29/01/2023
கடந்த 27 1 2023 அன்று காலை 10 மணியளவில், நமது தேவாங்க மேல்நிலைப்பள்ளி, நிர்வாக குழுவின் சார்பாக, நமது பள்ளியின் முன்னாள் மாணவரும் தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசருமான திரு கே. முரளி சங்கர் அவர்களுக்கும், கிரைம் நாவலாசிரியரும் கின்னஸ் சாதனையாளருமான திரு ராஜேஷ் குமார் அவர்களுக்கும், மற்றும் CODISIA என்றழைக்கப்படும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் திரு வீ. திருஞானம் அவர்களுக்கும் பாராட்டு விழா மிகவும் சிறப்பாகவும் சீரிய முறையிலும் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளிக்குழு தலைவர் திரு. பி. விஜயகுமார் தலைமை தாங்கி, சான்றோர்களை வெகுவாகப் பாராட்டி கௌரவப்படுத்தினார்.
தலைமை ஆசிரியை திருமதி ஹேமாமாலினி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
பள்ளிக் குழு செயலாளர் திரு. வீ. சிவராமன் அவர்களும், பொருளாளர் திரு. எஸ்.ஆத்மலிங்கம் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு.செல்லப்பன் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
பாராட்டு பெற்ற சான்றோர்கள் பள்ளியில், தங்களது மாணவர் கால அனுபவங்களை எடுத்துரைத்து அனைவரையும் நெகிழச்செய்தனர்.
நீதியரசர் மாண்புமிகு திரு. முரளிசங்கர் தனது ஏற்புரையில் முன்னாள் பள்ளி ஆசிரியர்கள் திரு.கே.கிருஷ்ணமூர்த்தி, திரு.ராஜமுனீஷ்வரன் மற்றும் பலரது சிறப்பான பணியினை பெயரிட்டு குறிப்பிட்டது தற்போதைய ஆசிரியர்களுக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்தது.
பாராட்டுப் பெற்ற சான்றோர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டு, சிறப்பான நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களுமான திருவாளர்கள் டி.ஜெகதீசன், எம்.பசுபதி ஆர்.கே.கிருஷ்ணமூர்த்தி, ஐ.ஜி.மனோகரன், பெல்லம் எம். சிவானந்தம், பி.கார்த்திக், என்.தேவானந்த், பிரகாஷ், சி. விஜயகுமார், ஆர். பழனிசாமி, வழக்குரைஞர்கள் திரு. பிரபாகர், திரு. ஜே.குமரேசன், திரு.சி.பி.சண்முகசுந்தரம் மற்றும் பலரும் பெருவாரியாக தனது குடும்பத்தாருடன் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
பள்ளியின் முதுகலை ஆசிரியர் திரு. கே. கிரீஷ் கிருஷ்ணன் அவர்களுக்கு விழாவினை முறைப்படுத்தி நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டு, அந்த வாய்ப்பினை அனைவரும் பாராட்டும் வகையில் மிகவும் செவ்வனே செய்து முடித்தார்.
நன்றி நவிழ்தல் பொறுப்பு வழங்கப்பட்ட பள்ளியின் தமிழ் ஆசிரியை திருமதி. நளினாதேவி, கவிஞர் கண்ணதாசனை விழா நிகழ்வுக்கு நேரில் வரவழைத்து அவரது பாடல்கள் மூலம் நன்றி நவிழ்தலை கவிமழையெனப் பொழிந்து தள்ளி அனைவரது பாராட்டினையும் பெற்றார்.
நமது பள்ளியின், வரப்போகும் பவள விழா கொண்டாட்டத்திற்கு முன்னோடியாகவும் முத்தாய்ப்பாகவும் அமைந்தது இந்த விழா என, பலரும் எண்ணும் வகையில் சிறப்பாக நடந்தேறியது இவ்விழா.
கலந்துக்கொண்ட அழைப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பானதொரு மதிய உணவு வழங்கப்பட்டது.