தாள். எண்களின் நடனத்திற்கும் அந்த பாலே நடனத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாள்.
"உலகின் எல்லா இடங்களிலும், எல்லா செயல்களிலும் எண்கள் நடனமாடுவது அவள் அகக்கண்களுக்குப் புலப்பட்டது"
உங்களுக்கு?