14/01/2026
தமிழர் திருநாள்
அன்பார்ந்த மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினது நிருவாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் எமது கலைக்கூட வளர்ச்சியில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்து வருகின்ற தமிழ்த் தேசியத் செயற்பாட்டாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!
கடந்த ஆண்டு முழுவதும் எமது கலைக்கூடத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் திருநாள் நிகழ்வுகள், மாலதி கிண்ணம் உள்ளரங்க உதைபந்தாந்தட்டம், தமிழ்த்திறன் போட்டி, விளையாட்டுப்போட்டி, கல்விசார்ந்த செயற்பாடுகள், ஆசிரியர் செயலமர்வுகள், இணையவழிச் செயற்பாடுகள், வணக்கநிகழ்வுகள் , வாணிவிழா தேசிய மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வு , நத்தார் நிகழ்வு,மற்றும் இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட எமது தாயக மக்களுக்கான உடை சேகரிப்பு, நிதியுதவி போன்ற அனைத்துச் செயற்பாடுகளையும் செயற்படுத்தி வெற்றி காண்பதற்கு, உங்கள் ஒவ்வொருவரதும் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்புமே உறுதுணையாக இருந்தது எனலாம். சவால்கள் நிறைந்த தருணங்களிலும் தளராது உழைத்த நிருவாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் எம்மீது நம்பிக்கை வைத்துத் துணையாக நின்ற பெற்றோர்களுக்கும் விடாமுயற்சியுடன் தமிழ்மொழிக் கல்வியைப் பயின்ற மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய ஆண்டிலும் நீங்கள் அனைவரும் புத்துணர்வுடனும் தெளிவான இலக்குடனும் பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
உலகமாற்றங்களுக்களிற்கேற்ப எம்மை மேம்படுத்தி, எமது தலைமுறைகளைத் தமிழினத்தின் இருப்பைக் காக்கும் காவலர்களாக உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்!
தமிழர் புத்தாண்டு, உழைப்பின் மேன்மையைப் போற்றும் விழுமிய நாள். இத்திருநாளில் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும் செழுமையும் பொங்கிப் பெருகட்டும்!
“சொல்லுக்கு முன்னே செயல் இருக்க வேண்டும்” என்ற தேசியத்தலைவரது சிந்தனையைத் தமிழர் புத்தாண்டின் பொன்மொழியாக கொள்வோம்! செயற்படுவோம்! வெற்றி காண்போம்!