11/03/2022
Ihsan Academy
Islamic Educational Institution
11/03/2022
21/04/2021
கண்குளிர்ச்சியான பிள்ளைகள்
பதிவு எண் : 6
பயனுள்ள கல்வி என்றால் என்ன? அதை எப்படி நம் பிள்ளைகளுக்கு கொடுப்பது? அதை ஏன் கொடுக்க வேண்டும்? என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.
இந்த பயனுள்ள கல்வியை கற்பதன் மூலம் நன்மை எது? தீமை எது? உண்மை எது? பொய்மை எது? ஒழுக்கம் எது? ஒழுக்கமின்மை எது? இறைவனால் அனுமதிக்கப்பட்டது எது? தடுக்கப்பட்டது எது? என்பதை பகுத்தறிந்து புரிந்துக்கொள்ளும் பக்குவத்தை நம் பிள்ளைகள் அடைந்திருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்.
பகுத்தறிந்து புரிந்துக்கொண்டால் மட்டும் போதுமா? அதை தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டுமே!
தான் கற்றதை தனது வாழ்க்கையில் கடைப்பிடிக்க (அமலாக்க), அதற்கேற்ற சூழலை பெற்றோர்தான் அமைத்துத் தர வேண்டும்.
நல்ல சூழலை அமைத்துத் தருவது பெற்றோரின் மிகப்பெரிய பொறுப்பு. முக்கியமான கடமை.
இறைவன் அனுமதித்ததை ஏற்று, தடுத்ததைவிட்டு தவிர்ந்துக் கொள்ள நம் பிள்ளைகளுக்கு வாயளவில் மட்டும் போதிக்காமல் அதற்கேற்ற நேர்மறையான குடும்பச்சூழலை உருவாக்கித் தர வேண்டும்.
சூழலை எப்படி உருவாக்குவது?
"நம் குழந்தைகளிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதன்படி நாம் வாழ்ந்திட வேண்டும்."
குழந்தைகள் பெற்றோரிடமிருந்து தான் அதிகமாக கற்கிறார்கள்.
ஐந்து வேளை தொழுகையை கடைப்பிடிக்கும் குடும்பத்தில் தவழும் குழந்தைக்கூட குறித்த நேரத்தில் முஸல்லாவில் அமர்வதை பார்க்கலாம்.
டீவி நாடகங்களை தவரவிடாமல் பார்க்கும் வீட்டில் குழந்தைகளே குறித்த நேரத்தில் டீவியை போட்டு பெற்றோருடன் உட்கார்ந்து பார்க்கிறார்கள். அதில் வரும் கதாபாத்திரத்தின் பெயரையும், அதில் நடந்த முக்கியமான கட்டங்களையும் ஒப்பிப்பார்கள். இந்த அவலநிலையை பல குடும்பங்களில் பார்க்கிறோம்.
எனவே நம் குழந்தைகளை மூஃமின்களாக ஆக்கப்போகிறோமா அல்லது பித்னாவாக மாற்றப்போகிறோமா என்பது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.
அதனால்தான், "இயற்கை மார்க்கத்தில் (ஃபித்ரா) பிறக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் தான் திசைமாற்றி விடுகிறார்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்படியானால், குழந்தைகளின் தற்போதைய நிலைக்கு பெற்றோராகிய நீங்கள் தான் பொறுப்பு.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல் உபதேசங்களை போதிப்பதற்கு முன் நாம் அதன்படி நடக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், முதலில் நாம் மாறவேண்டும். மாற்றத்தை தன்னிடமிருந்து துவங்க வேண்டும்.
"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்திற்குரியது."
- 61 : 2, 3
எனவே, இறைவழிகாட்டுதலின்படி பெற்றோர்களாகிய நாம் வாழவேண்டும்.
அந்த சூழலை பிள்ளைகளுக்கு அமைத்துத் தரவேண்டும். அவர்களையும் அவ்வாறு வாழச்செய்ய வேண்டும்.
இறுதியாக பெற்றோர்கள் செய்ய வேண்டியவை :
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு,
1. பயனுள்ள கல்வியை (தேடி முயற்சி செய்து) கொடுக்க வேண்டும்.
2. ஒழுக்கம், நற்பண்புகள், இறுதி இலக்கான இறைவனுக்கு சரணடைதல் (அந்த கல்வியின் மூலமே குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும். அப்படிப்பட்ட கல்வியாக அது இருக்க வேண்டும்) இதை பெற்றோர்கள் தொடர்ந்து எடுத்துரைத்து, ஞாபகமூட்டி, வலியுறுத்தி வர வேண்டும்.
3. குழந்தைகள் தான் கற்றதை தனது வாழ்க்கையில் செயல்படுத்தி கடைப்பிடிக்கும் சூழலை பெற்றோர்கள் அமைத்துத் தரவேண்டும்.
இவ்வாறு நம் பிள்ளைகளுக்கு பயனுள்ள கல்வியையும் கொடுத்து, அதன்படி ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் கடைபிடிக்க வைத்து, நல்ல சூழலையும் அமைத்துக் கொடுத்து வளர்த்து வந்தால் அந்த பிள்ளை எப்படிப்பட்ட பிள்ளையாக வளர்ந்துவரும் என்று கற்பனை செய்து பாருங்கள்!
"அப்படிப்பட்ட பிள்ளையாக என் பிள்ளையை நான் வளர்த்தெடுக்க வேண்டும்" என்கிற நிய்யத் இன்றே வையுங்கள். அல்லாஹ்விடம் அதற்காக அதிகம் துஆ செய்யுங்கள்.
நம்பிள்ளைகள் நமக்கு கண்குளிர்ச்சியான பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்தித்து இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.
🔆 அல்ஹம்துலில்லாஹ் 🔆
🔆🔅🔆🔅🔆🔅🔆🔅🔆
Ihsan Academy
WhatsApp : 91-7530004565
இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு(Islamic Parenting), பிள்ளைகளின் திறன் மேம்பாடு (Skill Development), ஆளுமை வளர்ச்சி (personality development) பற்றிய தகவல்களை தொடர்ந்து பெற கீழே உள்ள குழுமத்தில் இணையவும்.
WhatsApp:
https://chat.whatsapp.com/Gv6yZ0cccDoK7RxsdDoVAx
Telegram :
https://t.me/joinchat/x4o8yfGWcNdjZGE1
Blog :
https://ihsanacademy-india.blogspot.com/
Facebook :
https://www.facebook.com/Ihsan-Academy-100503915514470/
Ihsan Academy WhatsApp Group Invite
19/04/2021
கண்குளிர்ச்சியான பிள்ளைகள்
பதிவு எண் : 5
இறுதி இலக்கு (Ultimate Goal) :
நம் வாழ்க்கையின் இறுதி இலக்கு அல்லாஹ்விற்கு அடியானாக, சரணடைந்தவனாக இருப்பதே.
எவர் பயனுள்ள கல்வியை அதிகமதிகம் கற்கிறாரோ அவர் சிறந்த அடியானாக இருப்பர்.
நம் வாழ்க்கையில் நாம் செய்யும் எல்லாச் செயல்களும், பேசும் எல்லா சொற்களும், சிந்திக்கும் எல்லா எண்ணங்களும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நமக்கு ஏற்படுத்துகிறதா என்பதை நாம் உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
நாம் கற்கும் கல்வி நம்மை அல்லாஹ்வின் அடிமையாக மாற்ற வேண்டும். அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தர வேண்டும். நம் இறுதி இலக்கை அடையச் செய்கிற எல்லாக் கல்வியுமே பயனுள்ள கல்விதான்.
கல்வியின் மூலாதாரம்:
அறிவின் மூலாதாரங்கள் இரண்டு
1. வஹீ - இறைவழிகாட்டல் (Revealed Knowledge)
- முதன்மையான மூலாதாரம் (Primary Source)
2. அக்ல் ( intellect / reason / mind ) - மனிதனின் பகுத்தறிவு (Acquired Knowledge)
இரண்டாம்நிலை மூலாதாரம் (Secondary Source)
1. வஹீ :
"இறை வழிக்காட்டுதலே" முதன்மையான அறிவு (Primary Knowledge).
"இறையை அறிதலே" முழுமையான அறிவு.
கல்வியை கற்றுக்கொள்ள முதல் வழி நபி(ஸல்) அவர்கள்தான்.
வஹியின் மூலம் நபி(ஸல்) அவர்கள் எவற்றைப் பெற்றார்களோ அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்கு குர்ஆன், ஹதீஸை அதிகமதிகம் படிக்க வேண்டும்.
"எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கட்டுப்பட்டு நடக்கிறாரோ அவர்தான் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டார்..." - 4:80
"அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள்புரிந்திருக்கிறான்.அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான்.அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக்கொடுக்கிறார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்." - 3:164
2. அக்ல் :
அக்ல் எனப்படும் மனித பகுத்தறிவின் வெளிப்பாட்டை இஸ்லாம் புறக்கணிப்பதில்லை. அறிவியல், மருத்துவம், கணிதம் போன்ற எல்லாத் துறைகளையும் இஸ்லாம் ஏற்றுக்கொள்வதோடு அதை கற்க ஊக்கப்படுத்தவும் செய்கிறது. குர்ஆனில் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு ரீதியான கற்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வசனங்களைக் காணமுடியும்.
"ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று !"
" மேலும், வானத்தை பார்க்கவில்லையா, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று!"
" மேலும், மலைகளை பார்க்கவில்லையா, அவை எவ்வாறு ஊன்றப்பட்டுள்ளன என்று! "
" மேலும், பூமியை பார்க்கவில்லையா, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று !"
-88: 17-20
"வானங்களையும் பூமியையும் உங்கள் படிப்பினைக்காக படைத்தோம்" என்கிறான் அல்லாஹ்.
முகடான வானம், திருப்பி அனுப்பும் வானம், இரும்பை அனுப்பியது, பூமி உருண்டை, ஈர்ப்பு சக்தி, விண்வெளிப் பயனம், கடல் அலைகள், அணு ஆயுதம், காற்று, கோள்கள், மேலும் இன்று கண்டுபிடித்த குளோனிங் பற்றியும் திருக்குர்ஆன் பேசக் காரணம் என்ன?
வெறும் வணக்க வழிப்பாட்டை மட்டும் பேசிவிட்டு செல்லாமல் அறிவியல், கணிதம், பொருளாதாரம், சைக்காலஜி, சட்டம் என்று அனைத்து துறையைப் பற்றியும் இஸ்லாம் பேசுவதற்கு காரணம், மனிதனின் சிந்தனைக்கும், ஆய்வு ரீதியான கற்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. மனிதனுக்கு மார்க்க கல்வி மட்டும் போதாது உலகக் கல்வியும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ளாவிட்டால் அல்லாஹ்வின் வல்லமையை பற்றி எப்படி நாம் தெரிந்துக்கொள்ள முடியும்?
படைப்புகளைப் பற்றி எவ்வளவு ஆழமாக தெரிந்துக்கொள்கிறோமோ அவ்வளவு ஆழமாக படைத்தவனின் ஆற்றலையும் வல்லமையையும் உணர முடியும். அப்போதுதான் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் இருந்தால்தான் கட்டுப்பட முடியும். இறைவனுக்கு கட்டுப்படுதலே இஸ்லாம். சரணடைவதே இஸ்லாம்.
பயனுள்ள கல்வி:
மார்க்க கல்வி, உலக கல்வி என்று தனித்தனியே இல்லாமல், இரண்டையும் ஒன்றிணைத்த கல்வியாக நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும்.
(அதாவது வஹி அடிப்படையிலான கல்வி மற்றும் அக்ல் அடிப்படையிலான கல்வி)
அதில் அக்ல் அடிப்படையிலான செய்தி மார்க்கத்திற்கு முரணாக இருந்தால் அதை புறக்கணித்துவிட வேண்டும். அறிவின் மூல ஊற்று (primary source) இறைவழிகாட்டுதலே.
இஸ்லாம் என்று தனி பாடமாக மட்டும் இல்லாமல் நாம் எதைக் கற்றாலும் அதில் இஸ்லாம் இருக்க வேண்டும். இயற்பியல்,வேதியியல், உயிரியல், நிலவியல் என்று எதைக் கற்றாலும் அதை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். மனிதனின் கண்டுபிடிப்பையும், அதைப்பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்றும் ஒருசேரக் கற்க வேண்டும்.
உதாரணமாக, மலையை பற்றிய பாடமாக இருந்தால், அறிவியல் மலையைப் பற்றி என்னவெல்லாம் கூறுகிறது என்பதோடு இஸ்லாத்தில் மலையைப் பற்றி என்னவெல்லாம் கூறப்பட்டிருக்கிறது என்பதையும் ஒன்றிணைத்து கற்க வேண்டும். பாடத்திட்டம் அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் படைப்புகளைக் கொண்டு படைத்தவனை அறிய முடியும்.
அப்படிப்பட்ட கல்விதான் முழுமையான கல்வியாக இருக்க முடியும். இந்த கல்விதான் நம் பிள்ளைகளின் இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும். இதுதான் பயனுள்ள கல்வி.
இப்படி ஒரு கல்வியை நம் பிள்ளைகளுக்கு அளித்தால் இறுதி இலக்கை சுலபமாக அடைந்துவிடுவார்கள். சிறந்த அடியானாக, எல்லா நிலையிலும் இறைவனுக்கு சரணடைந்தவனாக நம் பிள்ளையை வளர்த்தெடுக்க இதுவே வழி.
-தொடரும்
(இன்ஷா அல்லாஹ்)
🔆🔅🔆🔅🔆🔅🔆🔅🔆
Ihsan Academy
WhatsApp : 91-7530004565
இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு(Islamic Parenting), பிள்ளைகளின் திறன் மேம்பாடு (Skill Development), ஆளுமை வளர்ச்சி (personality development) பற்றிய தகவல்களை தொடர்ந்து பெற கீழே உள்ள குழுமத்தில் இணையவும்.
WhatsApp:
https://chat.whatsapp.com/Gv6yZ0cccDoK7RxsdDoVAx
Telegram :
https://t.me/joinchat/x4o8yfGWcNdjZGE1
Blog :
https://ihsanacademy-india.blogspot.com/
Facebook :
https://www.facebook.com/Ihsan-Academy-100503915514470/
Ihsan Academy WhatsApp Group Invite
17/04/2021
கண்குளிர்ச்சியான பிள்ளைகள்
பதிவு எண் : 4
திருக்குர்ஆனிலேயே முதன்முதலில் இறக்கப்பட்ட வசனம் ஓதுவீராக என்றுதான். (96:5)
திருக்குர்ஆன் கல்வியை பல இடங்களில் வலியுறுத்துகிறது.
கற்றவரும் கல்லாதவரும் சமமில்லை.
(39:9 , 58:11)
கல்வி இறைவன் தரும் பரிசாகும்.
(2: 251 , 2:269 , 4: 113)
கல்வியாளர்கள் தான் இறைவனுக்கு முழுமையாக பணிவார்கள்.
(17:107)
எழுத்தறிவு இறைவனின் அருள்.
(2:282 , 96:4)
இங்கு கல்வி என்று கூறுவது எந்த கல்வியை?
மார்க்க கல்வியையா? உலக கல்வியையா?
மார்க்க கல்வியை கற்கும் பிள்ளைகள் உலக கல்வியை ஒதுக்கி விடுகின்றனர். வணக்க வழிபாடுகளையும் மார்க்க சட்டத்திட்டங்களையும் மட்டும் கற்றுக்கொண்டால் போதும் என்று நினைக்கின்றனர். அதனால் அவர்கள் எதிர்காலத்தில் உலகை எதிர்கொள்ள சிரமப்படுகின்றனர். அவர்கள் படித்து முடித்து வெளியே வரும்போது இந்த அதிநவீன தொழில்நுட்ப உலகம் எங்கோ சென்றிருக்கும். அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கிவிடுகின்றனர்.
மார்க்க கல்வியை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களோ, தன் பிள்ளைகளின் உலகியல் எதிர்காலம் பிரகாசமாக இல்லாமல் போய்விடுமோ என்று எண்ணி தன் பிள்ளைகளை மார்க்க கல்விக்கூடங்களில் சேர்க்க தயங்குகின்றனர்.
இதற்கு மதரஸாக்களின் தரம் குறைந்துவிட்டதும் காரணம். சில நூறு வருடங்களுக்கு முன் மதரஸாக்கள் இவ்வாறு இருக்கவில்லை. உயர்ந்த கல்வி தரத்தோடு பயனுள்ள கல்வியை கற்றுத்தரும் இடமாக மதரஸாக்கள் இருந்தன என்று வரலாறு கூறுகிறது.
உலக கல்வியை கற்கும் பிள்ளைகள், "மார்க்க கல்வி தனக்கானது அல்ல" என்றே நினைக்கின்றனர். பெற்றோரும் அவ்வாறே சொல்லி வளர்க்கின்றனர். "மகன்(ள்) படிக்கிறான்(ள்) அதனால் ஓத அனுப்ப நேரமில்லை" என்றே சாக்குபோக்கு சொல்கின்றனர். இதற்கு காரணம் மார்க்க அறிவின் சிறப்பையும் மாண்பையும் பற்றி சரியாக புரிந்துக்கொள்ளாமையே ஆகும்.
அவர்கள் ஓடி ஓடி சென்று கற்கும் உலக கல்வி அவர்களை பண்படுத்தவில்லை. வாழ்வியல் நெறிகளை கற்றுக்கொடுப்பதில்லை. மன அழுத்தத்தையும், மனகுழப்பத்தையுமே உண்டாக்குகிறது. சீரற்ற சமுதாயத்தையே உருவாக்குகிறது.
அப்படியென்றால், கல்வி என்பது எப்படி இருக்க வேண்டும்?
திருக்குர்ஆன் கல்வி என்று எதை வலியுறுத்துகிறது?
இஸ்லாத்தில் மார்க்க கல்வி உலக கல்வி என்று தனித்தனியே ஒன்று கிடையாது. நாம் தான் இன்று அவ்வாறு பிரித்து வைத்திருக்கிறோம். அதன் விளைவாக தான் இன்று நம் சமுதாயம் பயனுள்ள கல்வியை விட்டு வெகுதூரத்தில் இருக்கிறது. ஒன்று இருந்து ஒன்று இல்லையென்றால் நாம் இதன் பொருட்டு இழப்புக்குள்ளாவோம்.
இஸ்லாம் பயனுள்ள கல்வி, பயனற்ற கல்வி என்றே பிரித்து கூறுகிறது.
பயனுள்ள கல்வி என்றால் என்ன என்பதை அடுத்த பதிவில் காண்போம், இன்ஷாஅல்லாஹ்.
- தொடரும்
(இன்ஷா அல்லாஹ்)
🔆🔅🔆🔅🔆🔅🔆🔅🔆
Ihsan Academy
WhatsApp : 91-7530004565
இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு(Islamic Parenting), பிள்ளைகளின் திறன் மேம்பாடு (Skill Development), ஆளுமை வளர்ச்சி (personality development) பற்றிய தகவல்களை தொடர்ந்து பெற கீழே உள்ள குழுமத்தில் இணையவும்.
WhatsApp:
https://chat.whatsapp.com/Gv6yZ0cccDoK7RxsdDoVAx
Telegram :
https://t.me/joinchat/x4o8yfGWcNdjZGE1
Blog :
https://ihsanacademy-india.blogspot.com/
https://ihsanacademy-india.blogspot.com/
Ihsan Academy Islamic Educational Institution
கண்குளிர்ச்சியான பிள்ளைகள்
பதிவு எண் : 3
"கல்வி எப்படி ஒருவனை நற்பண்புகளுடையவனாக ஆக்கும்?" என்ற கேள்வியுடன் இந்த பதிவை படிக்க துவங்கியிருப்பீர்கள்.
"கற்றவர்களிலும் ஒழுக்கமற்றவர்களும் தீய குணமுடையவர்களும் இருக்கின்றனரே", என்றுதானே எண்ணுகிறீர்கள்?
ஆம் அவர்களில்தான் அதிகம் இருக்கிறார்கள் என்று நம் கண்முன்னே பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் அவர்கள் கல்வி என்று எதைச்சொல்கிறார்களோ அது அவர்களைப் பண்படுத்தவில்லை. மாறாக சீர்கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
*நபி(ஸல்) அவர்கள் இறைவனிடம் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்பு தேடினார்கள்.*
இஸ்லாம் கல்வி என்று வெறுமனே கூறவில்லை. பயனுள்ள கல்வி என்றே குறிப்பிடுகிறது.
இன்றைய கல்வி பொருள் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டதாக இருக்கிறது. வெறும் தகவல்களை சேகரித்துக்கொள்வது மட்டும் கல்வியல்ல. கல்விக்கூடங்கள் அனைத்தும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதையும், அதிக மதிப்பெண் வாங்க வைப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டு மனப்பாட கல்விமுறையில் இயங்குகிறது.
பெரும் நிறுவனங்களுக்கு அடிமைத்தொழிலாளிகளை உருவாக்கிக் கொடுக்கிறது.
கல்வி என்பது மன அழுத்தத்தை கொடுக்கக் கூடாது. கற்றல் என்பது சுதந்திரமான மனநிலையில் நடைபெற வேண்டிய ஒன்று.
கல்வி ஒருவனின் இயல்புத்தன்மையை மாற்றக்கூடாது. இன்று மனிதன் தன்னுடைய சுயத்தைவிட்டு விலகி வெகுதூரம் கடந்துவிட்டான். அறிவிற்கும் ஞானத்திற்கும் இடையே பெரும் இடைவெளியை இன்று உணர்கின்றோம்.
*கல்வி என்பது மனிதனுக்குள் இயல்பாக உள்ள உயர்நிலையை வெளிப்படுத்துவதாகும்.*
- விவேகானந்தர்
கல்வி என்பது பாடப்புத்தகத்தில் மட்டுமே இல்லை. வாழ்க்கைக்கான தீர்வுகளை காண்பதில் இருக்கிறது.
மதிப்பெண்ணையும் தாண்டி மனம் நிலைபடுதல், உலகை உணர்தல், கற்றதை வெளிப்படுத்துதல், மாற்றங்களை உருவாக்குதல், சமூகநீதி காத்தல், சூழலுக்கு நட்புடைமையோடு நடத்தல், சமுதாயமேன்மை, கண்ணியம், சகிப்புத்தன்மை, பண்பாடு என பல உண்டு.
கல்வி மாணவர்களுக்கு அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை, ஒழுக்கம் ஆகியவற்றை தருவதோடு அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர்வதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய கல்வியை நம் பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.
நம் பிள்ளைகளுக்கு அவர்களது இயல்புக்கேற்ப நிச்சயம் ஏதேனும் ஒரு திறமை இருக்கும். அதைக் கண்டறிந்து வெளிப்படுத்த வைப்பது பெற்றோரின் பொறுப்பு. பிள்ளைகளின் ஆளுமையை (personality) வெளிக்கொணர்ந்து அவர்களின் செயலாற்றலை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அந்த ஆளுமை ஈமானில் தோய்த்து எடுக்கப்பட்டதாயிருக்க வேண்டும். நாம் கற்கும் கல்வி ஆன்மீகத்தையும் அறிவையும் ஒருங்கே பெற்று தரவேண்டும்.
-தொடரும்
(இன்ஷா அல்லாஹ்)
🔆🔅🔆🔅🔆🔅🔆🔅🔆
Ihsan Academy
Whatsapp : 91-7530004565
இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு(Islamic Parenting), பிள்ளைகளின் திறன் மேம்பாடு (Skill Development), ஆளுமை வளர்ச்சி (personality development) பற்றிய தகவல்களை தொடர்ந்து பெற கீழே உள்ள குழுமத்தில் இணையவும்.
WhatsApp:
https://chat.whatsapp.com/Gv6yZ0cccDoK7RxsdDoVAx
Telegram :
https://t.me/joinchat/x4o8yfGWcNdjZGE1
Blog :
https://ihsanacademy-india.blogspot.com/
15/04/2021
கண்குளிர்ச்சியான பிள்ளைகள்
பதிவு எண்:2
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
எல்லாப் பெற்றோர்களுமே தங்கள் குழந்தைகள் மீது அதிக அன்பும் பாசமும் வைத்திருக்கிறோம். அன்பு, பாசம் மட்டுமே அவர்களை சிறந்த மனிதனாக வளர்த்தெடுப்பதற்கு போதுமானதல்ல. அன்பு மட்டுமே போதுமென்றால் இந்த உலகில் அனைத்து மனிதர்களுமே சிறந்த மனிதர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் எந்த தாய் தந்தையின் அன்பும் குறைந்ததல்ல. ஆனால் அன்பு பாசத்தையும் தாண்டி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளும், செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன.
பெற்றோரின் மிக முக்கியமான கடமைகள்:
குழந்தைகளுக்கு
1. பாதுகாப்பு, அடிப்படைத் தேவைகள்,
2. ஒழுக்கம், நற்குணங்கள்,
3. பயனுள்ள கல்வி
ஆகியவற்றை அக்கறையுடன் வழங்குவதேயாகும்.
இதில் முதலாவதாக குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளை (உணவு, உடை,...) நம்மில் அனைத்து பெற்றோர்களுமே குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறோம்.
இரண்டாவது மற்றும் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ள ஒழுக்கம், நற்குணங்கள் மற்றும் பயனுள்ள கல்வியை ஆகியவற்றைத் தான் நம் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பெற்றோர்களாகிய நாம் திணறிக்கொண்டிருக்கிறோம்.
மூன்றாவதை நல்லமுறையில் கொடுத்தாலே இரண்டாவது சுலபமாக வந்துவிடும்.
அதாவது பயனுள்ள கல்வியை நம்பிள்ளைகளுக்கு திறம்பட வழங்கிவிட்டாலே, ஒழுக்கம் மற்றும் நற்குணங்கள் தன்னாலே வந்துவிடும்.பின்பு, அதை தொடர்ந்து கடைப்பிடிக்கும் சூழலை மட்டும் நாம் அமைத்துக் கொடுத்தால் போதும்.
கல்வி எப்படி ஒருவனை நற்பண்புகளுடையவனாக ஆக்கும்? அப்படியென்றால் கற்றறிந்தவர் அனைவரும் சிறந்த மனிதர்களாக இருக்க வேண்டுமே?
என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கலாம்.
இதற்கான பதிலை அடுத்த பதிவில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.
- தொடரும்
(இன்ஷா அல்லாஹ்)
🔆🔅🔆🔅🔆🔅🔆🔅🔆🔅🔆
Ihsan Academy
Whatsapp : 91-7530004565
இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு(Islamic Parenting), பிள்ளைகளின் திறன் மேம்பாடு (Skill Development), ஆளுமை வளர்ச்சி (personality development) பற்றிய தகவல்களை தொடர்ந்து பெற கீழே உள்ள குழுமத்தில் இணையவும்.
WhatsApp:
https://chat.whatsapp.com/Gv6yZ0cccDoK7RxsdDoVAx
Telegram :
https://t.me/joinchat/x4o8yfGWcNdjZGE1
Ihsan Academy WhatsApp Group Invite
14/04/2021
கண்குளிர்ச்சியான பிள்ளைகள்
பதிவு எண் : 1
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அன்பார்ந்த பெற்றோர்களே!
குழந்தைகள் அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கின்ற நிஃமத் (அருள்)
குழந்தைகள் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்கள் (18:46)
குழந்தைகள் கண்களுக்கு குளிர்ச்சியானவர்கள். (25:74)
குழந்தைகளை அருளாக, அலங்காரங்களாக, கண்குளிர்ச்சியாக வர்ணிக்கின்ற அல்குர்ஆன் குழந்தைகள் சோதனையுமாகும் என்று சொல்கிறது.
நிச்சயமாக உங்கள் செல்வமும் உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)
குழந்தைகள் கண்களுக்கு குளிர்ச்சியானவர்களாகவும் அமையலாம் அல்லது பெரும் சோதனைகளாகவும் மாறலாம். அது பெற்றோரின் கைகளில்தான் இருக்கிறது.
அருளாகக் கிடைக்கப்பெற்ற நமது குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டிய உரிமைகள், கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறினால் இவர்கள் நமக்கு இம்மையிலும், மறுமையிலும் கண்குளிர்ச்சியாக இருப்பதற்குப் பகரமாக சோதனையாகவும் சுமையாகவும் மாறுவார்கள்.
நபி(ஸல்) கூறினார்கள், "நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்கள் பொறுப்பு பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்."
- முஸ்லிம், புகாரி
பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான மார்க்கத்தில்தான் பிறக்கிறார்கள்(ஃபித்ரா). பெற்றோர்கள்தாம் குழந்தைகளை இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பிவிடுகின்றனர்.
- புகாரி (1359)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன.
1. நிலையான தர்மம்.
2. பயனுள்ள கல்வி.
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
- முஸ்லிம் (3358)
இப்போது உங்கள் மனதில் கேள்வி எழுந்திருக்கலாம்.
"எப்படி நம்பிள்ளைகளை நமக்கு கண்குளிர்ச்சியானவர்களாக வளர்த்தெடுப்பது?" என்று.
மனிதன் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அழகான மற்றும் முழுமையான தீர்வுகளை இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது.
இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு முறையை பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டும்.
திருகுர்ஆனும், இறைதூதர் அவர்களும் காட்டிதந்த வழியில் நம் பிள்ளைகளை வளர்த்தால், ஸாலிஹான பிள்ளைகளாக வளர்த்தெடுக்க முடியும் இன்ஷா அல்லாஹ்.
- தொடரும்
(இன்ஷா அல்லாஹ்)
🔆🔅🔆🔅🔆🔅🔆🔅🔆🔅🔆
Ihsan Academy
Whatsapp : 91-7530004565
இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு(Islamic Parenting), பிள்ளைகளின் திறன் மேம்பாடு (Skill Development), ஆளுமை வளர்ச்சி (personality development) பற்றிய தகவல்களை தொடர்ந்து பெற கீழே உள்ள குழுமத்தில் இணையவும்.
WhatsApp:
https://chat.whatsapp.com/Gv6yZ0cccDoK7RxsdDoVAx
Telegram :
https://t.me/joinchat/x4o8yfGWcNdjZGE1
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Chennai