05/10/2026
இலங்கையின் முதலாவது பாடசாலை போசாக்கு மாநாடு நடைபெற்றது.
"பாடசாலை போசாக்கு வேலைத்திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டில் அரசாங்கம் 33,600 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது"
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய -
2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை போசாக்கு வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 33,600 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதுடன், இந்த வேலைத்திட்டத்தை நாட்டின் சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விரிவான வேலைத்திட்டமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026.10.02 அன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற "தேசிய பாடசாலை போசாக்கு மாநாடு 2026" இல் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சரான பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் அரசாங்கத்தின் போசாக்கு வேலைத்திட்டம், 2026 ஆம் ஆண்டாகும் போது 8,990 பாடசாலைகளிலுள்ள 1.5 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கும் வகையில் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமாக மாறியுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் விரிவாக்கம், எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் ஆராய்ச்சித் தரவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, 'Save The Children' நிறுவனம் உள்ளிட்ட பல தரப்பினரின் பங்குபற்றலுடன் இந்த பாடசாலை போசாக்கு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இது இலங்கையில் நடைபெறும் முதலாவது பாடசாலை போசாக்கு மாநாடு என்பது சிறப்பம்சமாகும்.
பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் அரசாங்கத்தின் போசாக்கு வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களிடையே தொடர்புகளை மேம்படுத்தி, இந்த போசாக்கு வேலைத்திட்டத்தின் நிலைபேறுடன் கூடிய தன்மை மற்றும் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான தீர்மானங்களை எட்டுவதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் பின்வருமாறு கூறினார்:
"நமது நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பாடசாலைகளில் கல்வி கற்கும் பல பிள்ளைகளுக்கு இதுவே நாளாந்தம் கிடைக்கும் மிகவும் நம்பகமான மற்றும் போசாக்கான உணவாகும். ஒவ்வொரு பிள்ளையும் தனது நாளைச் சிறப்பாக ஆரம்பித்து, தமது கல்விப் பயணத்தை நம்பிக்கையுடன் முன்னெடுப்பதற்கு நாம் வழங்கும் ஒரு அடிப்படை வாய்ப்பாகவே அரசாங்கம் என்ற வகையில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.
தற்போது 8,990 பாடசாலைகளைச் சேர்ந்த 15 இலட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது. இதற்காக 2026 ஆம் ஆண்டில் 33,600 மில்லியன் ரூபாயை நாங்கள் ஒதுக்கியுள்ளோம். மக்கள் பெரும் தியாகங்களைச் செய்து வாழும் இக்காலத்தில், வரி செலுத்தும் மக்களின் இந்தப் பணத்தைச் செலவிடும்போது, ஒவ்வொரு ரூபாய்க்கும் நாம் பொறுப்புக்கூற வேண்டும்.
அத்துடன், இந்த வேலைத்திட்டத்தை எமது அரசாங்கம் செய்யும் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக நாம் கருதுகின்றோம். கடந்த காலத்தில் இது பசியை ஆற்றும் ஒரு வேலைத்திட்டமாக மாத்திரமே இருந்த போதிலும், தற்போது இதனை நமது நாட்டில் உள்ள தொற்றா நோய்கள் மற்றும் சுகாதார சவால்களுக்கான ஒரு தீர்வாக நாம் பார்க்க வேண்டும். போசாக்கின்மை மற்றும் வளர்ச்சி குன்றுதல் ஆகியவற்றுக்குத் தீர்வு காண நாம் திட்டங்களை வகுத்து வரும் இத்தருணத்தில், எமது இலக்குகள் குறித்து நாம் மிகவும் தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
பிள்ளைகளும் தினமும் மாறுபட்ட சுவையான உணவை உண்ணவே விரும்புகின்றனர். எனவே, இந்த உணவை நமது விவசாயம், நமது மீனவர்கள் மற்றும் நமது கூட்டுறவு முறைமையுடன் நேரடியாக இணைக்க வேண்டும். அத்துடன், நமது சமூகத்தில் உள்ள தாய்மார்களைப் பொருளாதார ரீதியாக வலுவூட்டவும் இதனைப் பயன்படுத்தலாம்.
பிள்ளைகளுக்கு உணவு வீண்விரயம் மற்றும் நிலைபேறான உணவு முறைமைகள் குறித்துக் கற்பிக்கவும், விவசாயம் மற்றும் போசாக்குத் துறைகளில் புதிய தொழில் வழிகளைப் பற்றி சிந்திக்கவும் இதனை ஒரு ஆரம்பமாகப் பயன்படுத்த வேண்டும். எனவே, பாரம்பரிய கட்டமைப்புக்களில் இருந்து வெளியேறி, எமது தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற புதிய கட்டமைப்பொன்றை இந்த வேலைத்திட்டங்களுக்காக உருவாக்குவதற்கு இங்கு வருகை தந்துள்ள அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் எதிர்காலத்திலும் எமக்குத் தேவைப்படும்."
இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பதிகாரி டேவிட் மையர்ஸ், Save the Children நிறுவனத்தின் பிரதம அதிகாரி மைக்கா ஓலட் (Mica Oled) உட்பட பாடசாலை போசாக்கு வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள், அமைச்சு அதிகாரிகள் மற்றும் கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
https://whatsapp.com/channel/0029VbDOVRF5Ui2RZTSEZO0k
Follow 🔥 DAILY GK 🇱🇰 Sri Lanka Government Exam Prep📑's WhatsApp channel. 🔥 தினமும் GK Questions!
📚 Government Competitive Exam-oriented GK!
👇 இன்றே DAILY GK Community-ல் இணைந்துகொள்ளுங்கள்!. Join 246 followers for the latest updates.