03/12/2013
நான்கு மாற்றங்கள்
இன்று (3.12.2013) உலக மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை புரிந்துகொள்வது, அவர்களுக்குரிய உரிமைகளையும் மேன்மைகளையும் அவர்களுக்கு வழங்குவது போன்ற கருப்பொருளுக்காக உலகம் முழுவதும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர்களை காட்சிப்பொருளாக பார்ப்பதை விட்டு விட்டு மற்ற மனிதர்கள் போலவே அவர்களிட இருக்கும் திறமைகளை பயன்படுத்தி அவர்களுடைய உரிமைகளை பெற்றுத்தருவது பற்றி சிந்திப்பது தான் இந்த விழா கொண்டாடுவதன் அர்த்தம் முழுமை பெறும்.
உள்ளடங்கிய கல்வி என்ற வார்த்தை சமீபகாலமாக கல்வியாளர்களால் சிந்திக்கவும், விவாதிக்கப்படும் செயலாகவும் மாறிவருகிறது. மாற்றுத்திறன் குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வு மெல்ல மெல்ல துளிர்விட்டு வளர்ந்துகொண்டே வருகிறது. மாற்றுத்திறன் குழந்தைகளை ஒழுங்கு நிலைப் பள்ளிகளில் சாதாரண குழந்தைகளோடு சேர்த்து கல்வி கற்பிக்கும் உள்ளடங்கிய கல்வியை ஏற்கனவே நாம் பள்ளிகளில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். ஆனால் அங்கு பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளின் கற்றல் அடைவு மேம்படுத்தபட வேண்டிய நிலை உள்ளது. உள்ளடங்கிய கல்வியில் நாம் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறோம். இந்த ஆரம்ப நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறிச் செல்ல பல சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த கடினமான பாதையை கடக்க நாம் ஏராளமான முயற்சிகளையும், பயிற்சிகளையும் செய்ய வேண்டியுள்ளது. முறையான பயிற்சிகளை செய்து மாற்றங்களை உருவாக்கும் போது தான் நாம் உள்ளடங்கிய கல்வியை முழுமையாக செயல்படுத்த சிறப்பாக செயல்படுத்த சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. முக்கியமாக உடனடியாக செய்ய வேண்டிய நான்கு மாற்றங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
பாடத்திட்டம் :
சாதாரண பள்ளிகளில் பொதுப்பாடத்திட்டம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குழுவிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை வைத்து அந்த குழுவினரின் கற்றல் அடைவுகளை மேம்பட செய்வதே பொதுப் பாடத்திட்டம் ஆகும். ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைக்கு சாதாரண வகுப்பறையிலுள்ள ஒரு மாணவனுக்கு வசதிகளையும், செயல்பாடுகளயும் அளித்தாலும் ஒரு உள்ளடங்கிய வகுப்பறையில் இருக்கும் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு உடன்பயிலும் சதாரண மாணவனுக்கு கொடுக்கப்படும் பாடத்திட்டத்தை வைத்துக்கொண்டு என்னதான் கற்றல் சூழ்நிலைகளை செய்து கொடுத்தாலும் அந்த மாணவனால் சாதாரண மாணவர்களைப்போல் கற்றல் அடைவுகளை அடைய இயலாது. எனவே மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள ஆசிரியர் சாதாரண மாணவர்களுக்கு பொதுப்பாடத்திட்டம் வைத்திருந்தாலும் குறிப்பிட்ட மாற்றுத்திறனாளி மாணவனுக்கு தனியாக தனி நபர் பாடத்திட்டம் வைத்திருக்க வேண்டும். அந்த குழந்தையின் தனிப்பட்ட நோக்கங்கள், இலக்குகள் திறமைகள், இவற்றை மனதில் கொண்டு தனியாக தனிநபர் பாடத்திட்டம் அமைப்பது அந்த ஆசிரியரின் கடமை. 35 மாணவர்கள் அமர்ந்திருக்கும் ஒரு சாதாரண வகுப்பறையில் 2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருந்தால் (ஒருவர் செவித்திறன் குறைந்தவர் மற்றொருவர் மனவளர்ச்சி குறைபாடுடையவர் என கருதுவோம்) அந்த வகுப்பாசிரியரிடம் 33 மாணவர்களுக்கு பொதுப்பாடத்திட்டமும் செவித்திறன் குறைந்த குழந்தைக்கு ஒரு தனிநபர் பாடத்திட்டம், மனவளர்ச்சி குறைந்த குழந்தைக்கு ஒரு தனிநபர் பாடத்திட்டம் என மூன்று பாடத்திட்டம் இருக்க வேண்டும். இரண்டு மனவளர்ச்சி குறைந்த குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் தனித்தனியாக இரண்டு தனிநபர் பாடத்திட்டம் ஆசிரியரிடம் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களுடைய வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும் தங்களிடம் அவர்களுக்கு தனிநபர் பாடத்திட்டம் « Individualized Education Plan (IEP) இருக்கிறதா என்பதை நினைத்துப் பார்க்கும் தருணம் வந்துவிட்டது. இந்த அடிப்படை மாற்றத்தை கொண்டு வராதது வரை உள்ளடங்கிய கல்வி என்பது கேள்விக்குறியே.
கற்பிக்கும் முறை
பேசுவதில் சிரமம், எழுதுவதில் சிரமம், உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் சிரமம், காட்சிகளை பார்ப்பதில் சிரமம் என பல்வேறு சிரமங்களை வைத்துக் கொண்டு வகுப்பறையில் அமர்ந்திருக்கும் இந்த குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை மிகவும் முக்கியம். ஏற்கனவே உடைந்து போயிருக்கும் குழந்தையை ஒதுக்கி வைக்காமல் தட்டிக் கொடுத்து பயிற்றுவிக்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய மாணவர்களை உள்ளடங்கிய வகுப்பறைகளில் வெறும் வருகைப் பதிவிற்காக மட்டுமே வைத்திருப்பதை சில பள்ளிகளில் நான் பார்த்திருக்கிறேன். அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் சாதாரண குழந்தைகளைப்போல கற்றல் அடைவுகளை அடையச் செய்வது சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கடமை என்கிறது. எனவே அந்த குழந்தையை மாற்றுத்திறனாளி குழந்தை என்று ஆசிரியரால் ஒதுக்கிவிட இயலாது. புத்தகத்திலிருப்பதை மனப்பாடம் செய்ய வைத்து அதை தேர்வில் எழுதும் வழக்கமான முறையிலிருந்து ஆசிரியர் வெளியே வரவேண்டும். கற்றல் அடைவுகளை கற்றல் செயல்பாடுகளாக மாற்றி பாடங்களை வழங்கலாம். சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தகுந்த முறையில் சில தொழில் சார்ந்த திறன்களை கற்பிக்கவும், கணக்குப்பாடம் பயிற்றுவிக்கும் போது அந்த குழந்தையின் திறன்களை பொறுத்து ரூபாய் நோட்டுகளை எண்ணுதல், சிறிய கூட்டல் கணக்குகள் போன்றவைகளை தெரிவு செய்து செய்ய வைக்கலாம்.
மொழிபாடம் நடத்தும் போது மற்றவர்களிடம் தாய்மொழியில் பேசுவது எளிமையா பற்றி பயின்றுவிக்கலாம். மொத்தத்தில் அந்த மாற்றுத்திறன் குழந்தையின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த கற்றல் முறைகளை நேர்ந்தெடுத்து கற்றல் நிகழ்வை நடத்துவது நல்லது. கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே உள்ளடங்கிய கல்வியை வெற்றி பெறச் செய்ய இயலும்.
பிறக்கும் போது அந்த குழந்தை இரு கைகள் இல்லாமலே பிறந்தது. அவனது பெற்றோர் அவனுக்கு கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என பிளசிங் சாஜி என பெயரிட்டனர். குமாரபுரம் அரசு துவக்கப் பள்ளியில் சேர்த்தனர். இரண்டாம் வகுப்பு அவனுக்கு திருப்புமுனையாக இருந்தது. டெய்சிபாய் என்ற ஆசிரியை அவனை மாற்றுத்திறனாளியாக பார்க்கவில்லை. அவனும் மற்ற மாணவர்கள் போல சாதிக்க முடியும் என நம்பினார். அவன் மீது பரிதாப பார்வை வீசுவதை விட்டுவிட்டு சாதிக்க வழிகாட்டினார். கால்களை கொண்டு எழுதப் பழக்கினார். கீழ்மட்ட கரும்பலகையில் கால்களைக் கொண்டு எழுதினான். பின்பு நோட்டு புத்தகத்தில் கால்களால் எழுதினான். கால்களால் கணக்கு செய்தான். கால்களால் படம் வரைய ஆரம்பித்தான். கால்களால் ஸ்பூன் வைத்து சாப்பிடுகிறான். இப்போது ஒன்பதாம் வகுப்பு பயிலும் பிளசிங் சாஜி கால்களைக் கொண்டு கிரிக்கெட் விளையாடுகிறான். கால்களால் பொலிங் செய்கிறான். ஆசிரியர் கற்றல் முறையில் கொண்டு வந்த மாற்றத்தினால் மட்டுமே இது சாத்தியம் ஆனது.
கற்றல் பொருட்கள்
சாதாரண வகுப்பறையில் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் கரும்பலகை, அறிவியல் கருவிகள் போன்றவைகள் கற்றல் பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. பார்வைத்திறன் குறைந்த ஒரு குழந்தை உள்ளடங்கிய வகுப்பறையில் இருக்கும் போது அந்த குழந்தை மற்ற மாணவர்கள் உபயோகப்படுத்தப்படும் புத்தகத்தை பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கும். அந்த குழந்தைக்கு உருப்பெருக்கம் செய்யப்பட்ட உரை நூல் அல்லது உருப்பெருக்கி தேவைப்படுகிறது. இத்தகைய கற்றல் பொருட்கள் உள்ளடங்கிய வகுப்பறையில் அமைந்தால் மட்டுமே உள்ளடங்கிய கல்வியை முறையாக செயல்படுத்த இயலும். இதுபோன்று ஒரு மனவளர்ச்சி குன்றிய குழந்தை உள்ளடங்கிய வகுப்பறையில் இருக்கும் போது திரும்ப திரும்ப கற்றல் முறையில் மட்டுமே அந்த குழந்தையினால் கற்க இயலும். திரும்ப திரும்ப கற்றல் நடைபெறுவதற்கு அந்த வகுப்பறையில் தொலைகாட்சி, டிஜிட்டல் வீடியோ பிளேயர் மற்றும் கணினி தேவைப்படுகிறது. இவ்வாறு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேவையான கற்றல் பொருட்களை உள்ளடங்கிய வகுப்பறையை நிறுவினால் மட்டுமே அந்த குழந்தைகளின் அடைவுத்திறனை மேம்படுத்தமுடியும்.
மதிப்பீடு
உண்மையான கல்வி என்பது குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ளும்படியான வகுப்பறைச் சூழலைக் கொண்டு இருத்தல் வேண்டும். கற்றல்அடைவுகளை மதிப்பீடு செய்யும் போது மனப்பாடம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து கற்றல் அடைவுகளை வாழ்க்கையில் பயன்படுத்தும் நோக்கில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு அனைத்து மாணவர்களுக்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது. கற்போரின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை அவ்வப்போது கண்டுணர்ந்து கற்றல் அடைவை மேம்படுத்தவே முழுமையான மதிப்பீடு உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறன் குழந்தைகளை மதிப்பீடு செய்யும் போது அவர்களுக்குகென நெகிழ்வுத் தன்மை மிக்கதும், நடைமுறைப்படுத்த கூடியதுமான மதிப்பீட்டு முறையை செயல்படுத்த வேண்டும். தற்போது உள்ளடங்கிய வகுப்பறையில் சாதாரண மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிப்பீட்டு முறையே சிறப்பு குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும். மதிப்பீடானது நெகிழ்வுத் தன்மை உடையதும், மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் நிஜமான கற்றல் அடைவுகளை சோதிக்கக்கூடியதுமாக இருக்க வேண்டும். மதிப்பீடு என்பது மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வளர்ச்சியையும், மனப்பான்மைகளையும் அளந்தறியும் கருவியாக இருக்க வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.
இந்த நான்கு மாற்றங்களும் உள்ளடங்கிய வகுப்பறையில் மலர்ந்தால் மட்டுமே உள்ளடங்கிய கல்வி என்ற மலர் மணம் வீசும். ஒரு தோப்பில் நான்கு தென்னை மரங்கள் இருந்தால் நான்கும் நான்கு உயரத்தில் இருக்கும். தோட்டக்காரரின் பார்வை மரங்களின் உயரத்திலோ உருவத்திலோ இருக்காது. மரம் தரும் பலன்களில் தான் இருக்கும். இந்த வகையான பார்வை மாற்றுத்திறனாளிகளைச் சுற்றியுள்ள சூழல்களில் வந்துவிட்டால் மட்டுமே மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு மற்றும் பெற்றோர்களின் விழிப்புணர்வு ஆகியவைகள் மிகவும் அவசியம். இத்தகைய மாற்றங்களை வரவேற்போம். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த மாற்றங்களை கொண்டு வருவோம். அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு மெழுகுவர்தியாய் நாம் ஒளி கொடுப்போம்.