13/06/2020
ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தைக் காக்கலாம்!
மரபிசை, நாடகக் கலைஞர்களை அரவணைக்க வாருங்கள்!
அனைவருக்கும் வணக்கம்,
பொதுமுடக்கம் மூன்று மாதங்களாக நீடிக்கிறது. சமூகத்தின் சில பகுதியினர் கையறுநிலையில் தவிக்கின்றனர். அவர்களில் சிலரையாவது நாம் அரவணைக்க வேண்டியுள்ளது. மரபு இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் ஆகிய இரு பிரிவினரின் வாழ்க்கை சிதைந்துகொண்டுள்ளது. சித்திரை, பங்குனி ஆகிய மாதங்களில் நிகழும் திருவிழாக்கள், குடும்பநிகழ்வுகள் ஏதுமில்லை. ஆண்டு முழுமைக்குமான வருவாயினை ஒருசில நாட்களில் ஈட்ட வேண்டிய நிலைகொண்டோர் இக்கலைஞர்கள். அந்தச் சில நாட்களிலும் அவர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.
எந்த வகையிலும் வருவாய் இல்லை. சேமிப்பும் இல்லை, கடன் கொடுக்கவும் ஆளில்லை. நாதசுரம், தவில், பம்பை, பறை, தாளம், தபேலா, மேளம் உள்ளிட்ட எல்லாக் கருவிகளும் தீண்டும் விரல்களில்லாமல் கிடக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகால தமிழ் மரபு இசையின் தொடர்ச்சியாக வாழும் மக்கள் இவர்கள். இந்த இசைக் கருவிகளை இசைப்பதால் சமூகத்தில் ஏற்கெனவே இவர்கள் மரியாதை இழந்துவிட்டனர். இப்போது வாழ்க்கைக்கான பொருளாதாரமும் இல்லை. ஏற்கெனவே கடன் உள்ளது, வீட்டு வாடகை உள்ளது. மருத்துவச் செலவுகள் உள்ளன. இவற்றைத் தவிர்க்கவியலாது. அரசு வழங்கும் சில உணவுப் பொருட்களை மட்டும் சார்ந்து இருப்பது நடைமுறை வாய்ப்பற்றது.
செம்மை தமிழ்க் கழகத்திற்கான இசை கோப்புப் பணிகளில் இவர்களில் சிலருடன் நாம் பணியாற்றினோம். இவர்களுடைய மனநிலை, திறன் ஆகியவற்றை அந்நாட்களில் புரிந்துகொண்டோம். இவர்களிடம் நம் மரபிசையின் கூறுகள் உள்ளன. தொன்மையான குடியின் மரபுத்தொடர்ச்சி இவர்கள். சமூகத்தின் இசை வணிகத்தில் இன்று பொருளாதாரம் பெருக்கிக்கொண்டுள்ளோர் நிலையையும், இந்த தொல்மாந்தர் நிலையையும் ஒப்பிட்டால், ஒப்பாரி வைத்துத்தான் அழவேண்டும்.
நாடகக் கலைஞர்களின் நிலை இதைக் காட்டிலும் சீர்கேடு. மற்ற துறைகளில் உள்ளோருக்கு பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் கிடைத்துள்ளன. பொதுநிகழ்வுகள், கூடல்கள், விழாக்கள் நிகழும்வரை இசைக்கலைஞர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள், 100 ஆண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டுள்ள நாடகச் சபைகளின் அங்கத்தவர். பெருமைகளுக்குப் பஞ்சமில்லை, உண்ணவோ உணவில்லை!
நம் ஊரான ஆச்சாம்பட்டியில் வாழும் நான்கு மரபிசைக் கலைஞர்களுக்கு, இருமாதங்களுக்கு முன்னர், அடிப்படை உதவித்தொகை வழங்கினோம். அவர்களில் ஒருவர் சிலநாட்களுக்கு முன் செம்மைவனம் வந்து நம்மைச் சந்தித்தார். வயதில் மிகவும் முதியவர், தவில் இசைக் கலைஞர். சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் இருந்துவிட்டு, குழந்தையைப்போல கண்ணீர்விட்டார்.
சுற்றிலும் மனிதர்கள் இருக்கிறார்கள், வாகனங்கள் சீறிப்பாய்கின்றன, மீண்டும் நகைக் கடைகளும் துணிக்கடைகளும் செயல்படுகின்றன. எல்லோர் கைகளிலும் இணைய இணைப்புடன் அலைபேசிகள் உள்ளன. புவியின் மறுமுனையில் உள்ள நாட்டின் நிகழ்வுகளை இங்குள்ளோர் அறிந்துகொள்கின்றனர். ஆனால், அருகில் இருப்பவருடைய பசியையும், அவமானத்தையும் அறிந்துகொள்ள ஆளில்லையே! இவ்விதமான அகந்தையின் விளைவாகத்தான் ஊழி நிகழ்கிறது. இந்நிலையிலும் அன்பிலாது இருந்தால், மனிதகுலம் மன்னிப்புகேட்கும் வாய்ப்பும் இல்லாதொழியும்.
நாம் பலமுறை குறிப்பிட்டுள்ளோம், ‘ஊழி எனப்படுவது அழிவுமட்டுமல்ல, ஆக்கமும் அழிவும் ஒருசேர நிகழ்வது’ ஆகும். பொருந்தாத சூழல்களும் உயிரினங்களும் அழிக்கப்பட்டு, பொருந்துவன படைக்கப்படுகின்றன. மனித இனம், தம்முடைய குணங்களில் உள்ள பொருந்தாதவற்றை அழித்து, அன்பு செய்ய விழைய வேண்டும். இதுவே ஊழியில் பொருந்துதலின் அடிப்படை.
ஒருவயது குழந்தையின் பிறந்த நாளுக்கு இச்சமூகம் செய்துகொண்டிருந்த செலவுகளைத் திரட்டினாலே, நாட்டில் உள்ள எல்லா மரபிசைக் கலைஞர்களையும், நாடகக் கலைஞர்களியும் அரவணைத்துக் காக்கலாம். இவர்கள் வீட்டின் விழாக்களுக்கும் சாவுக்கும் பறையடித்தவர்களும் நாதசுரம் வாசித்தவர்களும் இன்று பட்டினியில் கிடக்கின்றனர். இதைப் பற்றி இச்சமூகத்தினருக்கு என்ன அக்கறை உள்ளதெனப் பார்க்கிறோம். புறக்கணிப்புதான் நீக்கமற நிறைந்துள்ளது.
பொதுச் சமூகம் வேறு, செம்மைச் சமூகம் வேறு என்பதை நாமறிவோம். மற்றவர்கள் ‘உதவி செய்வதாக’க் கருதுவார்கள். நாம் உதவி என்று ஏதுமில்லை என்கிறோம்.
உரிமை உள்ளோரின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றுவது உதவி அல்ல, அரவணைப்பு!
அம்மையப்பர் நமக்கு உணர்த்தும் இறையியலில் ‘எவ்வுயிரும் எம்முயிரே’ என்பதுவே சாரமான கொள்கை.
எண்ணற்ற குழந்தைகள் பட்டினியிலும், சூழல் நெருக்கடியிலும் திணறுகின்றனர் என்றால், அந்த வேதனையை நம் சிந்தனை உணரும். அதைப் புறக்கணிக்கக் கூடாது. நிலம் வறண்டால், மேகம் வருவது இயல்பு. பிறர் வாடினால் நாமும் வாடுதலும் அதே இயல்புதான்.
மரபிசைக் கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் நம்மை அழைக்கவில்லை. அவர்களுக்கு நம்மைத் தெரியாது. ஆனால், நமக்கு அவர்களிடம் உள்ள உரிமையினால் நாமே முன்வந்து அவர்களை நோக்கிச் செல்கிறோம். இந்த உரிமை நாமாக வகுப்பதல்ல, படைத்தவரின் அருள்.
அரவணைக்க வாருங்கள் என்று உங்களை அழைக்கிறோம்.
செம்மை அறக்கட்டளையின் வழியாக, செம்மை நெறிச் செயல்திட்டத்தின் கீழ், தூய்மைப் பணியாளருக்கான காலை உணவு வழங்குகிறோம். தஞ்சாவூர், சிதம்பரம், நெல்லை பாபநாசம் ஆகிய பகுதிகளில் நெறி செயல்படுகிறது. திருச்சியில் செம்மை நெறி இரு மாதங்களுக்குச் செயல்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நிறைவுற்றது. பெங்களூருவில், புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கான காலை உணவு வழங்கப்பட்டது. ஏற்கெனவே 40 இசைக்கலைஞர்களுக்கு பங்களிப்புத்தொகை வழங்கினோம்.
தமிழகம் முழுவதும் பல்லாயிரம் இசைக் கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் உள்ளனர். இந்தப் பொதுமுடக்கம் முடிவுக்கு வருகையில், அவர்களில் எவ்வளவுபேர் எஞ்சுவார்கள் எனத் தெரியாது. அன்றாடக் கூலி வேலைக்குச் சென்று உயிர் வாழும் நிலை அவர்களுக்கு ஏற்படும். கலைமீதும் மரபின் மீதும் செருக்கு கொண்ட கலைஞர்கள் அதையும் செய்யாமல் மன உளைச்சலில் வீழநேரிடலாம். எதுவாகினும், இந்தப் போக்கில் அன்புகொண்டோர் தலையிட்டாக வேண்டும்.
செம்மாந்த மரபின் கலைகளைப் பற்றிக்கிடக்கும் மனிதர்கள் பசிக்கும், இருக்கும் வீட்டின் வாடகைக்கும் அஞ்சி கூலிவேலைக்குச் சென்றால், அது இந்த மரபின் வீழ்ச்சி. இவ்வளவு பொருளாதாரம் புழங்கும் இந்தச் சமூகத்தில் சில ஆயிரம் மரபுக் கலைஞர்கள் ’அரவணைக்க ஆளின்றி வீழ்ந்தார்கள்’ என்ற அவலத்தை நாம் அனுமதிக்கக் கூடாது.
சூழல் சீராகும்வரை, அவர்கள் குடும்பங்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். என் சிந்தனையில் உள்ள விருப்பம் ஆழமானது, மிக விரிவானது. அது கருவாக இருக்கட்டும். அம்மையப்பரின் அருள் அதனை வெளிப்படுத்தி வினையாக்கட்டும்.
உங்களிடம் உள்ள உரிமையினால் உங்களை வேண்டுகிறேன், வாருங்கள் சில நூறு குடும்பங்களையாவது காப்போம்!
இயன்றவற்றை எல்லாம் செய்யுங்கள். அதேவேளை, உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம்.
விருப்பம் இருந்தால், வழிகள் ஆயிரம்!
இச்செயல் திட்டத்திற்கென பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். நிலைமை சீராகும்வரை ஒவ்வொரு குடும்பத்தின் தேவைக்கேற்ப அரிசி முதல் காய்கறிவரை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடியாகப் பணமாகத் தருவதைக் குறைத்து, உணவு மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது இத்திட்டத்தின் சாரமான கருத்து. சிலருக்குப் பணத்தேவை நெருக்கடியான நிலையில் இருக்கும். சான்றாக, வாடகை, மருத்துவச் செலவுகள் ஆகியனவற்றைக் குறிக்கலாம். அவற்றைப் பணமாக வழங்க விரும்புகிறோம்.
தஞ்சாவூரிலும் இதன் சுற்றுப்புறங்களிலும் பணி தொடங்கப்படுகிறது. தமிழாசிரியரும் செம்மைச் சமூகத்தவருமான திரு ஐ.குழந்தைசாமி, மரபிசைக் கலைஞர் திரு.இராசேந்திரன் ஆகியோர் கலைஞர்களை ஒருங்கிணைக்கின்றனர். செம்மைச் சமூகத்தவர் பலர் களப்பணியிலும் பொது ஒருங்கிணைப்பிலும் ஈடுபடுகின்றனர்.
ஐந்து நாட்களுக்கு ஒருமுறை, இம்மக்களை நேரில் சந்தித்து உணவு மற்றும் பிற தேவைக்கான பொருட்களை வழங்குவது நடைமுறையாக இருக்கும். இதன்வழியாக, இம்மக்களுக்கும் நமக்கு நேரடி உறவு அமையும் வாய்ப்புண்டு. மேலும், ஒவ்வொரு குடும்பத்தின் தேவையையும் நாம் அறிந்துகொள்வோம்.
இச்செயல் திட்டத்தில் இணையும் அக்கலைஞர்களின் குடும்பத்தினர் இனி, பசி எனும் பிணிக்கு ஆட்படமாட்டார்!
இவ்விருப்பம் நிலைக்கட்டும்!
செம்மை அறக்கட்டளையின், செம்மை அகல் எனும் இச்செயல் திட்டத்தில் பங்கேற்க விருப்பம்கொண்டோர் வருக!
அம்மையப்பர் அருள் நிறைவதாக!
அன்புடன்,
ம.செந்தமிழன்
தொடர்புக்கு:
சிவராமகிருஷ்ணன் - 9845539071
சிவப்பிரகாசம் – 9443291202