17/05/2026
வணக்கம். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், பாதிரக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சார்பாக இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறேன்.
எங்கள் பாதிரக்குடி கிராமத்தில், இந்திய சுதந்திரத்திற்கு முன்பே, அதாவது 1903-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பழமையான தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இது தெற்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் பள்ளி என்ற வரலாற்றுப் பெருமைக்குரியது.
செமங்கோட்டை (ECR) முதல் பாதிரக்குடி (SH) வரையிலான சுமார் 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையானது மிக முக்கியமான சாலையாகும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இச்சாலை, போடப்பட்ட 10 நாட்களிலேயே சேதமடைந்தது. தற்போது மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இது குறித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. மேலும், உங்களுடன் “ஸ்டாலின் முகாம்” நிகழ்ச்சியிலும் மனு அளிக்கப்பட்டது. மனு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இதுவரை சாலை சரிசெய்யப்படவில்லை.
இச்சாலையை தீயத்தூர், குறிச்சிவயல், குளத்தூர், பாதிரக்குடி, நளவளர், ஒட்டாகந்தல், பொத்தகங்கள், செமங்கோட்டை, வடகோட்டை, சாத்தியடி, கூடலூர் ஆகிய 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அவசரகால ஊர்திகள் தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.
சாலை மிகவும் மோசமாக உள்ளதால், மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் பொதுமக்களின் வாழ்வாதாரமும், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும்முன், இச்சாலையை NABARD அல்லது PMGSY போன்ற ஏதேனும் ஒரு அரசுத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளித்து, தாங்களாவது உடனடியாக மறுசீரமைப்பு செய்து தர ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
அ. புவியரசன் மற்றும்
தீயத்தூர், குறிச்சிவயல், குளத்தூர், பாதிரக்குடி உள்ளிட்ட 10 கிராமப் பொதுமக்கள்.