BNCOE - Batticaloa

BNCOE - Batticaloa MInistry of Education

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி09.02.2026அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கோபிஷா சிவக்குமார் அவர்களின் சிறுநீரக மாற...
09/02/2026

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி
09.02.2026

அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கோபிஷா சிவக்குமார் அவர்களின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான மனிதாபிமான நிதி உதவி தொடர்பாக

எமது மட்டக்களப்பு கல்விக் கல்லூரியில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றி, பின்னர் இடமாற்றலாகிச் சென்ற திருமதி. கோபிசா சிவக்குமார் அவர்கள், தற்போது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட மிகக் கடுமையான உடல்நல நிலையில உள்ளதாகவும், அதனால் சிறுநீரக மாற்று சிகிச்சையை எதிர்கொள்ள வேண்டிய அவசியமான நிலையில் இருப்பதாகவும் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

இச்சிகிச்சை மிக உயர்ந்த செலவினங்களை உள்ளடக்கியதோடு, அவருடைய தற்போதைய குடும்ப மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக, குறித்த சிகிச்சைக்குத் தேவையான பெரும் நிதியினை தனிப்பட்ட முறையில் திரட்ட முடியாத ஒரு மிகவும் சிரமமான நிலைமையில் அவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மனிதாபிமான உணர்வின் அடிப்படையிலும், தங்களால் இயன்ற அளவிலான நிதி உதவியினை அவருடைய சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக வழங்கி, அவரது உயிர் காக்கும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு தங்களை மனமாரக் கேட்டுக் கொள்கின்றோம்.

தங்களின் சிறிய உதவிகூட, ஒரு குடும்பத்திற்கு புதிய நம்பிக்கையையும் வாழ்க்கையையும் அளிக்கக்கூடியதாக அமையும் என்பதை பணிவுடன் நினைவுறுத்துகிறோம்.

மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் தங்களின் அன்பான ஒத்துழைப்பிற்கு முன்கூட்டியே எமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ் தகவலினை மற்றவர்களுக்கும் பகரித்து அவர்களையும் இவ் உன்னத மனிதாபிமான செயற்பாட்டில் இணைக்க உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
+94752701983
+94778523748

வங்கி கணக்கு இலக்கம்
P.GOBISHA
BOC BANK - VELLAVELY
6850379

நன்றி

Smart Classroom & Smart Board தொடர்பான பயிற்சி பட்டறைஇன்று மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில், விரிவுரையாளர்களுக்கான...
14/01/2026

Smart Classroom & Smart Board தொடர்பான பயிற்சி பட்டறை

இன்று மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில், விரிவுரையாளர்களுக்கான Smart Classroom & Smart Board தொடர்பான பயிற்சி பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்பயிற்சி பட்டறை, கல்லூரியின் பீடாதிபதி திரு. க. கணேசரத்தினம் அவர்களது வழிகாட்டலின் கீழ், கல்வி மற்றும் தர உறுதிப்பாட்டிற்குப் பொறுப்பான உப பீடாதிபதி திருமதி த. சுந்தர்ராஜன் அவர்களால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது.

வளவாளர்களாக, மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ICT போதனாசிரியர் திரு. சி. பிரசாந்தன் மற்றும் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் பிரதி அதிபர் திரு. வித்தியாதரன் ஆகியோர் கலந்து கொண்டு, Smart Board அடிப்படையிலான interactive teaching strategies, digital pedagogical approaches மற்றும் active classroom practices குறித்து நடைமுறை சார்ந்த பயிற்சிகளை வழங்கினர்.

இந்த பயிற்சி பட்டறை, விரிவுரையாளர்களின் தொழில்முறை மேம்பாட்டிற்கும், 21ஆம் நூற்றாண்டுத் திறன்களுக்கு ஏற்ற தரமிக்க கற்பித்தல்–கற்றல் பண்பாட்டை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான பங்களிப்பை வழங்கியது. உண்மையிலேயே இது ஒரு smart, engaging மற்றும் academically enriching செயலமர்வாக அமைந்தது.

 # # மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் ஒளிவிழா – 20252025 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் முகமாக,   மட்டக்களப...
17/12/2025

# # மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் ஒளிவிழா – 2025

2025 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் முகமாக, மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் ஒளிவிழா – 2025* 12.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று கல்லூரி பீடாதிபதி *திரு த. கணேசரெத்தினம்* அவர்களின் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இவ்வாண்டு நாட்டை உலுக்கிய பாரிய இயற்கை அனர்த்தங்களின் காரணமாக, எமது ஆசிரிய பயிலுனர்களின் பல பிரதேசங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சிலர் விடுமுறைக்காக கூட தங்களது இல்லங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இவ்வாறான சூழ்நிலையில், கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்த பயிலுனர்களின் *மனவலிமையை மீட்டெடுக்கும் அருமருந்தாக* இம்முறை ஒளிவிழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

இவ்விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் நிதிப் பொறுப்பாளர் *அருட்தந்தை ம. ஸ்ரனிஸ்லோஸ்* அவர்கள் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக தாழங்குடா தூய திருமுழுக்கு யோவான் ஆலயத்தின் உதவி பங்குத்தந்தை *அன்பு அடிகளார்* அவர்களும், *மௌலவி அன்சார் மௌலானா* அவர்களும் விழாவைச் சிறப்பித்தனர். மேலும், **சிறப்பு அதிதிகளாக எமது கல்லூரியின் உப பீடாதிபதிகள் திருமதி. தர்ஷினி சுந்தர்ராஜன், திரு. நவநீதகிருஷ்ணன், திருமதி பு. யோகானந்தகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விரிவுரையாளர் இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர்கள் உட்பட சுமார் *400 பேர்* இவ்வொளிவிழாவில் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். ஆசிரிய பயிலுனர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும், கரோல் கீதங்களும் விழாவிற்கு தனிச்சிறப்பு சேர்த்தன.

இவ்வருடத்துடன் ஓய்வு பெறவிருக்கும் எமது கல்லூரியின் மதிப்பிற்குரிய விரிவுரையாளர் மௌலவி அன்சார் மௌலானா அவர்களுக்கு, கல்லூரியின் கிறிஸ்தவ மன்றத்தின் சார்பில் பீடாதிபதி அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டது.

அனர்த்தத்திற்கு பின்னர் மனவலிமையை மீட்டெடுக்கும் உளவியல் ஆதரவுச் செயலமர்வுமட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரிஅண்மையில் இல...
09/12/2025

அனர்த்தத்திற்கு பின்னர் மனவலிமையை மீட்டெடுக்கும் உளவியல் ஆதரவுச் செயலமர்வு
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி

அண்மையில் இலங்கையை மிகவும் கடுமையாகப் பாதித்த புயல், பெருவெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் நாட்டை முழுவதுமாக உலுக்கியுள்ளன.

இதன் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களை இழந்ததோடு, இலட்சக்கணக்கானோர் தமது உடமைகள், முக்கிய ஆவணங்கள், பாரம்பரிய வாழ்விடங்கள் ஆகியவற்றை இழந்து, இன்றளவும் தற்காலிக தங்குமிடங்களில் பல்வேறு அசௌகரியங்களுடனும் கடுமையான மன அழுத்தங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் உடல் ரீதியான காயங்களோடு மட்டுமல்லாது, ஆழமான உள–உணர்ச்சிசார் (psycho-emotional) காயங்களையும் சுமந்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் உளவியல் முதலுதவி (Psychological First Aid – PFA) என்பது இன்றியமையாத, மறுக்க முடியாத அடிப்படைத் தேவையாகும்.

ஒரு அனர்த்தத்திற்குப் பின்னர் தப்பிப் பிழைத்தவர்களுக்கான உள–சமூக ஆதரவு (Psychosocial Support) அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவதற்கான முக்கியமான பாலமாக விளங்குகிறது.

அந்த வகையில், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 330 ஆசிரிய பயிலுனர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது சொந்த ஊர்களும் சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனர்த்தம் காரணமாக அவர்கள் விடுமுறைக்குக் கூட சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் கல்லூரி விடுதிகளிலேயே தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையை கருத்தில் கொண்டு, ஆசிரிய பயிலுனர்களின் மன வலிமையை மீட்டெடுத்து, அவர்களது உளநலத்தை மேம்படுத்தும் நோக்கில் 06.12.2025 (சனிக்கிழமை) அன்று மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் உளவியல் முதலுதவி மற்றும் மனவலிமை மேம்பாட்டு செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த செயலமர்வு, மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி திரு. கணேசரத்தினம் அவர்களின் அனுமதியுடனும், உப பீடாதிபதிகளின் ஆலோசனைகளோடும் விரிவுரையாளர் திரு. சி. லோகராஜா அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. இதற்கமைய,

1.மட்டக்களப்பு கல்வி வலய முறைசாரா கல்விப் பிரிவு

2.மட்டக்களப்பு தொழில்சார் உளவியல் உளநல உதவி நிலையம்

ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, இந்த ஒருநாள் உள–சமூக நல செயலமர்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தன.

தொழில்சார் உளவியல் உளநல உதவி நிலையத்தின் நிறுவனர், இயேசு சபை துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகம், அதன் தற்போதைய இயக்குநர் அருட்தந்தை யூட் டிலக்ஷன்,

மட்டக்களப்பு கல்வி வலய முறைசாரா கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ஜெகநாதன் மற்றும் அவரது அர்ப்பணிப்பு மிக்க பணிக் குழுவினர் இந்த செயலமர்வில் வளவாளர்களாக செயல்பட்டனர்.

அவர்களோடு மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர்களான திரு. ஷாந்தன் சத்திய கீர்த்தி, திரு. கிருஷ்ணகுமார் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த உள–சமூக நலச் செயலமர்வு, துயரத்திலிருந்து மீண்டெழுந்து மனத் திடத்துடனும் நம்பிக்கையுடனும் நாளைய வாழ்வை எதிர்கொள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு ஒரு உறுதியான உளநல ஆதரவாக அமைந்தது.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின்உப பீடாதிபதி (கல்வியும் தர மேம்பாடும்) திருமதி விக்னேஸ்வரி மணிவண்ணன் அவர்களது பணி ...
11/11/2025

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின்
உப பீடாதிபதி (கல்வியும் தர மேம்பாடும்) திருமதி விக்னேஸ்வரி மணிவண்ணன் அவர்களது பணி ஓய்வு பிரியாவிடை விழா 10.11.2025 திங்கள் அன்று,
கல்லூரியின் பீடாதிபதி திரு. த. கணேசரத்தினம் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

அமைதியும் அன்பும் ஒளிர்ந்த அந்த நிகழ்வில்,
அவரது பணிப்பாதையைப் பாராட்டியும் நினைவுகூர்ந்தும்,
மணிவிழா சிறப்பு மலர் “விக்னேஸ்வரம்” வெளியிடப்பட்டது.

பயிலுனர்களின் கலைநிகழ்வுகள், விரிவுரையாளர்களின் அனுபவப் பகிர்வுகள்,
மனதை நெகிழவைத்த உரைகள் என அனைத்தும்
அம்மணியின் அர்ப்பணிப்பு நிறைந்த கல்விச் சேவையைப் போற்றின.

நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு நன்றியின் மலர்கள் அள்ளிவிடப்பட்ட அந்த நிமிடங்களில்,
கல்லூரி குடும்பம் ஒன்றிணைந்த பாசத்தின் பண்டிகையாக விழா மிளிர்ந்தது.

அம்மணியின் குடும்பத்தினரும் பங்கேற்றது
இந்த நிகழ்விற்கு இன்னும் ஒரு இனிமையும் நிறைவையும் சேர்த்தது.

“விக்னேஸ்வரி மணிவண்ணன்” — கல்வித் துறையில் அர்ப்பணிப்பும், ஒளியும், மனிதநேயமும் பொழிந்த பேரொளி;
அவரது பணிப்பயணம் எந்நாளும் மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும்
ஒரு முன்னுதாரணமும் ஊக்கச் சுடரும் ஆக விளங்கட்டும்.

மா மர நடுகை மற்றும் பராமரிப்பு முறைகள் மற்றும் உற்பத்தித்  திறன் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டும்  நிகழ்வுஎமது கல்வி...
07/11/2025

மா மர நடுகை மற்றும் பராமரிப்பு முறைகள் மற்றும் உற்பத்தித் திறன் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டும் நிகழ்வு

எமது கல்விக் கல்லூரியில் மா மர நடுகை, அதன் பராமரிப்பு முறைகள் மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிப்பு குறித்த ஒருங்கிணைந்த விழிப்பூட்டும் நிகழ்வும், அதனுடன் இணைந்து 100 மா மரங்கள் நடும் நிகழ்வும், 04.11.2025 அன்று எமது கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

எமது கல்விக் கல்லூரியின் பீடாதிபதி திரு.T.கணேசரத்தினம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கப் பிரிவிலிருந்து பிரதிவிவசாய பணிப்பாளர் திரு. எம். பரமேஸ்வரன், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி காயத்ரி, மேலும் மாவட்ட விவசாய பிரிவுக்குட்பட்ட விவசாய போதனாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் எமது கல்விக் கல்லூரியின் பீடாதிபதி , உப பீடாதிபதிகள், அனைத்து விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ ஆசிரியர்களும் பங்கேற்று, நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வின் போது, மாமர நடுகையின் முக்கியத்துவம், அதனால் கிடைக்கும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகள், மேலும் மா மர பராமரிப்பு மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்தும் நவீன நடைமுறைகள் குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இவ்விளக்கங்கள் எமது மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இந்நிகழ்ச்சி, “க்ளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) தேசிய திட்டத்துடன் இணைந்த ஒரு முக்கியமான பசுமை முயற்சியாக அமைந்தது என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் குறிப்பிடுகின்றோம்.

எமது நாட்டின் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று சனிக்கிழமை 2025.11.01 எமது தேசிய கல்விக் கல்லூரிக்கு திடீர் விஜய...
01/11/2025

எமது நாட்டின் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று சனிக்கிழமை 2025.11.01 எமது தேசிய கல்விக் கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி திரு.T.கணேசரத்தினம் அவர்களுடனும் உப பீடாதிபதிகளுடனும் ஆசிரிய மாணவர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய பின் கல்லூரியின் பௌதீக வள வசதிகளை நேரடியாக பார்வையிட்டு சென்றுள்ளார்.

இதன்போது பீடாதிபதி அவர்கள், கல்லூரியின் குறை நிறைகள் தொடர்பாக கௌரவ பிரதமர் அவர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

17.07.2025 வியாழக்கிழமை அன்று மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியின் கணித விஞ்ஞான மன்றத்தினால் கணித விஞ்ஞான வினாடி வினா போ...
19/07/2025

17.07.2025 வியாழக்கிழமை அன்று மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியின் கணித விஞ்ஞான மன்றத்தினால் கணித விஞ்ஞான வினாடி வினா போட்டி 2025 ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இப்போட்டியில் வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, மீராபாலிகா தேசிய பாடசாலை, ஹிலுரியா வித்யாலயம், புனித மிக்கேல் கல்லூரி ஆகிய நான்கு பாடசாலைகள் அரையிறுதி சுற்றுக்கு தெரிவாகி இருந்தன. கணிதம், விஞ்ஞானம் மற்றும் பொது அறிவு அம்சங்களை உள்ளடக்கிய இப்போட்டியின் இறுதியில் மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை வெற்றி வாகை சூடியது.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டதின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மு...
09/07/2025

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டதின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட Clean NCoE (Clean Steps - Safe Place) நிகழ்ச்சித்திட்டம் வெற்றிக்கரமாக எமது கல்லூரியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின்   இரண்டாம் வருட ஆரம்பக்கல்வி ஆசிரியப் பயிலுநர்களால் வண்ணச்சிட்டுக்கள் எனும் பல்சு...
03/06/2025

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் இரண்டாம் வருட ஆரம்பக்கல்வி ஆசிரியப் பயிலுநர்களால் வண்ணச்சிட்டுக்கள் எனும் பல்சுவை அம்சங்களைக் கொண்ட நூல் கல்லூரியின் பீடாதிபதி திரு.T.கணேசரெத்தினம் அவர்களால் (02.06.2025) வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் உப பீடாதிபதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், பீடத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், பதிவாளர் உட்பட கல்விசார், கல்விசாராப் பணியாளர்களும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

02/06/2025

அறிவித்தல்

எமது கல்லூரியின் பெயரினை பயன்படுத்தி கல்லூரிக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் ஆபாசமான படங்கள் முகநூல் பக்கம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

எமது தற்போது பாவனையிலுள்ள உத்தியோகபூர்வ முகநூல் பக்கமானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி உருவாக்கப்பட்டது.

ஆபாசமான படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ள முகநூல் பக்கமானது 2018 ஜூலை 06 ஆம் திகதி உருவாக்கப்பட்டிருப்பதுடன் இவ் முகநூல் பக்கத்திற்கும் தற்போது உள்ள கல்லூரி நிர்வாகத்திற்கும் எதுவித சம்பந்தங்களும் இல்லை என்பதனை தெரிவித்து கொள்வதுடன் இது தொடர்பாக தொழிநுட்ப மற்றும் சட்ட நடவக்டிக்கை எடுக்க உத்தியோசித்துள்ளோம் என்பதனை அறியத்தருகின்றோம்.

Address

Batticaloa National College Of Education
Thalankudah
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNCOE - Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BNCOE - Batticaloa:

Shortcuts

Share