10/04/2026
கல்விப் புரட்சியில் சாதனை படைக்கும் கிருலப்பனை குல்லியத்துல் இமாம் ஷாபிஈ!
கடந்த 31/03/2026 அன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம், கொழும்பு-06, கிருலப்பனையில் அமைந்துள்ள குல்லியத்துல் இமாம் ஷாபிஈ (كلية الإمام الشافعي) அரபுக் கல்லூரி ஒரு மகத்தான வரலாற்றுச் சாதனையைத் தன்னகத்தே நிலைநாட்டியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இம்முறை கிருலப்பனை, குல்லியத்துல் இமாம் ஷாபிஈ சார்பாகப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் அடைவு மட்டங்கள் வருமாறு:
● பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் நூறு வீத (100%) சித்தியினைப் பெற்று, கல்லூரிக்கு புகழைத் தேடித்தந்துள்ளனர்.
● பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் அனைவரும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரபு மொழி மற்றும் இஸ்லாம் ஆகிய பாடங்களில் மாணவர்கள் அபரிமிதமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளதுடன், அரசியல் விஞ்ஞானம் உள்ளிட்ட ஏனைய பாடங்களிலும் மிகச் சிறந்த அடைவு மட்டங்களை வெளிக்காட்டியுள்ளனர். அத்துடன் கல்லூரியின் நீண்டகால வரலாற்றில் மீள மீள இவ்வாறானதொரு 100% பெறுபேறு பதிவாகியிருப்பது அதன் கல்வி வளர்ச்சியைப் பறைசாற்றுகின்றது.
குல்லியத்துல் இமாம் ஷாபிஈ, ஷரீஆக் கல்வியையும் (Shari'ah Education) நவீன பாடசாலை கல்வியையும் (Secular Education) ஒருங்கே வழங்கி வரும் ஒரு கல்லூரியாகதா திகழ்கிறது. மார்க்க விழுமியங்களையும் பண்பாடுகளையும் அஸ்திவாரமாகக் கொண்டு, பொறுப்புணர்வு மிக்க எதிர்காலச் சமூக வழிகாட்டிகளை உருவாக்கும் உயரிய நோக்குடன் இக்கல்லூரி செயற்பட்டு வருகின்றது.
காலவோட்டத்திற்கு ஏற்ப நவீன கல்வி மாற்றங்களை உள்வாங்கி, அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களின் ஆலோசனைகளுடன் மாணவர்களின் ஆளுமையை வலுப்படுத்துவதில் இக்கலாசாலை முன்னின்று உழைக்கின்றது. ஷரீஆக் கற்கைகளுடன் இணைந்து பொதுக் கல்வித் துறையிலும் மாணவர்கள் வெளிப்படுத்தி வரும் இத்திறமையானது, சமூக மட்டத்தில் இக்கல்லூரி மீதான நன்மதிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இளைஞர்களுக்குச் சரியான வழிகாட்டல்களையும் இருமுறைசார் கல்வியையும் வழங்கி, அவர்களைச் சிறந்த குடிமக்களாக மாற்றும் ஒரு முன்னோடி நிறுவனமாக குல்லியத்துல் இமாம் ஷாபிஈ பரிணமித்து வருகின்றது.
இதற்கு முன்னரும் இக்கலாசாலையின் மாணவர்கள் O/L, A/L, Al Alim (i), (ii), Ahadiyya, Dharmacharya போன்ற அரச பரீட்சைகளில் 100/% சித்தியடைந்துள்ளதோடு, பலர் உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பல்வேறுபட்ட துறைகளில் கற்று பட்டதாரிகளாக வெளியேறி, இன்று உயர் பதவிகளிலும், தஃவா துறையிலும், கற்பித்தல் பணியிலும், அல்குர்ஆனின் இஜாஸா வழங்கும் காரிமார்களாகவும் விளங்குகின்றனர்.
அத்தோடு, இங்கு கற்கும் மாணவர்கள் தேசிய, சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டிகளில் கலந்து முதன்மை இடங்களை தக்கவைத்து எமது கலாசாலைக்கும், நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர் என்பது அடிக்கோட்டிட்டு காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
பல சவால்களுக்கு மத்தியில், கல்வியில் சிகரத்தை அடைய வேண்டும் எனும் உயரிய இலட்சியத்தோடு இக்கல்லூரி தனது பயணத்தைத் தொடர்கின்றது.
அல்லாஹ்வின் பாரிய உதவியும், அவனது அருளுக்கும் அடுத்ததாக, மாணவர்களது தொடர் விடா முயற்சியும், அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களின் அயராத உழைப்புமே இவ்வெற்றியின் முக்கிய காரணங்கள் எனலாம்.
இச்சாதனை வெற்றிக்குக் காரணமான மாணவர்கள், வழிகாட்டிய ஆசிரியர்கள், உஸ்தாத்மார்கள், அதிபர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், பிரார்த்தனையும் ஒத்துழைப்பும் வழங்கிய பெற்றோர் உட்பட நலன் விரும்பிகள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் உயர் நற்கூலிகளை வழங்கியருள்வானாக.