22/05/2026
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் செய்யப்படும் நற்செயல்களே, ஏனைய நாட்களில் செய்யப்படும் நற்செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவையாகும்."
அப்போது நபித் தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இறைவழியில் ஜிஹாத் செய்வதை விடவுமா?" என்று கேட்டனர்.
அதற்கு நபியவர்கள், "ஆம், இறைவழியில் ஜிஹாத் செய்வதை விடவும் தான்! ஆனால், தனது உயிரையும் பொருளையும் அர்ப்பணிக்கப் புறப்பட்டுச் சென்று, அவ்விரண்டில் எதையுமே திரும்பக் கொண்டு வராமல் அங்கேயே உயிரை தியாகம் செய்துவிட்ட ஒரு மனிதரைத் தவிர," என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: புகாரி - 969
துல்ஹஜ்ஜின் முதல் 10 நாட்களும்: அமலுஸ்ஸாலிஹ் என்பது பற்றிய விரிந்த பார்வையும்!
ரமழான் மாதத்தின் கடைசி பத்து நாட்களை அடைவதற்காக நாம் காட்டும் ஆர்வமும், அதற்காக நாம் மேற்கொள்ளும் தயாரிப்புகளும் அளப்பரியவை. ஆனால், அதே அளவு முக்கியத்துவத்தை துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களுக்கு நாம் கொடுக்கிறோமா? துரதிர்ஷ்டவசமாக, பல நேரங்களில் இந்த நாட்களை வழமை போன்ற நாட்கள் போன்றே நாம் கடந்து விடுகிறோம்.
ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த பத்து நாட்களும் இஸ்லாமிய வாழ்வியலில் ஒரு ‘தவறவிடக்கூடாத மாபெரும் வாய்ப்பு’ ஆகும். இந்த நாட்கள் ஏன் இவ்வளவு புனிதமானவை, இதன் பின்னால் உள்ள சமூக மற்றும் ஆன்மீகப் பரிமாணங்கள் என்ன என்பதை ஒரு அறிவுசார் நோக்கில் நாம் அணுக வேண்டியது அவசியம்.
ரமழானின் கடைசி பத்து நாட்களுக்கு நிகரான மகிமை
ஆன்மீக அந்தஸ்தில் துல்ஹஜ்ஜின் இந்த 10 நாட்களும், ரமழானின் கடைசி 10 நாட்களும் ஏறத்தாழ சமமானவை. ரமழானில் ‘லைலத்துல் கத்ர்’ என்ற ஒரு இரவு இருப்பதாலேயே அது அதிகச் சிறப்புப் பெறுகிறது; ஏனெனில் அந்த ஒரு இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. அந்த ஒரு தனித்துவமான இரவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மற்ற அனைத்துச் சிறப்புகளிலும் துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களும் ரமழானின் இறுதிப் பத்து நாட்களுக்கு நிகரானவை என்பதை நாம் உணர வேண்டும். ரமழானில் நாம் காட்டும் அதே ஆன்மீக எழுச்சியும் ஈடுபாடும் இந்த நாட்களிலும் வெளிப்பட வேண்டும் என்பதே மார்க்கத்தின் எதிர்பார்ப்பு.
ஹஜ் செய்ய முடியாதவர்களுக்கு வழங்கப்பட்ட மாபெரும் ‘பாக்கியம்’
ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறிய சதவீத முஸ்லிம்கள் மட்டுமே புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் அல்லது உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள், "மகாமு இப்ராஹீமில் தொழ முடியவில்லையே, ஹஜருல் அஸ்வத்தைத் தொட முடியவில்லையே" என்று மனவேதனை கொள்வது இயல்பு.
இத்தகைய சாமானிய முஸ்லிம்களுக்கு இறைவன் வழங்கிய ஒரு மாபெரும் ஆறுதலே இந்த 10 நாட்களாகும். ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாதவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே இந்த நாட்களைச் சரியாகப் பயன்படுத்தினால் ஏறத்தாழ புனிதப் பயணம் சென்றவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளுக்கு ஈடான நன்மைகளைப் பெற முடியும். இது இறைவனின் எல்லையற்ற கருணையின் வெளிப்பாடாகும்; புனித இடங்களுக்குச் செல்ல முடியாத குறையை, புனிதமான செயல்களின் மூலம் ஈடுசெய்ய இறைவன் நமக்குத் தரும் வாய்ப்பு இது.
ஜிஹாத்தை விடவும் மேலான நற்செயல்கள்
இந்த நாட்களின் மேன்மையை நபி (ஸல்) அவர்கள் ஒரு வியக்கத்தக்க ஒப்பீட்டின் மூலம் விளக்குகிறார்கள். அல்லாஹ்வின் பாதையில் போராடுவதை விடவும் இந்த நாட்களில் செய்யப்படும் அமல்கள் சிறந்தவை என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இதில் உள்ள ஒரே ஒரு விதிவிலக்கை நாம் கவனிக்க வேண்டும்: ஒருவர் தனது உயிரையும் உடைமையையும் ஒருசேர அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்து, மீண்டும் திரும்ப வராமல் போனால் மட்டுமே, அந்தச் செயல் இந்த 10 நாட்களின் அமல்களை விட மேலானதாக இருக்க முடியும். மற்றபடி, சாதாரண நிலையில் செய்யப்படும் எந்தப் போராட்டத்தையும் விட இந்த நாட்களின் நற்செயல்கள் உயர்ந்தவை.
"அல்லாஹ்வுக்கு நற்செயல்கள் செய்வதற்கு இந்த பத்து நாட்களை விட விருப்பமான வேறு எந்த நாட்களும் இல்லை."
'நற்செயல்' (Amal-ul-Salih) என்பதன் விரிவான பரந்த பார்வையும் விளக்கமும்
நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ‘அமலு ஸாலிஹ்’ (நற்செயல்) என்ற ஒரு பொதுவான சொல்லைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் முக்கியமானது. தொழுகை, நோன்பு, திக்ர் போன்ற வணக்கங்களை மட்டும் அவர் குறிப்பிடவில்லை. மாறாக, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் —குறிப்பாகப் பணிச்சுமை கொண்டவர்கள், குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் கூட— இந்த நன்மையில் பங்கெடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் ஒரு விரிவான பொருளை இது தருகிறது.
இந்த நாட்களில் நாம் பின்வரும் இலக்குகளை (Targets) முன்னெடுக்கலாம்:
அல்குர்ஆன் ஓதும், கற்கும் அளவை அதிகரித்தல்:
சாதாரணமாக ஒரு நாளைக்கு 2 பக்கங்கள் குர்ஆன் ஓதுபவர், இந்த நாட்களில் 5 பக்கங்களாக உயர்த்தலாம். அல்லது ‘ஜுஸ்வு அம்மா’ (Juz Amma), ‘தபாரக்’ (Tabarak) போன்ற அத்தியாயங்களின் பொருளை ஆழமாகப் படிக்கலாம்.
முன்கூட்டியே தர்மம் செய்தல்:
பலர் பெருநாள் அன்றுதான் தர்மம் செய்வார்கள். ஆனால், இந்த 10 நாட்களுக்குள்ளேயே 5 அல்லது 10 ஏழைக் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் பெருநாள் தேவைகளை முன்கூட்டியே நிறைவேற்றுவது மகத்தான நன்மையாகும்.
உழைப்பும் பாவமன்னிப்பும்:
குடும்பத்திற்காகக் கடுமையாக உழைத்து மாலை களைப்போடு வீடு திரும்புவது இறைவனிடத்தில் பாவமன்னிப்பைப் பெற்றுத் தரும் ஒரு நற்செயலாகும். (முஸன்னப் இப்னு அபீ ஷைபா, தபரானி)
சமூகப் பாதுகாப்பு:
ஆதரவற்ற விதவைகள் மற்றும் ஏழைகளுக்கு உதவுவது, இரவு முழுக்க நின்று வணங்குவதற்கும் பகலெல்லாம் நோன்பு நோற்பதற்கும் சமமானதாகும். (புகாரி:6006)
உறவுகளைச் சீரமைத்தல்:
பழைய கசப்புகளை மறந்து உறவினர்களுடன் மீண்டும் சுமுகமான உறவைப் பேணுவது இந்த நாட்களின் மிகச்சிறந்த அமலாகும்.
உங்கள் தொழிலே உங்கள் இபாதத்
இந்த 10 நாட்களின் சிறப்பைப் பெறுவதற்கு நாம் அனைவரும் பள்ளிவாசலிலேயே முகாமிட்டிருக்க வேண்டும் என்பதில்லை. அவரவர் தொழிலையே ஒரு இபாதத்தாக (வணக்கமாக) மாற்ற முடியும். குறிப்பாக, பணி நிமித்தமாகத் தனிப்பட்ட வணக்கங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு இது ஒரு மாபெரும் பாக்கியம்.
மருத்துவர்கள்:
இந்த பத்து நாட்களில் ஏழை நோயாளிகளுக்குக் கட்டணம் வாங்காமல் அல்லது குறைவான கட்டணத்திற்கு சிகிச்சை அளிக்கலாம்.
ஆசிரியர்கள்:
வசதி குறைந்த மாணவர்களுக்குக் கூடுதல் நேரத்தை ஒதுக்கித் தார்மீக அடிப்படையில் பாடம் நடத்தலாம்.
வியாபாரிகள்:
குறிப்பிட்ட விலைகளை குறைத்து குறைந்த இலாபத்தோடு ஏழைகளுக்கென்று குறைத்து விற்பனை செய்யலாம்.
எச்சரிக்கை:
இந்நாட்களில் இரவு நேரங்களில் அமலு ஸாலிஹ் என்ற பெயரில் நீண்ட நேரம் தொழுதுவிட்டு, பகலில் வியாபாரத்தில் பொருட்களைப் பதுக்குவதோ, அதிக விலைக்கு விற்பதோ அல்லது பொய் சொல்வதோ உங்கள் வணக்கங்களைச் சூனியமாக்கிவிடும். வணக்கங்களும் சமூக ரீதியான நேர்மையும் இணையும்போதுதான் அந்த நற்செயல் முழுமையடைகிறது.
துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் என்பது வெறும் சடங்குகளுக்கான காலம் மட்டுமல்ல; அது நம் சமூகப் பொறுப்புணர்வையும் தனிமனித ஒழுக்கத்தையும் உரசிப் பார்க்கும் காலம். நாம் நற்செயல்களை வெறும் பள்ளிவாசலோடு மட்டும் சுருக்கிக் கொள்கிறோமா அல்லது நமது சமூகத் தளத்திலும், தொழில் துறையிலும் அதனை விரிவுபடுத்துகிறோமா?
குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற ஆன்மீகப் பயிற்சிகளோடு, வறுமையில் வாடும் மக்களுக்கு உதவுதல், உழைப்பின் போது தாராளமாக நடந்துகொள்ளுதல் அத்தோடு ஏனைய சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடல் என பலவற்றை இந்நாட்களில் நாம் முன்னெடுக்க வேண்டும். இந்த நாட்களை வெறும் சடங்காகக் கடக்காமல், வாழ்வின் மாற்றத்திற்கான ஒரு தொடக்கமாக மாற்றுவோம். எவர் ஒருவர் இந்த நாட்களைப் பிறருக்குப் பயனுள்ள வகையில் கழிக்கிறாரோ, அவரே உண்மையான நன்மையைப் பெற்றவர் ஆவார்.
(உஸ்தாத் மன்ஸூர் அவர்களின் உரை எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது.)
17/05/2026
16/05/2026
12/05/2026