Amazing Siddha

Amazing Siddha

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amazing Siddha, Education Website, Wholesale food grain market, Koyambedu, Chennai.

05/12/2022

தாமரை பூவில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால் தாமரை விதை பருப்பில் பல சத்துக்கள் இருக்கின்றன என்பது அறிவியல் உண்மை. நமது சித்தர்களின் கூற்றுப்படி, தாமரை விதை தோல்வியாதிகளை குணப்படுத்துகிறது. மேலும், தாது விருத்தியை தருகிறது.

இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளின் படி, தாமரை விதை பருப்பில் விட்டமின் பி, நார்ச்சத்து, மற்றும் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. புரதசத்து மட்டும் இருந்தால் அது உடலை பெருக்க வைக்கும். நார்ச்சத்து சேர்ந்து இருப்பதால் அந்த பிரச்னை இருக்காது.

காய்ச்சல், தோல் வியாதிகள், தூக்கமின்மை, செரியாமை, வயிற்றுவலி, மற்றும் புற்றுநோய் போன்ற பலவியாதிகளை குணப்படுத்தும் சக்தி இதில் இருப்பதாக நவீன ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தாமரைக்கு ஆன்மீகத்தில் சிறந்த இடம் கொடுத்த நாடுகள் இந்தியா, சீனா, பண்டைய எகிப்து மட்டும்தான். அதிலும் சீனா மட்டுமே அதற்கு உரிய கவுரவத்தை இன்று வரை கொடுத்துவருகிறது.

சீன நலவாழ்வுத்துறை அமைச்சகம் தாமரை விதைகள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படலாம் என்று ஒரு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. தன்னுடைய மருத்துவ முறையை, தன்னுடைய மொழியை எதிலும் முன்னிறுத்துவதில் சீனாக்காரன் உலகிற்கே முன்னோடி. யாருக்காகவும் தனது மருத்துவ முறையை விட்டுத்தர மாட்டான். சீனாவில் சீன பாரம்பரிய மருந்துகளே எங்கும் கிடைக்கும்.

தாமரை விதைப் பருப்பில் இருக்கும் ஒரு வேதிப்பொருள், புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்க உதவும் Interleukin 10 என்ற ஒரு உயிரணு புரதத்தை தூண்டுகிறது என்று நவீன ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதுதவிர, தாமரை விதைகளில் கிருமிநாசினி, குறைந்த ரத்த சர்க்கரை, வைரஸ் எதிர்ப்பு தன்மை, கல்லீரலை பாதுகாக்கும் தன்மை, சிதைந்த புரதங்களை சரி செய்யும் தன்மை போன்றவை இருப்பதாகவும் நவீன ஆராச்சிகள் சொல்கின்றன.

தாமரை விதைகளை பிஞ்சாக இருக்கும் போது பறித்து சட்டியில் போட்டு வறுத்தால் சோளப்பொரி போல வரும். ஏனெனில் அதன் ஓடு அப்போது பட்டாணி தோல் போலவே மென்மையாக இருக்கும். அதே நேரம் தோல் நன்றாக காய்ந்த விதையில் ஓடு மிக கடினமாக இருக்கும். விதையை சுத்தியால் அடித்து உடைத்தால் மட்டுமே உடைக்க முடியும். மேலும் பிஞ்சு விதைகளில் இருந்து எடுக்கப்படும் பொரி நல்ல உணவு. ஆனால் அதில் மருத்துவகுணம் அனைத்தும் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

09/11/2022

சித்த மருத்துவத்தில் பயன்படுத்த படும் உலோகங்களில் முதன்மையான தங்கத்திலிருந்து பஸ்பமாகவும், செந்தூரமாகவும் பல மருந்துகள் செய்யப்படுகின்றன. மருந்துகள் செய்வதற்கு சுத்தமான தங்கமே பயன்படுத்தப்பட வேண்டும். வெள்ளியோ அல்லது தாமிரமோ கலந்த ஆபரணத் தங்கம் கூடாது.

தங்கத்திற்கு வெப்ப வீரியம் இருக்கிறது. இனிப்பு சுவை இருக்கிறது. ஆனால் மற்ற இனிப்பு சுவையுள்ள பொருட்களை போல இது கபத்தை அதிகரிக்க செய்யாது. சன்னி, இளைப்புநோய், சுவாச காசம்,உடல் வெப்பம், நாட்பட்ட கபம், தாது நாட்டம், கோழைக்கட்டு போன்றவற்றை நீக்கக்கூடிய மருந்துகளில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

தங்க உரம் என்னும் மருந்து நவச்சாரம்,வெண்வங்கம், கந்தகம், ரசம், போன்றவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, வெடியுப்பு திராவகத்தால் மெழுகுபோல மையாக அரைத்து, சீலைமண் செய்து வாலை இயந்திரத்தில் இருபத்தைந்து மணிநேரம் எரித்து செய்யப்படுகிறது.

பொன் அப்பிரகம் போல பளபளப்பாக இருக்கும் இந்த மருந்து ஆண், பெண் பிறப்பு உறுப்பு சார்ந்த நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் உடலை தேற்றவும், பசி உண்டாக்கவும், வீரியத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

அப்பிரகம் என்பது மைக்கா தகடு போல பளபளப்பாக, உடைய கூடியதாக இருக்கக்கூடிய ஒரு பொருள். அதாவது தங்கத்தால் செய்யப்பட்ட அப்பிரகம் போல தங்க உரம் இருக்குமாம்.

மேலும் தங்கத்தை, கந்தகம் மற்றும் ரசத்துடன் சேர்த்து செய்யப்படும் பூரணச் சந்திரோதய செந்தூரம் என்ற மருந்து இருமல், காசநோய், மலச்சிக்கல், கபம் அதிகமாவதால் வரும் கழிச்சல், செரியாமை, காய்ச்சல், வெள்ளைப்படுதல், மற்றும் மஞ்சள் காமாலை போன்ற வியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தங்க செந்தூரம் வேறு சில மருந்துகளுடன் சேர்க்கப்பட்டு, ஆட்டிசம் போன்ற நோய்களுக்கு கூட மருந்தாக பயன்படுகிறது. தங்க பஸ்பம் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. தங்க பஸ்பம் உடலை பொன் போல மாற்றுகிறது, நீடித்த ஆயுள் தருகிறது, உயிரணு உற்பத்தியை தூண்டுகிறது, உயிரணுகளின் வீரியத்தை அதிகரிக்கிறது, நரம்பு தளர்ச்சியை நீக்குகிறது என்று பல நல்ல விஷயங்கள் இருப்பதால்தான் தற்கால பிரபலங்கள் கூட அதை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

தற்காலத்தில் மட்டுமா?. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாளுக்கிய மன்னர் மூன்றாம் சோமேஸ்வர் என்பவர் கூட தங்கபஸ்பத்தை செய்து பயன்படுத்தியதோடு அதை எப்படி செய்யவேண்டும் என்று குறிப்பும் எழுதி வைத்திருக்கிறார்.

இருப்பினும், தங்கத்தை செந்தூரமாகவோ, பஸ்பமாகவோ மற்றும் போது முறையாக தகடாக்கி, சுத்தி செய்து, சொல்லப்பட்ட மூலிகை சாற்றில் நன்றாக அரைத்து, தங்கதுகள்கள் மிக நன்றாக பொடியாகும்படி செய்ய வேண்டும். அத்தனை தூரம் தங்க துகள்கள் பொடியாக மாற்றப்பட்டால் மட்டுமே உட்கொள்ளப்படும்போது, சிறுகுடலில் உறிஞ்சப்பட்டு, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று எதிர்பார்த்தது போன்ற நல்ல விளைவுகளை உண்டாக்கும். இல்லையெனில் எதிர்பாராத தீய விளைவுகளை உண்டாக்கலாம்.

15/09/2022

ஆ... தங்கம் - பகுதி 1

ஆதிகாலத்திலிருந்தே மனிதன் பயன்படுத்த கூடிய உலோகங்களில் தங்கமும் ஒன்று. இது மிக நுண்ணிய பொடிகளாக பாறைகளுடன் கலந்து கிடைக்கிறது. ஆனால் உலோக கலவையாக அல்ல. ஏனெனில் தங்கம் மற்ற எந்த வேதிப்பொருளுடனும் எளிதில் வினைபுரியாது. மணலுடன் சேர்ந்த தங்கப்பொடிகளை தண்ணீரில் ஓடவிடுவதன் மூலம் பிரித்து எடுக்க வேண்டும்.

சுத்தம் செய்யப்படாத தங்கத்தை, சிறு சிறு துண்டுகளாக்கி, புளி நீரால் கழுவ வேண்டும். பிறகு உப்பு, கந்தகியும் கலந்த செங்கல் பொடியில் இட்டு புரட்டி, பின் அதை காற்றின் உதவியுடன் பலமணி நேரம் புடமிட வேண்டும். இப்படியே 41 முறை புடமிட்டால், அந்த தங்கம் சுத்தமான பத்தரை மாற்று தங்கமாக கிடைக்கும்.

புடமிடுவதே பலமணி நேரமாம். பிறகு அதையும் 41 முறை செய்ய வேண்டுமாம். எவ்வளவு பெரிய வேலை. தற்போது தங்கத்தின் தரத்தை காரட் முறையில் அளப்பதை போல, அந்தக் காலத்தில் இருந்த முறை "மாற்று" என்பது. பத்தரை மாற்று என்பது இந்தக்கால 24 காரட் தங்கத்திற்கு இணையானது.

நவீன காலத்தில் தங்கப்பொடியை பாதரசத்துடன் கலந்து, தங்கத்தை ரசத்தில் கரைத்து, பின் அந்தக் கலவையை ஆவியாக்கி, தங்கத்தை பிரித்து எடுக்கின்றனர். வேறு ஒரு முறையில் தங்கப்பொடியை சயனைடு என்ற வேதிப்பொருளுடன் இணைய வைத்தும் பிரித்து எடுக்கின்றனர். இந்த முறையிலும் பலமுறை சுத்திகரிப்பு செய்தால் மட்டுமே தங்கம் சுத்தமான தங்கமாக நமக்கு கிடைக்கும்.

தங்கம் மிகவும் கனமான பொருள். 35 செ.மீ நீள அகல உயரமுடைய (கிட்டத்தட்ட ஒரு அடி கன சதுரம்) ஒரு தங்க கட்டி ஒரு டன் எடை இருக்குமாம். அவ்வளவு எடை.

உலோகங்கள் பொதுவாக அமிலத்தில் கரைந்து விடும். ஆனால் தங்கம் மட்டும் எந்த அமிலத்திலும் கரையாது. இராஜ திராவகம் என்னும் நைட்ரிக் அமிலம் ஒரு பங்கும் + ஹைட்ரோ குளோரிக் அமிலம் மூன்று பங்கும் கலந்த கலவையில் மட்டுமே கரையும். (இந்த பங்கு என்பது மூலக்கூறு நிறை அளவில் சொல்லப்பட்ட எடை. சாதாரண எடை அல்ல). இந்தக் கலவையை வைத்துதான் பித்தலாட்ட காரர்கள் தங்க நகைக்கு பாலிஷ் செய்து தருகிறோம் என்ற பெயரில் நகையை கொஞ்சம் கரைத்து எடுத்து சென்று விடுகின்றனர்.

தங்கத்தின் மதிப்பிற்கு ஒரு முக்கிய காரணம் அது நமது சுற்றுப்புறத்தில் இருக்கும் எந்த பொருளுடனும் எளிதில் சேராது. ரசம், சயனைடு, இராஜ திராவகம் இந்த மூன்று பொருட்களுடன் மட்டுமே சேரும். இந்த மூன்றும் நமது சுற்றுப்புறத்தில் இல்லை. சோதனை சாலைகளில் மட்டுமே இருப்பவை.

மூழ்கி விட்ட ஒரு கப்பலில் இருந்த ஒரு தங்கக்கட்டி 150 ஆண்டுகள் கழித்து, அதை கண்டுபிடித்த பொழுது அப்படியே புதிது போல இருந்ததாம். இது வரலாற்று சம்பவம். தங்கத்தை பஸ்பமாகவும், செந்தூரமாகவும், தங்க உரமாகவும் மாற்றி சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

06/09/2022

எட்டு வயதான ஒரு சிறுமிக்கு முழங்காலுக்கு கீழே ஏதோ தடிப்பு தடிப்பாக வந்தது. பிறகு அது வெடித்து புண்ணாக உருவாகிவிட்டது. தோல் மருத்துவரிடம் காட்ட, அவரும் மருந்து கொடுத்தார். சரியாகி விட்டது. பிறகு சிலநாட்கள் கழித்து கண் இமைகள் அருகில் பயங்கரமான ஊறல். சிறுமி கண்ணை கசக்கி, கசக்கி கண்களே சிவந்தது. அதற்கும் மருந்து வாங்கி போட்டார்கள் சரியானது.

அதற்கு பிறகு சில நாட்களில் அதிகமாக சளி பிடித்தது, மருந்தால் சரியானது. அதற்கு பிறகு சில நாட்களில் தொண்டை கம்மல், இளைப்பு போல மூச்சு வாங்கியது. அப்போதும் மருத்துவம்தான். அதே வீட்டில் 10 மற்றும் 5 வயதில் வேறு இரண்டு குழந்தைகளும் உண்டு. அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

பிறகுதான் காரணம் தெரிந்தது. அந்த சிறுமி எட்டு வயது வரை. ஏனோ தானோவென்று நொறுக்கு தீனியையும், வெறும் சோற்றையும் மட்டும் சாப்பிடும் பழக்கம் உள்ளவள். காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதே கிடையாது. மசாலா சேர்ந்த குழம்பு கூட அவளுக்கு கொஞ்சம் அலர்ஜிதான். அவள் தாத்தா பாட்டியின் செல்லப்பிள்ளை. அதற்கு பிறகு தந்தை ஒருநாள் குச்சியை கொண்டு வெளுத்து விட்டார். சிறுமியைத்தான்.

அந்த சிறுமிக்கு வந்த எந்த ஒரு வியாதியும் கிருமி தொற்றால் வரவில்லை. ஊட்டச்சத்து குறைபாட்டால், வைட்டமின்கள் சரியாக கிடைக்காததால் வந்த வியாதிகள். அப்படியான வியாதிகளுக்கு வெறுமனே அறிகுறிகளை கொண்டு, அந்த அறிகுறிகளை மறைக்கும் விதமாக மட்டுமே வைத்தியம் செய்தால், அந்த உடல் வேறு ஒரு பிரச்சனையை கிளப்பும். அது கலகம் செய்யும். அப்படியான நேரத்தில் நாம் மூலப்பிரச்சனை எங்கே இருக்கிறது என்று மட்டுமே கண்டறிய வேண்டும்.

இப்போது இருக்கும் பெரும்பான்மையான நோய்கள் நோய்களே அல்ல. அவை நமது உணவுமுறையில் உருவான தவறான மாறுபாடுகளால் வந்த சிக்கல்கள். உணவு முறையை சரி செய்துவிட்டால் அவை தானாகவே சரி ஆகிவிடும். அப்படியான நோய்களுக்கு மருத்துவம் உதவாது. உதவவும் முடியாது.

நமது அரசின் "மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940" ல் "பகுதி J" என்ற ஒரு பிரிவு உள்ளது. அதன் படி 51 வியாதிகள் எந்த ஒரு மருந்தாலும் குணப்படுத்த முடியாதவை என்று வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த வியாதிகளை இந்த மருந்து குணப்படுத்தும் என்று எந்த ஒரு மருத்துவரும், அல்லது மருந்து கம்பெனியும் மருந்து தயாரித்து விற்பதோ, அல்லது மருத்துவம் செய்வதோ சட்டப்படி குற்றம் என்று அந்த சட்டம் சொல்கிறது.

எய்ட்ஸ், நெஞ்சுவலி, குடல்வால் நோய், ரத்த குழாய்களில் அடைப்பு, வழுக்கை, கண்பார்வையற்ற நிலை, ஆஸ்த்மா, புற்றுநோய், கண்புரை, நரை, முடி கொட்டுதல், மரபணு கோளாறுகள், காது கேளாமை, சர்க்கரை நோய், வலிப்பு நோய், மூளைக்காய்ச்சல், தோல் நிறமூட்டுதல், க்ளாக்கோமா, தைராய்டு, குடலிறக்கம், ரத்த அழுத்தம், விரைவீக்கம், பைத்தியம், மறதி, குழந்தை வளர, ஆண் உறுப்பு வளர்ச்சி, கிட்ட பார்வை, தூரப்பார்வை, கர்ப்பப்பை சார்ந்த நோய்கள், மஞ்சள் காமாலை, கல்லீரல் சார்ந்த நோய்கள், வெண் குஷ்டம், மாரடைப்பு, பக்கவாதம், உடல் மெலிய, நரம்புத்தளர்ச்சி, மூலம், ருமாட்டிக் இருதய நோய், சொப்பன ஸ்கலிதம், முதுகுத்தண்டு பிரச்சனைகள், திக்குவாய், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், இளநரை, மற்றும் கால் ரத்த நாளங்கள் வீக்கம் (வெரிகோஸ் வெய்ன்)

என்ன மொத்த வியாதிகளையும் படித்து விட்டீர்களா? படிக்கவில்லை என்றால் நன்றாக படிக்கவும்.

கிட்டத்தட்ட நமக்கு தெரிந்த முக்கால்வாசி வியாதிகள் இதில் இருக்கின்றன. இந்த பட்டியல் உண்மையென்றால், நம்மிடம் காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி போன்ற கொசுறு பிரச்சனைகளுக்கு மட்டும்தான் சரியான மருந்துகள் இருக்கின்றன என்று அர்த்தம்.

இந்த பட்டியலை தயார் செய்தது யாரோ ஒரு அரைகுறை மருத்துவர் இல்லை. நமது இந்திய மருத்துவ அமைச்சகம். அதன்படி நாம் பார்க்கின்ற பல வியாதிகளுக்கு இன்று மருந்து என்பதே கிடையாது. சர்க்கரைவியாதி, புற்றுநோய், மாரடைப்பு, ரத்த அழுத்தம், ஆஸ்த்மா, சிறுநீரக கற்கள், மஞ்சள் காமாலை போன்ற பெரிய வியாதிகள் எல்லாம் இதில் அடக்கம்.

இந்த அறிக்கை வெறும் ஆங்கில மருத்துவத்தை மட்டும் ஆதாரமாக கொண்டு தயார் செய்யப்பட்டதா? அல்லது சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய முறைகளையும் சேர்த்து சொல்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நோய் வந்த பிறகு வைத்தியம் செய்துகொள்ளலாம் என்று இருக்கவே கூடாது. வராமலே பார்த்துக்கொள்வதுதான் சிறப்பு. "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்ற பாணியே சரி.

30/08/2022

"காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா" என்று ஒரு கவிஞன் பாடினான். எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் இந்த உடல் என்பது பொய் தான். அதாவது ஒரு நாள் அழியக்கூடியது தான். அப்படி அழியக்கூடிய உடலை அழியாமல் பாதுகாக்க, நீண்டகாலம் வாழ ஆதிகால சித்தர்கள் கண்டறிந்த அற்புதக்கலைதான் காயகல்பம்.

ஸ்தூல சரீரத்தில் உருவாகும் வியாதிகளை பற்றி, அவற்றிற்கான மருத்துவம் பற்றி எல்லாவகையான மருத்துவ முறைகளும் மிக சரியாகவே சொல்லி இருக்கின்றன. ஆனால் சூக்கும சரீரத்தை பற்றி, அங்கே வரும் சிக்கல்களை பற்றி சித்தமருத்துவம் போன்ற பழமையான மருத்துவ முறைகள் மட்டுமே கூறி இருக்கின்றன. மேலும் அலோபதி போன்ற மருத்துவ முறைகள் சூக்கும சரீரம் என்ற ஒன்றையே மறுக்கின்றன.

சில காலங்களுக்கு முன்பு, ரஷ்யாவில் ஒரு மருத்துவர் மனிதனின் சூக்கும சரீரம் (Aura) பற்றி ஆராய்ச்சி செய்தார். அப்பொழுது அவர் மனிதனின் உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நோய் உருவாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அந்தப் பகுதியின் சூக்கும சரீரம் பாதிக்க பட்டுள்ளதை கண்டறிந்தார்.

அதன் படி, மனிதனுக்கு பிற்காலத்தில் வரக்கூடிய நோய்களை பற்றி கூட அவனுடைய சூக்கும சரீரத்தை ஆராய்ச்சி செய்து கண்டறிய முடியும். அப்படியே அவனுக்கு சூக்கும சரீரத்தில் சிகிச்சையும் அளிக்க முடியும். சூக்கும சரீரம் பலமாக, ஆரோக்கியமாக இருந்தால், ஸ்தூல சரீரத்தில் பாதிப்பு வரவே வராது.

இந்த முறையில் ஆராய்ந்து, சூக்கும சரீரத்தை பலப்படுத்தி, பலப்படுத்தி மனித உடலையும், ஆயுளையும் நீட்டிக்கும் வழிமுறையைத்தான், காயகல்பம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் கண்டறிந்து வைத்தனர். காயகல்ப மருந்துகளை செய்வதும், அதை உட்கொள்வதும் மிக மிக கடினம். அதற்கு நீடித்த பயிற்சி அவசியம். குருவின் அருளும் இருக்கவேண்டும்.

நமது உடல் குறிப்பிட்ட தன்மையில், குறிப்பிட்ட தகுதியுடன் காயகல்ப மருந்துகளின் வீரியத்தை ஏற்கும் பக்குவத்துடன் இருக்க வேண்டும். அப்பொழுதே காயகல்பத்தை ஒரு மனிதன் உட்கொள்ள முடியும். இல்லையெனில் காயகல்பம் நீடித்த ஆயுளை தருவதற்கு பதிலாக, உடனடி மரணத்தை கூட தந்துவிடும்.

வடலூர் வள்ளலார், ஒரு காயகல்ப மருந்தை தயார் செய்து பயன்படுத்தி வந்தார். அந்தக் காலத்தில் இரண்டு அரைகுறை சித்தர்கள், வள்ளலாரிடமிருந்து காயகல்பம் செய்யும் முறைகளை கற்றுக்கொள்ளவேண்டும், நாம் மரணமிலா வாழ்வு பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவரிடம் சீடராக சேர்ந்து, சித்தராக பயிற்சி செய்து வந்தனர்.

ஆனால் இந்த சிறுமதியாளர்களை பற்றி, அவர்களது நோக்கங்களை பற்றி அறியாதவரா வள்ளலார்?

ஒரு நாள் அவர்கள் இருவரையும் அழைத்து, அவரிடமிருந்த காயகல்ப மருந்தை இரு விரலால் எடுத்து, ஒரு முள்ளங்கியின் மீது வைத்தார். சிறிது நேரத்தில் முள்ளங்கி உருகி, அழுகி ஓடியது. அந்த மருந்தின் வீரியத்தை முள்ளங்கியால் தாங்க முடியவில்லை. அதன் பிறகு வள்ளலார், "இப்படியே பயிற்சி பெறாத, சிறு மதியுடன் காயகல்பத்தை பயன்படுத்தினால், உடலை அழித்துவிடும்" என்று சொன்னார். பிறகு அந்த சிறுமதி சித்தர்கள் இருவரும் விடைபெற்று விலகிச் சென்றனர்.

அந்தக்காலத்தில் இருந்தவர்கள் பரவாயில்லை. நீடித்த ஆயுள் வேண்டும் என்பதற்காக மட்டுமே சித்தர்கள் ஆனார்கள். ஆனால் இன்றைக்கு காயகல்பம் பற்றியும், இரசவாதம் பற்றியும் ஆராய்ச்சி செய்கிறவர்களில் பலர் பேராசைக்காரர்கள்.

காயகல்ப மருந்து போதுமான வீரியத்துடன் உருவாகி உள்ளதா என்பதை சோதனையிடும் உரைகல் தான் தாமிரத்தை தங்கமாக்கும் இரசவாத சோதனை. ஆனால் இன்றைக்கு பலர், ஒரு இரண்டு கிலோ தங்கத்தை எப்படியாவது உழைத்து சம்பாதிக்காமல் இரசவாதத்தின் மூலம் உருவாக்கிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஆழ்ந்த சித்த மருத்துவமும், இரசவாதமும் கற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

இம்மாதிரி சித்தர்களுக்கு நாயை வாய் கட்டும் சாதாரண சித்தி கூட கிடைக்காது.

26/08/2022

பொதுவாக சூரணம், லேகியம் போன்ற மருந்துகளை ஒருவருக்கு இந்த அளவில் கொடுக்கவேண்டும் என்று சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிட்டிருப்பார்கள். அவை பெரும்பாலும் கிராம், அல்லது மில்லி லிட்டர் என்று நமக்கு புரிந்த மொழியில் இருக்காது. சித்தர்கள் காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய அளவைகளில் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதன்படி உளுந்தெடை, வராகன் எடை, குன்றி, பலம் என பல அளவுகள் உண்டு. அவற்றை நாம் கிராம், மில்லி என்ற அளவுகளில் மாற்றி புரிந்து கொள்ள வேண்டும். நெல் என்பது மிகச்சிறிய அளவு. சுமார் 32.5 மில்லி கிராம். அதிலிருந்து அடுத்தடுத்த அளவுகளை நாம் கணக்கெடுத்துக்கொள்ள வேண்டும்.

1 உளுந்து - 2 நெல் (65 மில்லி கிராம்)
1 குன்றி - 2 உளுந்து ( 130 மில்லி கிராம்)

குன்றி என்பது குன்றிமணியைத்தான் குறிக்கிறது. இது முந்தைய காலத்தில் தங்கம், வெள்ளிக்கு நிகரானது. இன்றும் கூட சில கிராமத்து தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் மிகவும் சிறந்தவர்கள் என்பதை குறிக்கும்விதமாக, "என் பிள்ளை குன்றிமுத்து மாதிரி, குப்பையில் கிடந்தாலும் குன்றிமுத்துக்கு மவுசு உண்டு" என்று கூறுவார்கள்.

1 மாஞ்சாடி - 2 குன்றி ( 260 மில்லி கிராம்)
1 வராகன் எடை - 32 குன்றி ( 4.16 கிராம்)
1 கழஞ்சு - 40 குன்றி( 5.1 கிராம்)
1 பலம் - 10 வராகன் எடை (41 கிராம்)

ஒரு பலம் என்பதற்கு சில நூல்களில் 35 கிராம் என்ற அளவும், வேறு சில நூல்களில் 41 கிராம் என்ற அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 32 குன்றி ஒரு வராகன், 10 வராகன் ஒரு பலம் என்ற கணக்கில் கொண்டால் 41 கிராம் என்ற அளவே வரும்.

வேறு ஒரு அளவீட்டு முறையில்

180 உளுந்து எடை - 1 தோலா (11.7 கிராம்)
3 தோலா - 1 பலம் (35.1 கிராம்)

என கணக்கிடப்பட்டு 35 கிராம் சொல்லப்பட்டிருக்கிறது.

இவை தவிர இன்னும் பல நிறுத்தல் அளவுகள், முகத்தல் அளவுகள் முன்பு பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை தற்போது வழக்கில் இல்லை.

23/08/2022

சித்த மருந்துகள் தயார் செய்யும் இயந்திரங்கள் - பாகம் 2

5. சுடர்த் தைல கருவி

ஒரு நீண்ட வெள்ளைத் துணியில் தைலச் சரக்கை தடவி, திரியை போல அத்துணியை மடித்து, அதை ஒரு குச்சியில் சுற்றி, பிறகு லேசாக நெய் சேர்த்து, தைலச் சரக்கு தேய்த்த துணியை தீப்பந்தம் போல எரியச் செய்ய வேண்டும். இந்த தீப்பந்தத்தை கொஞ்சம் சாய்வாக பிடித்தால், தைல சரக்கு உருகி கீழே சொட்டும். அதை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.

6. குப்பிப் புடக்கருவி

தைலம் இறக்குவதற்காக கூறப்பட்ட சரக்குகளை ஏழு துணிகளால் கட்டி, ஒரு பாட்டிலினுள் வைத்து, பாட்டிலின் கழுத்தில் இருந்து வாய்ப்பகுதி வரை கம்பி வலையை திணித்து வைத்து, வாய்ப்பகுதியையும் கம்பி வலையால் மூட வேண்டும்.

இரும்பு அடுப்பின் மேல்வைக்கப்பட்ட, ஒரு மண் தொட்டியில் அடிப்பக்கம், பாட்டிலின் தலை மட்டும் நுழையுமாறு துவாரமிட்டு, பாட்டிலை அத்துவாரத்தின் வழியாக தலைகீழாக வைத்து, எஞ்சிய சந்திற்கு மண்பூசி, பாட்டிலின் வாய்ப்பகுதிக்கு நேராக கீழே, தைலம் சேகரிக்க ஒரு சுத்தமான பீங்கான் பாத்திரத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது, மண் தொட்டியின் உட்புறம், பாட்டிலின் உடல் பாகம் மட்டும் தலைகீழாக தெரியும். அந்த பாட்டிலை சுற்றி, அரை அடி அகலம் வரை, அதே போல மேலும் எரு அடுக்கி புடமிட வேண்டும். சரக்குகள் தீய்ந்த பிறகு, தைலம் பாத்திரத்தில் இறங்கும். பாட்டிலை சுற்றி அரை அடி அகலம் வரை எருக்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதால், குறைந்தபட்சம் ஒரு அடி அகலம் இருக்குமாறு உள்ள மண் தொட்டி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

7. குழித்தைல கருவி

ஒரு மண் பானையின் அடியில் சிறிய துளைகள் சில இட்டு, அதில் சரக்கை இட்டு, வாய்ப்பகுதியில் சீலை மண் செய்து மூட வேண்டும். பூமியில் சிறு பள்ளம் தோண்டி, அதில் ஒரு பீங்கான் குடுவை ஒன்றை வைத்து, அந்தக் குடுவையின் வாயில் சரக்கு நிரப்பிய, பானையை வைத்து, காற்று புகாதவாறு, குடுவையின் வாய்ப்பகுதியும் பானையின் அடிப்பகுதியும் பொருந்துமாறு வைத்து சீலை சுற்றி மூட வேண்டும்.

இந்த மொத்த அமைப்பும் பார்ப்பதற்கு ஒரு சிறிய பானைக்கு மேலே வைக்கப்பட்ட, பெரிய பானை போல இருக்கும். இந்த அமைப்பை அப்படியே பூமிக்குள் வைக்கவேண்டும். சிறிய குடுவையின் நான்கு பக்கமும் மண் போட்டு அழுத்தி மூட வேண்டும். ஆனால் பெரிய பானையின் நான்கு பக்கமும் அரை அடி அகலத்திற்கு எரு அடுக்கி புடம் போட வேண்டும். புடம் ஆறிய பின்பு, சிறிய குடுவையில் தைலம் இறங்கியிருக்கும்.

குப்பி புடக்கருவி போன்ற அமைப்புதான் இதுவும் என்றாலும் கொஞ்சம் சிறிய வித்தியாசம். மொத்த அமைப்பும் பூமிக்குள் வைக்கப்படுவதால், தைலச் சரக்கிற்கு கிடைக்கும் வெப்பம் மிக அதிகமாக இருக்கும்.

8. செந்தூரக் கருவி ( பதங்கக் கருவி)

உயரம் குறைவாகவும், அகலம் கொஞ்சம் அதிகமாகவும் உள்ள இரண்டு சட்டிகளை எடுத்துக்கொண்டு, ஒரு சட்டியில் சரக்கை எடுத்துக்கொண்டு, மறு சட்டியை வைத்து மூடி, ஏழு முறை சீலை மண் செய்து மூடி, அடுப்பேற்றி எரிக்கவேண்டும்.

செந்தூரம் ஆகவேண்டிய சரக்குகளை இட்டால், சரக்குகள் செந்தூரம் ஆகும். பதங்கமாக வேண்டிய சரக்குகள் இட்டால் மேல் சட்டியில் பதங்கம் படிந்திருக்கும். சுரண்டிக் கொள்ளலாம். சரக்கு சரியாக செந்தூரம் ஆகவேண்டுமென்றால், காற்று புகாதவாறு சரியாக சீலை மண் செய்திருக்க வேண்டும். இல்லை என்றால் சரக்கு பஸ்பமாகிவிடும்.

19/08/2022

மருந்து செய்முறையில் அம்மி, கல்வம் போன்ற சிறு கருவிகளோடு, வேகவைப்பதற்கும், நெய் எடுப்பதற்கும், புடம் போடுவதற்கும் கொஞ்சம் சிக்கலான இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

1. அவியந்திரம்

வாய் பொருந்தக்கூடிய இரண்டு பானைகளை எடுத்துக்கொண்டு, அவற்றில் ஒரு பானையை அடுப்பில் வைத்து, தேவையான செயநீர் அல்லது தண்ணீரை பானையில் ஊற்றி, அதன் வாயை பருத்தி துணியால் மூடி கட்டி, அந்த மூடியில் அவிக்க வேண்டிய பொருளை வைத்து, மேலே இரண்டாவது பானையை கவிழ்த்து மூடி வைத்து, உள்ளிருந்து வரும் நீராவி வெளியே போகாதவாறு பானைகளின் விளிம்பை ஈரத்துணியால் மூடி, பானையில் உள்ள நீர் நான்கில் ஒன்றாக சுருங்கும் வரை சிறு தீயாக எரிக்க வேண்டும். பின்பு பானை ஆறியதும் அவித்த சரக்கை எடுத்து ஆற வைக்கவும்.

கிட்டத்தட்ட இட்லி அவிப்பது போன்ற ஒரு வழிமுறை தான். சில நேரங்களில் மட்டும், மூடியை வெறும் ஈரத்துணியால் மூடாமல், சீலை மண் செய்து மூடவேண்டும். சீலை மண் செய்யும்போது இரண்டு நீராவி முழுவதுமாக உள்ளே தங்கி விடும். இந்த இயந்திர அமைப்பு கிட்டத்தட்ட ஒரு பிரஷர் குக்கர் போன்ற அமைப்பாக மாறிவிடும்.

2. துலாயந்திரம்

சரக்கை பருத்தி துணியில் முடிந்து, அதை ஒரு கயிற்றில் கட்டி, மண்பானையில் உள்ள செயநீரில் லேசாக படும்படியாக, பானையின் வாய்ப்பகுதியில் வைக்கப்பட்ட ஒரு மரக்கட்டையில் கயிற்றின் மறுமுனையை கட்டி தொங்க விட வேண்டும். பின்பு பானையை மூடி, நீர்ப்பொருள் நன்றாக வற்றும் வரை எரிக்கவும்.

நேர்வளம், சேரான்கோட்டை, பூரம் போன்ற ஒரு சில சரக்குகள் செயநீரில் மூழ்கவைத்தும், வீரம் போன்ற ஒரு சில சரக்குகள் செயநீரில் படாமல் நீராவி மட்டும் படும்படியாகவும் வேகவைக்கப்படவேண்டும்.

3. தூப இயந்திரம்

அவியந்திரம் போன்ற அமைப்புதான் தூப இயந்திரமும். ஆனால் சிறு வித்தியாசம். அவியந்திரத்தில் செயநீர் அல்லது ஏதாவது ஒரு நீர்பொருள் பானையில் ஊற்றப்பட்டு அதனுடைய ஆவியால் சரக்கு பக்குவமாக வேகவைக்கப்படும். ஆனால் தூப இயந்திரத்தில், செயநீருக்கு பதிலாக கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, சாம்பிராணி போன்ற தூப சரக்குகள் வைக்கப்படும். அதாவது புகைவரும் சரக்குகள் .

பின்பு அடுப்பேற்றி எரிக்கும்போது, தூபச்சரக்கினால் வரும் புகை கொண்டு துணியாலான மூடியில் உள்ள தூபமிடப்படும் சரக்கு பக்குவமாக வேகவைக்கப்படும்.

4. மெழுகுத் தைல இயந்திரம்

கழுத்து நீண்ட, ஒரு பக்கம் விரல் நுழையும் படியாக துளையிடப்பட்ட பெரிய பானையும், அதன் வாய்ப்பகுதியில் சரியாக பொருந்தும்படியான கழுத்து நீண்ட, ஒரு பக்கம் விரல் நுழையும் படியாக துளையிடப்பட்ட ஒரு சிறிய பானையும் எடுத்துக்கொண்டு, பெரிய பானையின் பக்கத்துளை மேல்நோக்கி இருக்குமாறு அதை சாய்வாக ஒரு அடுப்பில் வைத்து, அதன் வாய்ப்பகுதியில் சிறிய பானையை மூடியை போல வைத்து ஏழு முறை ஒன்றன்மேல் ஒன்றாக சீலைமண் செய்து மூடவேண்டும். சிறிய பானையின் பக்கத்துளை கீழ்நோக்கி இருக்கவேண்டும்.

சிறிய பானையின் பக்கத்துளையின் கீழ் தைலம் சேகரிக்க ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். பெரிய பானையில் நான்கில் ஒரு பங்கு அளவே இருக்கும்படியாக சிறிய பானை இருக்கவேண்டும். பெரிய பானையில் தைல சரக்கை இட்டு, பானையின் மேலே இருக்கும் சிறுதுளையை ஒரு ஓட்டினால் மூடி, சாணியை அதன் மேல் அப்பி வைக்க வேண்டும். ஏனெனில் ஆவி வெளியே போகக்கூடாது.

சிறிய பானையில் கீழ்நோக்கி ஒரு துளை இருக்கிறதல்லவா. அந்த துளை வழியாக குச்சிகளை செருகி அந்த குச்சிகளின் பலத்தில் பானை நிற்கும்படியாக, அல்லது வேறு ஒரு மேஜை போன்ற அமைப்பை செய்து சிறிய பானை கீழே விழாமல் இருக்க வைக்க வேண்டும்.. குச்சிகள் எப்போதும் அவசியம். குச்சிகளின் அடியில் தைலம் சேகரிக்க ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும்.

சிறிய பானையை குளிர்விக்க அதன் மேல் ஈரத்துணியை போட வேண்டும். ஈரம் காய்ந்தால் வேறு துணி மாற்றவேண்டும். அடுப்பு எரிக்க எரிக்க, பெரிய பானையில் இருக்கும் தைலம் சரக்குடன் சேர்ந்து ஆவியாகி, சிறிய பானைக்கு வரும். அப்போது அது கொஞ்சம் குளிர்ந்து மீண்டும் தைலமாகி, குச்சிகள் வழியாக தைலம் சேகரிக்கும் பாத்திரத்தில் வந்து சேரும். தைலத்துடன் சேர்ந்து கொஞ்சம் தைலம் சார்ந்த புகையும் வரும்.

தைல புகை அடுப்பிலிருந்து வரும் புகையுடன் சேரக்கூடாது. அதற்காகவே கழுத்து நீண்ட பானை என்று சொல்லி இருக்கிறார்கள். ஒருவேளை தைலப்புகை, அடுப்பு புகையுடன் சேர்ந்தால் தீப்பற்றி, பானை வெடித்து, மருந்து தயாரிப்பவர் மீது தீ பற்ற வாய்ப்புள்ளது.

17/08/2022

சித்த மருத்துவ மருந்துகளின் வகைகள் தொடர்ச்சி...

சித்தமருத்துவ வழக்கத்தில் மருந்து வகைகளின் பெயர்களை குறிப்பிடும்பொழுது தைலம், சூரணம், கஷாயம் என்று பலவாறாக குறிப்பிடுவர். பெரும்பாலும் சூரணம், தைலம் என்ற சொற்கள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால் இது போல முப்பதுக்கும் மேற்பட்ட மருந்து வகைகள் சித்த மருத்துவத்தில் உண்டு. இந்த வகைகள் அனைத்தும் மருந்தின் தோற்றம், செய்முறை போன்றவற்றை கொண்டு வகைப்படுத்தப்பட்டவை.

17. கடுகு - சரக்குகளை நெய்யுடன் சேர்த்து காய்ச்சி, சரக்குகள் திரண்டு வரும்போது, அதை மட்டும் எடுத்து வைத்துக்கொள்வதாகும். கடுகை உள்ளுக்குள் கொடுக்கவும், மீதமான எண்ணையை மேலே பூசவும் பயன்படுத்துவர். கிட்டத்தட்ட வெண்ணெய் போன்ற செய்முறை தான். ஆனால் மத்திட்டு கடைவது கிடையாது.

18. பக்குவம் - சரக்குகளை தண்ணீர் அல்லது அரிசி கழுவிய நீரில் ஊற வைத்து, சரக்குகளின் பாகங்கள் மென்மையான பின் இலைச்சாறு, கஷாயம், மோர் போன்றவற்றில் போட்டு, மற்ற சரக்குகளின் பொடியை தூவி பக்குவம் செய்வது. வேகவைத்தல் பொதுவாக கிடையாது.

19. தேனூறல் - இஞ்சி, நெல்லிக்காய், கடுக்காய் போன்றவற்றை நீரில் ஊறவைத்து, பின்பு ஊசி குதி, தண்ணீர் இறங்கும்படியாக உலரவைத்து, அதற்கு பிறகு தேனில் ஊறவைப்பதாகும். தேனில் ஊறவைக்க, முதலில் அந்த சரக்கின் சாறு வடிக்கப்பட வேண்டும். எனவேதான் தண்ணீரில் ஊறவைத்து, பின் காய வைப்பது.

20. தீநீர் - சரக்குகளை சேர்த்து வாலை இயந்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பேற்றி எரித்து இறக்குவது தீநீர் ஆகும். இதே முறையில் உப்பு வகைகளை வாலை இயந்திரத்தில் இட்டு எரித்து இறக்குவது "புகைநீர்" அல்லது "திராவகம்" ஆகும்.

21. மெழுகு - இரசகலப்புள்ள சரக்குகளை, இலைச்சாறுகள் அல்லது தேனில் அரைத்து மெழுகுப் பக்குவமாக எடுத்து வைத்துக்கொள்வது அரைப்பு மெழுகு என்றும், சரக்குகளை மூலிகைகளில் அல்லது எண்ணெய்களில் சுருக்கு கொடுத்து, அவை இளகி மெழுகு பதமாகும்போது, எடுத்து குழிக்கல்லில் இட்டு அரைத்து எடுத்துக்கொள்வது சுருக்கு மெழுகு என்றும் இரண்டு வகைப்படும்.

22. குழம்பு - இலைச்சாறுகளை ஒரு சட்டியில் இட்டு, சர்க்கரை, சூரணப்பொடிகள் சேர்த்து காய்ச்சி குழம்பு பக்குவத்தில் எடுத்து வைத்துக்கொள்வதாகும். இளகம் செய்வது மாதிரியான அதே வழிமுறைதான்.

23. பதங்கம் - ஆவியாக கூடிய, ரசகலப்புள்ள பொருட்களை மண் சட்டியில் உப்பு, செங்கல்தூளை மேலும் கீழும் இட்டு, அதற்கிடையில் வைத்து, சீலை மண் செய்து மூடி, அடுப்பேற்றி எரித்து, மூடியான சட்டியில் இருக்கும் பதங்கமான பொருளை வழித்து எடுத்துக்கொள்வது.

இம்முறையில் ஒரு சில மருந்துகளை பலமணி நேரம் வரையிலும், வேறு சில மருந்துகளை நாளுக்கு சிலமணி நேரம் வீதம், பல நாட்களும் எரித்து தயார் செய்ய வேண்டியிருக்கும்.

24. செந்தூரம் - உலோகங்கள் அல்லது பாஷாணங்களை, இலைச்சாறு அல்லது குறிப்பிடப்பட்ட செயநீரில் அரைத்தோ, புடம்போட்டோ, வறுத்து அரைத்தோ, எரித்தோ, வெய்யிலில் காயவைத்தோ சிவக்கும்படி செய்து எடுத்துக்கொள்வது. பெயருக்கு ஏற்ப பொருள் நன்றாக சிவக்கும்படி செய்ய வேண்டும்.

25. பற்பம் - உலோகங்கள் அல்லது பாஷாணங்களை, குறிப்பிடப்பட்ட செயநீரில் அரைத்து புடம்போட்டோ, வறுத்து எரித்தோ வெளுக்கும்படி செய்துகொள்வது. கிட்டத்தட்ட சாம்பல் ஆக்குவது போலத்தான். அதனால் இதற்கு நீறு, வெண்ணீறு என்று வேறு சில பெயர்களும் உண்டு.

பொதுவாக எல்லா பற்பங்களும் வெண்ணிறத்தில்தான் இருக்கும். விதிவிலக்காக தங்கபற்பம் மட்டும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்

26. கட்டு - பாஷாணங்களை குறிப்பிட்ட செயநீர் கொண்டு சுருக்கு கொடுத்து கட்டி எடுத்துக்கொள்வதாகும்.

27. உருக்கு - உலோகங்கள் அல்லது பாஷாணங்களை மற்ற சரக்குகளுடன் கூட்டி, மூசையில் இட்டு, சீலைமண் செய்து மூடி, இயற்கை கரியிட்டு ஊதி, இளக செய்து ஆறவிட்டு எடுப்பது. இதன் மூலம் உலோகங்கள் சுத்தி செய்யப்படுகின்றன.

28. களங்கு - பாதரசம் போன்ற சரக்குகளை குறிப்பிடப்பட்ட செயநீர் கொண்டு, சுருக்கு கொடுத்து, புடமிட்டு, கரியிட்டு ஊதி எரித்து, மணியாக்கி, தங்கமும், நாகமும் கூடி ஆறாவது எடுத்துக்கொள்வது ஆகும்.

29. சுண்ணம் - ரசத்தை அல்லது பாஷாணங்களை, செயநீர் கொண்டு, கல்வத்தில் இட்டு அரைத்து, உருட்டி, உலர்த்தி, மூசையில் இட்டு, சீலை செய்து உலர்த்தி, கரி நெருப்பில் இட்டு ஊதி எடுத்து, ஆறவைத்து சாம்பல் போல செய்துகொள்வது. ஆனால் இது நீறு அல்ல.

30. கற்பம் - தாவர பொருட்களை அல்லது மற்ற சத்துக்களையாவது கூறப்பட்டுள்ள பத்தியபடி, அளவுப்படி உண்டுவருவது. இது வெறும் மருந்து அல்ல. மருந்தோடு சேர்ந்த செயல்முறையும் ஆகும். இதை செய்வதும், செய்ததை உண்பதும் சித்தி பெற்ற வைத்தியர்களால் அல்லது சித்தர்களால் மட்டுமே முடியும்.

31. சத்து - காந்தம், இரும்புத்தூள், மற்ற உபரசங்களோடு பாஷாணங்களை சேர்த்து, வெண்கரு செயநீரால் அரைத்து, உலர்த்தி, மூசையில் இட்டு, சீலைமண் செய்து, மூன்று முறை ஊதி எடுத்து, பின் தங்கம், ரசம், கந்தகம் சேர்த்து அரைத்து குப்பியில் இட்டு எரித்து செந்தூரம் ஆக்கி கொள்வது.

32. குளிகை - வாலை ரசத்தை சரக்குகளால் கட்டி, மணிமணியாக செய்து கோர்த்துக்கொள்வது.

13/08/2022

சித்தமருத்துவ வழக்கத்தில் மருந்து வகைகளின் பெயர்களை குறிப்பிடும்பொழுது தைலம், சூரணம், கஷாயம் என்று பலவாறாக குறிப்பிடுவர். பெரும்பாலும் சூரணம், தைலம் என்ற சொற்கள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால் இது போல முப்பதுக்கும் மேற்பட்ட மருந்து வகைகள் சித்த மருத்துவத்தில் உண்டு. இந்த வகைகள் அனைத்தும் மருந்தின் தோற்றம், செய்முறை போன்றவற்றை கொண்டு வகைப்படுத்தப்பட்டவை.

1. சாறு - இலை, வேர், பட்டை, பூ, காய் போன்ற ஏதாவது தாவர பாகத்தை எடுத்து இடித்து அல்லது அரைத்து சாறு பிழிந்து எடுத்துக்கொள்வது ஆகும். ஒரு பொருளை பிட்டவியல் செய்து பிழிந்து வைத்து கொண்டாலும் அதுவும் சாறுதான்.

2. சுரசம் – இலை, வேர், பட்டை, பூ, காய் போன்ற தாவர சரக்குகளை எடுத்து இடித்து அல்லது அரைத்து, பின் சாறு பிழிந்து அதை மண் சட்டியில் இட்டு கொதிக்கவைத்து எடுத்து கொள்வது ஆகும்.

3. குடிநீர் - தாவர பாகங்களை எடுத்து, ஒன்றிரண்டாக இடித்து சொல்லப்பட்ட அளவு தண்ணீர் இட்டு இரண்டுகொன்றாக அல்லது நான்குக்கு ஒன்றாக என சொல்லப்பட்டபடி சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்வது ஆகும். இதற்கு இன்னொரு பெயரே கஷாயம். சுரசத்தை போல் இல்லாமல் இது வெகுநேரம் கொதிக்கவைக்கப்பட வேண்டும்.

4. கற்கம் - தாவர பாகங்களை எடுத்து தூய்மையான இரும்புத்தூள் சேர்த்து கல்வத்தில் அரைத்து கட்டியாக எடுத்து வைத்துக்கொள்வது ஆகும். இது மருந்து செய்முறையில் வரும் ஒரு இடைச்சரக்கு. இறுதியான மருந்து அல்ல.

5. உட்களி - மேல் பகுதியில் கொஞ்சம் வறட்சியுடனும், உள்ளே ஈரப்பதத்துடனும் இருப்பது. அரிசி, உளுந்து போன்ற நேரடியாக சாப்பிடும் பொருட்களை எடுத்து மாவாக அரைத்து, சர்க்கரை, நீர் சேர்த்து கரைத்து, சட்டியில் ஊற்றி களி போன்ற பதம் வரும் வரை வேகவைத்து, பின் நெய் சேர்த்து பக்குவம் செய்து வைத்து கொள்வது. சாதாரண கேழ்வரகு களி, உளுந்தங்களி செய்யும் அதே வழிமுறைதான். மருந்து மருந்தை போல தெரியாமல் உணவை போலவே இருக்கும்.

6. அடை - அரிசி மாவுடன் கீரை போன்ற இலை வகைகளை சேர்த்து அரைத்து பணியார கல் அல்லது தோசைக்கல்லில் நெய் தடவி தோசை அல்லது பணியாரம் போல சுட்டு எடுத்துக்கொள்வதாகும்.

7. சூரணம் - தாவர சரக்குகளை எடுத்து நன்றாக உலர்த்தி, தனித்தனியாக இடித்து அல்லது அரைத்து நன்றாக பொடியாக்கி, தேவையான அளவு எடுத்து கலந்து வைத்து கொள்வதாகும். பொடியாக அரைத்த பின்பே சரக்குகள் கலக்கப்பட்ட வேண்டும். மேலும் சூரணங்கள் கலக்கப்பட்ட பின்பு, சூரணத்தூய்மை செய்து பின் அவற்றை பயன்படுத்துதல் நன்று.

சூரணத்தை தூய்மை செய்ய, அதை பசும்பால் விட்டு கட்டியாக பிசைந்து, பிட்டவியல் செய்து, பின்பு அப்பிட்டை வெய்யிலில் உலர்த்தி மறுபடியும் இடித்து சலித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

8. பிட்டு - சூரணம் செய்யப்பட்ட பொருட்களை, பால் சேர்த்து பிசைந்து பிட்டவியல் செய்து, அதை அப்படியே வெல்லம் சேர்த்து சாப்பிடுவது ஆகும்.

9. வடகம் - சூரணங்களை பிட்டவியல் செய்த பின்பு, பிட்டை மீண்டும் இடித்து பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் உலர்த்தி வைத்து கொள்வது ஆகும்.

10. வெண்ணெய் - சூரணங்களை இரும்பு சட்டியில் இட்டு, இரண்டு பங்கு பசுநெய் சேர்த்து, சூரணங்கள் நெய்யுடன் நன்றாக கலக்கும் வரை கொதிக்க வைத்து, பின் அதை தண்ணீரில் இட்டு, மத்து வைத்து கடைந்து எடுத்து வைத்துக்கொள்வதாகும்.

11. மணப்பாகு - சரக்குகளின் சாறு அல்லது குடிநீரை எடுத்து மண் சட்டியில் ஊற்றி தகுந்த அளவு கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து கிளறி, வேகவைத்து, மணம் வரும் பக்குவத்தில் இறக்கி, சில சூரணங்களை சேர்த்து கிளறி ஆற வைத்துக்கொள்வதாகும்.

12. நெய் - பசு நெய்யுடன் சாறு, குடிநீர், கற்கம் வகை மருந்துகளை சேர்த்து மண் சட்டியில் ஊற்றி, நெய் பக்குவத்தில் காய்ச்சி இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்வதாகும்.

கற்கம் வகை மருந்துகளில் தூய்மை செய்த இரும்புத்தூள் இருக்கும் என்பதை ஏற்கனவே கண்டோம். அதை அப்படியே சாப்பிட முடியாது. மேலும் அது நெய் வகை மருந்தாக மாற்றப்படும் பொழுது நன்றாக வடிகட்டபட வேண்டும்.

13. இரசாயனம் - சரக்குகளை சூரணம் செய்து, சர்க்கரையும் நெய்யும் தேவையான அளவு சேர்த்து, பசை போல பிசைந்து வைத்துக்கொள்வதாகும். இது அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியது. வேகவைத்தால் கிடையாது.

14. இளகம் - சாறு, குடிநீர் வகை மருந்துகளுடன் சர்க்கரை சேர்த்து சிறு தீயாக எரித்து வேகவைத்து, சாறு சுருங்கிய பின் சூரணங்களை தூவி கிளறி, பின்பு தேனும், அதன் பின் நெய்யும் விட்டு கிளறி பக்குவமாக எடுத்து வைத்து கொள்வதாகும்.

மணப்பாகு செய்வது போலவே செய்முறை என்றாலும் தேனும் நெய்யும் இங்கே கூடுதலாக சேர்க்கப்படுகின்றன. மேலும் இது மணப்பாகுவை விட சற்று கட்டியாக இருக்கும். இந்த இளகம் என்ற வார்த்தையே மருவி பின்னாளில் லேகியம் என்றானது.
வேறு ஒரு முறையில் சாறு, குடிநீர் வகை மருந்துகள் இல்லாமல் வெல்லம், தண்ணீர், பசும்பால் இட்டு காய்ச்சி, பின் சூரணங்களை இட்டு கிளறி, அதன் பின் தேனும், நெய்யும் விட்டு கிளறி பக்குவமாக எடுத்து வைத்து கொள்வதும் சித்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

15. எண்ணெய் - நாம் பொதுவாக எல்லா தாவர நெய்களையும் எண்ணெய் என்றே அழைக்கிறோம். ஆனால் எள் + நெய் = எண்ணெய் என்பதே பழந்தமிழர் வழக்கம். எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய்யிற்கு மட்டுமே எண்ணெய் என்ற சொல் பொருத்தமானது.

அதன்படி எள் நெய், தேங்காய் நெய், கடலை நெய், ஆமணக்கு நெய், பசு நெய் என்று குறிப்பிடுவதே சரியானது. வடமொழியில் "திலம்" என்பது எள். அதன்படி அவர்கள் எள் நெய்க்கு வைத்த பெயர் "தைலம்". இப்படியே ஏதாவது ஒரு நெய் கொண்டு செய்யப்படும் அதிக நீர்த்த நிலை மருந்து வகைகளுக்கு "நெய்" அல்லது "தைலம்" என்ற பெயர் வழங்கப்படுகிறது.

16. மாத்திரை - சரக்குகளை இலைச்சாறு அல்லது குடிநீர்களை கொண்டு அரைத்து, தேவையான அளவு எடுத்து உருட்டி, காய வைத்து எடுத்துக்கொள்வதாகும். பொதுவாக மாத்திரை அளவில் உருண்டையாக உருட்டுவதால் மாத்திரை என்ற பெயரே வைக்கப்பட்டது.

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Address


Wholesale Food Grain Market, Koyambedu
Chennai
600107