30/09/2023
* கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரே தந்தை அவரே தாய், தம் குழந்தைகளை அவர் ஒருபோதும் பிரிவதில்லை. ஒருபோதும் பிரிவதில்லை. இல்லை. இல்லை. என் ஆன்ம நாயகனே, என் இறைவா, நீ வாழ்க, வாழ்க.
* கிறிஸ்தவர் இந்துவாகவோ பௌத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பௌத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாறவேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் வளர்ச்சி நியதியின்படி வளர வேண்டும்.
* என் சகோதரா, தடையின்றி நற்காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இறுதிவரை விடாமுயற்சியுடன் இருப்பவனேவெற்றி பெறுவான்.
* பிரம்மச்சரியம், தூய்மை இவற்றைப் பற்றி மேலைநாட்டினரின் கருத்துக்கள் இந்தியர்களின் கருத்தை போன்றதே என்று எண்ணிவிடக் கூடாது.
* மக்கள் இப்போது என்னைச் சுற்றி அதிகமாகக் கூடுகிறார்கள். உடல் அசைவுகளை உண்மையிலேயே அடக்கியாளக் கூடிய மனிதர்கள் உள்ளார்கள் என்பதை இப்போது நூற்றுக்கணக்கானோர் பூரணமாக நம்புகின்றனர். இந்தக் கருத்துக்களில் மக்களின் பக்தியும் சிரத்தையும் அதிகரித்து வருகின்றன். காத்திருப்பவனுக்கு எல்லாம் வந்து சேர்கின்றன.
* நற்பண்புகளைப் பொறுமையாக வளர்த்துக் கொள்வதும், உண்மைப் பொருளை அறிய தீவிரமாகப் போராடுவதுமே எதிர்கால மனித இனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
வெவ்வேறு பாதைகள் மூலம் நாம் ஒரே குறிக்கோளை அடைய முடியும் என்பது வேதாந்த மதத்தின் மகத்தான கருத்தாகும். இந்தப் பாதைகளை நான் பொதுவாக கர்மம், பக்தி, யோகம், ஞானம் என்று நான்காகப் பிரித்திருக்கிறேன்.
ஆனால் இந்தப் பிரிவுகள் துல்லியமாகக் கோடிட்டுப் பிரிக்கப்படாதவை. ஒவ்வொன்றும் முற்றிலும் தனியானவை அல்ல, ஒன்றோடொன்று கலந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தக் கலப்பில் எந்த அடையாளம் முக்கியமாக தென்படுகிறதோ, அதை வைத்து அந்தப் பிரிவை அழைக்கிறோம். கர்மத்தைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாதவர்கள், பக்தியுடன் வழிபடுவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாதவர்கள், வெறும் ஞானத்தைத் தவிர வேறெதுவும் அற்றவர்கள் என்று தனித்தனியாக யாரையும் நீங்கள் காண முடியாது. எத்தகைய மனப்போக்கு, எந்த அடையாளம் ஒருவரிடம் சிறந்து விளங்குகிறதோ, அதற்கு ஏற்ப இந்தப் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளன.
என்னிடமிருந்து எல்லா வேறுபாடுகளும் மறைந்து விட்டன. சரியான எல்லாம், தவறான எல்லாம், மனமயக்கம் எல்லாம், அறியாமை எல்லாம் மறைந்துவிட்டன. குணங்களைக் கடந்த பாதையில் நான் நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்.
நான் எந்தச் சட்டத்திற்குக் கீழ்ப் படிய வேண்டும்?
எதற்கும் பணிய வேண்டியதில்லை?
அந்த உயர்ந்த நிலையிலிருந்து பார்க்கும் போது இந்தப் பிரபஞ்சம் ஒரு சேற்றுக் குட்டை போல் தோன்றுகிறது. ஹரி ஓம் தத் ஸத் இறைவன் இருக்கிறார். வேறு எதுவும் இல்லை. இறைவா, நான் உன்னிடமும் நீ என்னிடமுமாக உள்ளோம்.
எம்பெருமானே, நீயே எனது நிலையான புகலிடமாக இருப்பாய். சாந்தி, சாந்தி, சாந்தி.
நாளுக்கு நாள் நான் இதயத்தில், ஆற்றலின் வெளிப்பாட்டை அதிகமாக உணர்கிறேன்.
எனக்குப் பின்னால் இருக்கின்ற சக்தி விவேகானந்தன் அல்ல, இறைவனே.
இந்துமதக் கருத்துக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது மிகவும் கடினம். வறண்ட தத்துவம், சிக்கலான புராணங்கள், விசித்திரமான பிரமிக்கச் செய்கின்ற மன இயல் இவற்றிலிருந்து எளிய, சரளமான, பாமர மக்களின் உள்ளங்களைக் கவர்வதாக அதே வேளையில் மிக உயர்ந்த மனங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யவல்லதான ஒன்றை அமைப்பது என்பது மிகமிகக் கடினமான விஷயம். முயன்றவருக்கே அதன் கஷ்டம் விளங்கும்.
மிக நுண்ணியதான அத்வைதம், தினசரி வாழ்க்கையில் ஒரு வாழ்கின்ற கவிதையாக வேண்டும். சீராக்க முடியாத சிக்கலான புராணங்களிலிருந்து தெளிவான தார்மீகக் கோட்பாடுகள் உருவாக வேண்டும். பயத்தைத் தருகின்ற யோக சாஸ்திரத்திலிருந்து அறிவு பூர்வமான, செயல்முறை மனஇயல் வரவேண்டும். ஒரு குழந்தைகூட புரிந்து கொள்ளத்தக்க வகையில் இவற்றை கொடுக்க வேண்டும். அதுவே என் வாழ்வின் பணி.
நான் எவ்வளவு தூரம் வெற்றி பெறுவேன் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
ஒவ்வொரு நாளும் பொறுமையிலும், அதற்கு மேலாக, அனுதாப உணர்ச்சியிலும் நான் பாடம் கற்றுவருகிறேன்.
மேலான, ஆற்றல் மிக்க ஆங்கிலோ இந்தியர்களிலும் கூட நான் தெய்வீகத்தைக் காண தொடங்கிவிட்டேன் என்று எனக்குத் தோன்றுகிறது. சாத்தான் என்று ஒருவன் இருப்பானானால், சாட்சாத் அந்தச் சாத்தானையும் என்னால் நேசிக்க முடியும் என்ற நிலையை நான் மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புலப்படுகிறது.
உன்னிடம் மூடநம்பிக்கை இல்லை என்பது நிச்சயம். உலகையே அசைக்க வல்ல ஆற்றல் உன்னிடம் உள்ளது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். வேறு ஆற்றல்களும் உன்னிடம் வந்து சேரும். தைரியமான சொற்கள், அவற்றைவிட தைரியமிக்க செயல்கள் இவையே வேண்டியவை.
உன்னதமானவர்களே விழித்தெழுங்கள், விழித்தெழுங்கள். துன்பத்தீயில் உலகம் வெந்து கொண்டிருக்கிறது. நீங்கள் தூங்கலாமா. தூங்குகின்ற தெய்வங்கள் விழித்தெழும் வரையில் உள்ளேயுள்ள தெய்வம் நமது அழைப்பிற்குச் செவிசாய்க்கும் வரையில் கூவி அழைப்போம். இதைவிட வாழ்வில் வேறு என்ன உள்ளது?
இதைவிடப் பெரிய செயல் வேறு எது?
உலகமே ஒரு குழந்தை விளையாட்டு. பிரச்சாரம் செய்தல், போதனை செய்தல் அனைத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
தூயவனாக இரு. அதற்கு மேலாக, நேர்மையாக இரு. ஒரு கணமும் கடவுளிடம் நம்பிக்கையை இழக்காதே. நீ ஒளியைக் காண்பாய். 'உண்மை எப்போதும் நிலைத்திருக்கும்.
உண்மையல்லாததை ஒருவரும் பாதுகாத்து வைக்க முடியாது. ஒவ்வொன்றும். விரைவாக அலசி ஆராயப்படுகின்ற இந்தக் காலத்தில் பிறந்திருப்பதால் நாம் பிழைத்தோம்.
பிறர் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். செய்து கொள்ளட்டும். நீ தூய்மை, ஒழுக்கம், பக்தி இவற்றிலிருந்து விலகாதே. அனைத்திற்கும் மேலாக, ரகசிய இயக்கங்களின் விஷயத்தில் எச்சரிக்கையாக இரு.
இறைவனிடம் அன்பு கொண்டுள்ள யாரும் மாயா ஜாலங்களைக் கண்டு பயப்பட வேண்டாம். மண்ணிலும் சரி, விண்ணிலும், சரி, மிக உயர்ந்த மிகவும் தெய்வீகமான ஆற்றல் புனிதமே.
எது நல்லது என்பது இறைவனுக்குத் தெரியும்.
#சுவாமி_விவேகானந்தர்
‘அம்பிகா முரளிதரன்’ அவர்கள் எழுதிய “சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு” புத்தத்தில் இருந்து.