01/12/2023
துளித்துளியாக வானிலிருந்து விழுகின்ற மழைத் துளிகளை ஓரிடத்தில் அணைக்கட்டி இருத்தி வைத்து செழுமையான மதகுகளைக் கூர்மையான அறிவுகொண்டு திறந்து மூடி மேலாண்மை செய்கையில் சமூகத்தின் நீர்த் தேவைகளை எதிர்கொள்ள முடியும் எனும் நுட்பத்தை ஆதி தமிழர்கள் அறிந்துணர்ந்து கல்லணையை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டினார்கள். கல்லணையின் வெற்றியின் காரணிகள் (1) உறுதியான நீர் கசியாத சுவர்கள் (2) தேவையற்று நீரை வெளியாக்காத மதகுகள் (3) தனியாக எந்தப் பகுதியையும் சார்ந்து அமைக்கப்படாத உறுதியான கட்டமைப்பு.
கல்லணையைப் போல காலத்தை மீறிப் பயணிக்கும் வடிமைப்பே ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம். தினமும் 30 பைசா, 50 பைசா, 1 ரூபாய் என்று பெறப்படும் சந்தாத் தொகையானது துளித்துளியாய் விழும் மழைநீர் போன்றது. உலகின் 113+ நாடுகளில் வாழும் 13,00,00,000 (13 கோடி) தமிழர்களுள் 0.077% தமிழர்கள் ஓர் புள்ளியில் நின்று, தினமும் சந்தாச் செலுத்தினாலே மாபெரும் மாற்றங்களைத் தமிழில் கொண்டு வர முடியும் எனும் நம்பிக்கையுடன் 22/11/2017 தினத்தன்று ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் உருவானது.
(1) செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள், வன்மம் கற்பிக்கும் ஆன்மீகம் முன் மயங்கி நிற்காமல் இயங்குவது (2) தலைவர் என்றொருவர் இல்லாமல் உயர்மட்டக் குழுவினர் ஓட்டுப்பதிவின் மூலமாக மட்டுமே முடிவுகளை எட்டும் கட்டமைப்பு (3) வரவு செலவுக் கணக்குகளைத் திறந்த புத்தகமாக உலகின் பார்வைக்கு 24 X 7 வைத்துள்ள முறைமை (4) உறுப்பினர்களில் உயர்வு தாழ்வை திருக்குறள் 505 அடிப்படையில் அறிவிக்கும் கட்டமைப்பு (5) எழுதப்பட்ட தெளிவான நடைமுறைச் சட்டதிட்டங்கள் அடங்கிய (Standard Operating Procedures SOP), கையேடு (Manual) (6) கல்வி, தமிழாய்வு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு செய்வது (14 MOU) (7) உறுப்பினர் அனைவரும் திறன் வளர்க்கத் துணை செய்வது (8) உயர் மட்டக் குழுவில் எந்தப் பொறுப்பும், எப்பொழுதும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பதனைத் தெளிவுபடுத்துவது (9) 46+ நுண் தமிழாய்வு இருக்கைகளை ஒரே சமயத்தில் நடத்திவருவது (10) உலகத் தமிழர்களுக்குக் குறைவான விலையில் மெய்நிகர் ( ON LINE ) தமிழ்க் கல்வியை வழங்கும் “தமிழ் மெய்நிகர் பள்ளியை” (Student Teacher ration of 1:1) (1 Session for RS.90 INR) நடத்துவது (11) ஆர்வமுள்ள தமிழர்கள் சந்தாவாகக் கட்டும் தொகையை அவர்களே மிக விரைவாகத் தமிழ்ப்பணி மூலமாகத் திரும்பிப் பெரும் வகையில் இயங்கும் வடிவமைப்பு - ஆகியவை ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் தனித்தன்மைகள்.
2170 நாட்களில் 117 உறுப்பினர்களின் தினசரி சந்தாவான 103 ரூபாயைப் பெற்று, கசியாத மதகுகள் போன்ற நேர்மையான உயர்மட்டக் குழுவினரின் மேற்பார்வையில் செயல்பட்டு இதுவரையில் 2,68,048 ரூபாயை அறிவியல் தமிழ்ப்பணிகளுக்கு வழங்கி, 28 தமிழாய்வுத் திட்டங்களை முன்செலுத்தி, 4.55 லட்ச ரூபாயில் இயங்கும் 46 தமிழ் நுண் ஆய்விருக்கைகளைப் பெற்று, 254 நுண் பயிலரங்கங்களை வெற்றிகரமாக நடத்தி, 264 அமர்வுகளைதா தனது மெய்நிகர் தமிழ்ப்பள்ளியில் முடித்து இம்மன்றம் நாளைய தமிழ் சமூகத்தை நோக்கி நிமிர்ந்த பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. (31.10.2023)
நம்புங்கள்: “எடுப்பதல்ல தமிழ் கொடுப்பதுதான் தமிழ்”.
23/11/2023
11/07/2019