All India Save Education Committee - Tamilnadu

All India Save Education Committee - Tamilnadu

Share

To uphold Scientific, Secular, and Democratic Education for All. developing movement involving teach

Photos from All India Save Education Committee - Tamilnadu's post 28/01/2026
24/12/2025

நமது மதுரை கருத்தரங்கம்...

24/12/2025

அறியாமையை அகற்றுவதற்கும், சுதந்திரத்தை வளர்ப்பதற்கும், சனநாயகத்தின் அடித்தளத்தை உருவாக்குவதற்கும் மிகவும் வலிமை வாய்ந்த சக்தியே கல்வி. இன்று நமது தேசத்தின் இந்தத் தூண் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியாவில் கல்வி ஏழைகளிடமிருந்து விலகி, சிலரின் சலுகையாக மாற்றப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் 79 வது ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கும் போது, நமது மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள், அவர்கள் வேண்டிநின்ற ஒரு நியாயமான, சமமான, சனநாயக கல்வி முறை ஆகியன ஆபத்தில் உள்ளதைக்காண்கிறோம்.

கோவிட்-19 நெருக்கடியின் போது பொது விவாதமும் நாடாளுமன்ற விவாதமும் இல்லாமல் திணிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, தனியார்மயமாக்கத்தையும், வணிகமயமயமாக்கத்தையும், பாலர் பள்ளி முதல் ஒன்றியம் வரை கல்வியை வகுப்புவாதமயமாக்குவதை ஊக்குவிக்கிறது. இது வரை வரலாற்றில் இல்லாதவாறு கல்வி அதிகாரவகையில் மத்தியப்படுத்தப்படுகிறது. இதை செய்து முடிக்க HECI மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்வி வரவுசெலவுத் திட்டங்களில் கடுமையான வெட்டுகள் இந்திய கல்வி முறையின் முதுகெலும்பான பொது கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு இட்டுச் செல்கின்றன. நாடு முழுக்க பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக 1.22 கோடி மாணவர்கள் பள்ளிகளிலிருந்து இடைநிற்றல் ஆகி வெளியேறிவிட்டனர் என்று ஒன்றிய அரசின் UDISE 2023-2024 அறிக்கை தெரிவித்துள்ளது. அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாத வட்டார மொழிகள் மற்றும் ஆங்கிலம் இரண்டும் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. "இந்தியமயமாக்கல்" என்ற போர்வையின் கீழ், ‘பிளவுபடுத்தும், பகுத்தறிவற்ற அறிவியலற்ற உள்ளடக்கம்’ பாடத்திட்டத்திற்குள் திணிக்கப்பட்டு, கல்வியின் மதச்சார்பற்ற, அறிவியல் தன்மையை அச்சுறுத்துகிறது.

இதை எதிர்கொள்ள, அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி (AISEC ) கடந்த ஐந்து ஆண்டுகளில், கருத்தரங்குகள், மாநாடுகள், விவாதங்கள், தர்ணாக்கள் மற்றும் பேரணிகளை ஏற்பாடு செய்து நாடு தழுவிய இயக்கத்தை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கைகோர்த்துள்ளனர். அவர்களின் கூட்டு ஞானத்தை அடித்தளமாகக்கொண்டு 'மக்கள் கல்விக் கொள்கை (PEP) 2025' வரைவை அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி வடிவமைத்துள்ளது. இக்கொள்கை அறிவியல், மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் உலகளாவிய கல்வி முறைக்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும். மக்கள் மீது திணிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை2020 போலல்லாமல், மக்களின் தீவிர பங்கேற்புடன் மக்களின் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. கருத்துக்களைப் பெறுவதற்காக 'வரைவு மக்கள் கல்விக்கொள்கை', 22 மே 2025 முதல் பொதுத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 24 அன்று பெங்களூருவில் உள்ள ராமையா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அபெக்ஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மக்கள் நாடாளுமன்றத்தால் இறுதி செய்யப்படும்.

இவையெல்லாம குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்காக சென்னையில் 27, டிசம்பர் 27, 2025, காலை 10.30 மணிக்கு, எழும்பூர் ஜீவனஜோதி (ICSA) அரங்கத்தில் பொதுக்கல்வி மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தின் மிகச்சிறந்த கல்வியாளர்கள் உரையாற்றுகின்றனர். முயற்சி திருவினையாக்கும் என அறிவோம். உங்கள் ஒவ்வொருவரையும் நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

22/12/2024

அனைவரும் வருக... 🙏
அறிவீட்டாலும் அறிவூட்டலும் - பேரா ஜவகர் நேசன்,
புத்தக வெளியீட்டு விழா.

கல்வியியல் தத்துவங்கள் குறித்த ஆய்வுகள் நம் மொழியில் மிகக்குறைவாகவே வெளிவந்திருக்கின்றன. அதற்கான சரித்திரக் காரணங்களும் இருக்கின்றன.

மேற்குலகில் முழுவீச்சுடன் ஏறத்தாழ 300 வருடங்கள் நடைபெற்ற மறுமலர்ச்சி இயக்கம் நவீன தேசங்களையும் நவீன மனிதர்களையும் தோற்றுவித்திருந்தது. மிக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி, வெசாலியுஸ், கோப்பர்நிக்கஸ், புருனோ, டைகோ பிராகே, கெப்ளர், கலிலியோ, பேகன், டெக்கார்ட் , பாயில், ஹூக், நியூட்டன், லெய்ப்பினிட்ஸ் கேவன்டிஷ், வால்டேர், டி ஆளெம்பெர்ட் போன்ற எண்ணற்ற ஆளுமைகள் அறிவியலிலும் சமூக அறிவியலிலும், நுண்கலைகளிலும் மறுமலர்ச்சி இயக்கம் மூலம் தோன்றியிருந்தனர். அதுமட்டுமல்ல, இவர்கள் தோற்றுவித்த பல்துறை அறிவு, அவைகளைப் பெறும் முறைகள், அதற்கான காரண விளைவு சிந்தனை முறைகள், காரணவிளைவு முறைமைக்கான தர்க்கம் ஆகியவைகள் ஜான் லாக், டேவிட் ஹ்யூம், இம்மானுவேல் காண்ட், ஜான் ஸ்டூவர்ட் மில் ஆகிய மகத்தான மனிதர்களால் நுண்மைப்படுத்தப்பட்டு (abstraction) பொதுமைப் படுத்தப்பட்டன (generalisation). இந்த மொத்த அறிவாதாரங்களையும் மேற்கத்திய கல்விமுறை முழுமையாக உட்கிரகித்துக்கொண்டது. இதன்விளைவாகவே ஜனநாயக, மதச்சார்பற்ற, அறிவியற்பூர்வ பொதுக்கல்விமுறை மேற்குலகில் தோன்றியது.

இந்தியத் துணைக்கண்டத்திலும் மறுமலர்ச்சி இயக்கம் பெரும் ஆற்றலுடன்தான் தோன்றியது. அறிவியல்பூர்வ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் கல்விக்காக ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நடத்திய பெருமுயற்சியின் விளைவாக பிரபுல்ல சந்திரா, ஜெகதீஷ் சந்திரா, இராமன், மேகநாத் சாகா, சத்யேந்திரநாத், தாகூர், பூலே தம்பதிகள் போன்ற மகத்தான ஆளுமைகள் தோன்றினார்கள் என்பது மெய்தான். பெரும் சிக்கல் மிகுந்த அந்நிய காலனி ஆட்சியில் தோன்றிய இந்திய மறுமலர்ச்சி இயக்கம் அதன்பின் உடனடியாகத் தோன்றிய இந்துமத மீள் இயக்கத்தின்( Hindu revivalism) தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் திணறி குன்றிப்போனது நமக்கு கெடுவாய்ப்பை ஏற்படுத்தியது. ஜனநாயக, மதச்சார்பற்ற, அறிவியற்பூர்வ பொதுக்கல்விமுறை இந்தியாவில் பெரும்பாலும் கனவாகவே போய்விட்டது.

கடந்த 75 ஆண்டுகளாக மறுமலர்ச்சிக்கான தேவைகள் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு, 'சுதந்திர சிந்தனைகளும் உண்மையைத் தேடும் அறமும் ஒருங்கே அடங்கியுள்ள' எண்ணற்ற படைப்புகள் வேண்டுமென காலம் கேட்கும் இத்தருணத்தில் கல்வியாளர் பேரா லெ.ஜவஹர் நேசன் அவர்கள் எழுதியுள்ள 'அறிவீட்டலும் அறிவூட்டலும்' எனும் அற்புதப் படைப்பு தமிழில் வெளிவருகிறது.

தமிழ் படைப்புலகில் இது ஒரு மைல்கல். அறிவீட்டலுக்கும் சமூகத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையில் உள்ள தொடர்புகளை முதல் இரு அதிகாரங்களில் ஆய்வுசெய்கிறது இந்நூல். பின்பு 2500 ஆண்டு தமிழக வரலாற்றை மூன்று வகையாக காலத்தால் பிரித்து தொல்காப்பியக்காலத்தில் அறிவீட்டல் அக்காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் எவ்வளவு உயர்ந்ததாகவுள்ளது என்பதை எண்ணற்ற சான்றுகளுடன் விளக்குகிறது. அடுத்த அதிகாரம் சமண பௌத்த அறநெறிக்காலத்தில் அறிவீட்டல் எவ்வாறு அடுத்தக்கட்டத்திற்கு செல்கிறது என்பதை பெரும் நுட்பத்துடன் விளக்குகிறது. வளரும் அதேநேரத்தில் அக்காலகட்டத்தின் ஊடே தோன்றும் வைதீகம் வீழ்ச்சிக்கான விதைகளை எங்கே பொதித்திருந்தன என்றும் விளக்குகிறது. அடுத்த ஐந்தாம் அதிகாரம் வைதீகம் எவ்வாறு வளர்ச்சிபெறுகிறது என்றும் அதன் விளைவாக அறிவீட்டல் எத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகிறது என்பதை காட்டுகிறது. அடுத்த அதிகாரம் ஆங்கிலேய காலனி ஆட்சிக்காலத்தில் அறிவீட்டு முறை எவ்வளவு குழப்பத்திற்கு உள்ளாகியது என்பதையும் இறுதி அதிகாரம் கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினைகள் எவை என்பது குறித்தும் விளக்குகிறது.

பெரும் ஆய்விற்கான முனைக்கற்களை நடும் இந்நூல், நலம்பயக்கும் உரையாடல்களையும் விவாதங்களையும் தோற்றுவிக்கும். பெரும் சிந்தனையில் நம்மை ஆழ்த்தும். நாம் ஒவ்வொருவரும் வகிக்கவேண்டிய சமூக பாத்திரம் என்ன என்ற கேள்வியை நம்முள் ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும். பெரும் ஆபத்தை தனக்குள் கொண்டிருக்கும் தேசியக்கல்வி கொள்கை 2020 ஐ எதிர்கொள்ளும் சிந்தனை ஆற்றலையும் அமைப்பாக ஒன்றுதிரள வேண்டிய அவசியத்தையும் மக்கள் அனைவரையும் உணரச்செய்யும்.

03/12/2024
07/09/2024

பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு கல்வி நிலையங்களில் யோகா, தியானம் மூலமாக மதவாத மற்றும் மூடநம்பிக்கைக் கருத்துக்களை பரப்பும் முயற்சியை அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் தமிழ்நாடு மாநிலக் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது.
——————————————————

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் ஆன்மிகக் கருத்துக்களை போதிப்பதை மையமாக வைத்து ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இது தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அனுமதியுடன் நடைபெறுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஒரு அரசு பள்ளியிலேயே ஆன்மிக மற்றும் மூடநம்பிக்கைகளை பரப்பும் நடவடிக்கை நடைபெற்றது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது மதச்சார்பற்ற அணுகுமுறையை குழி தோண்டி புதைக்கும் செயலாகும். இதை அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை (NEP 2020) இந்திய பாரம்பரிய அறிவு (Indian Knowledge System) என்று கூறிக்கொண்டு பள்ளி மற்றும் உயர்கல்வியில் யோகா, தியானம் போன்றவற்றை போதிக்க ஊக்குவிக்கிறது. ஆன்மீகம், யோகா, தியானம், உலகளாவிய மனித மதிப்புகள் (Universal Human Values) போன்ற கருத்துக்களை இந்திய பாரம்பரிய அறிவு என வகைப்படுத்தி மதவாத கருத்துக்களை பரப்ப ஏற்கனவே மத்திய பி ஜே பி அரசாங்கமும் முயற்சித்து வருகிறது.

தமிழ்நாடு அரசாங்கமும் இல்லம் தேடி கல்வி, திறன் மேம்பாடு, நான் முதல்வன் திட்டம் ஆகிய பெயர்களில் தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த சூழிலில் தற்பொழுது ஆன்மிகக் கல்வி என்ற பெயரில் அசோக் நகர் பள்ளியில் விழாவாக நடத்தப்பட்டிருப்பது, மூட நம்பிக்கைகளை பரப்பும் நிகழ்ச்சிகளும் தமிழ்நாடு அரசாங்க ஆதரவுடன் தான் நடைபெறுகிறதா என்ற கேள்வியை எழுகிறது.

உயர்ந்த நீதிநெறி ஒழுக்கக் கோட்பாடுகளையும் அறிவியல் சிந்தனையையும் வளர்க்கும் கூடங்களாக பள்ளிகள் திகழ வேண்டுமே அல்லாமல் மூட நம்பிக்கைகளை அல்ல.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் யோகா, தியானம், உலகளாவிய மனித மதிப்புகள் என்ற பெயரில் மதவாத மற்றும் மூடநம்பிக்கைகளை பரப்ப நடந்து வரும் முயற்சிகளை தமிழ்நாடு அரசாங்கம் கண்டறிந்து உடனே அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் இது போன்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களை பரப்ப நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் போராடவும் ஆசிரியர்கள், பெற்றோர், நற்சிந்தனை படைத்தோர் முன்வர வேண்டும் என அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.

செய்தி
வெளியீடு
வெ.சுதாகர்
அலுவலகச் செயலாளர்
அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி
தமிழ்நாடு மாநிலக் கமிட்டி

08/03/2024

#ஆசிரியர்_சு_உமா_மகேஸ்வரி_அவர்களை_இடைநீக்கம்_செய்ததை_அகில_இந்திய_கல்வி_பாதுகாப்பு_கமிட்டி திரும்பப்பெற_கோருகிறது !

அனைத்து ஜனநாயக மரபுகளையும் மீறி கல்விச் செயற்பாட்டாளரும் பள்ளி ஆசிரியருமான சு. உமா மகேஸ்வரி அவர்களை தமிழ்நாடு அரசு, அடுத்த ஆணை வரும்வரை இடைநீக்கம் நீக்கம் செய்துள்ளது. ஒரு குறிப்பாணையோ முறையான விசாரணையோ எதுவுமின்றி, சமூக ஊடகங்களில் கல்விச் சிக்கல்கள் குறித்து எழுதிய காரணத்திற்காக இடைநீக்கம் செய்தது அடிப்படைக் கருத்துரிமையைப் பறிக்கும் மிக மோசமான அடக்குமுறைச்செயலாகும்.

ஆசிரியை சு.உமா மஹேஸ்வரி செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளியில் பி.டி. அசிஸ்டன்ட் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஒரு சிறந்த ஆசிரியையாக திகழ்வதோடு ஆசிரியர்களின் கல்விப் பணி சிறக்கவும், மாணவர்களின் கற்றல் சிறக்கவும் அவர் பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

மேலும் நம்மை போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு மக்கள் நல அரசாங்கம் ஏழை எளிய மக்களுக்காக கல்வித்துறையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கட்டுரையாக முகநூலில் எழுதி வருகிறார்.
அரசுப் பள்ளிகளின் நிலை குறித்தும், ஆசிரியர்களின் நிலை குறித்தும், அரசு பள்ளிகள் சிறக்க ஆசிரியர்கள் முன்னெடுக்க வேண்டிய கடமைகள் குறித்தும் தொடர்ச்சியாக அவர் சமூக வலை தளங்களில் எழுதி வருகிறார். இக்கட்டுரைகள் பள்ளி கல்வித்துறைக்கே ஆரோக்கியமான பல ஆலோசனைகளை வழங்கி அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வருகின்றன.

மேலும் அரசாங்கத்தின் மீது அவ்வப்பொழுது அவர் கூறிய விமர்சனங்களும் மிகவும் ஆராக்கியமானதாகவே இருக்கிறது. குறிப்பாக தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை தமிழ்நாடு அரசாங்கம் அமல்படுத்துவது எத்தகைய பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அவர் எடுத்துக்காட்டி தனது ஜனநாயகக் கடமையை செய்து வருகிறார்.
ஒருவர் தனது கருத்துக்களை பதிவு செய்ய சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவது என்பது ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை ஆகும். ஒருவரது கருத்துக்கள் தவறாக இருப்பின் அது குறித்து அரசாங்கம் தனது விளக்கத்தை கொடுத்து சரியான கருத்தை நிறுவலாம். ஆனால் இத்தகைய ஜனநாயக வழிமுறைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரு ஆசிரியர் கல்வி குறித்தும் அரசாங்கத்தின் கல்வி செயல்பாடுகள் குறித்தும் விமர்சிப்பதை தடுக்க அந்த ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் இடைநீக்கம் செய்வது வரலாற்றிலேயே இல்லாத ஒரு படுபாதக ஜனநாயகப் படுகொலையாகும். இது மக்களின் குறிப்பாக ஆசிரியர்களின் ஜனநாயகக் குரலை நெறிக்கும் படுபாதக பாசிச ஒடுக்குமுறைப் போக்காகும்.

தமிழக அரசாங்கம் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்த தேசியக் கல்விக் கொள்கை 2020யை நடைமுறைப்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இது குறித்த கண்டனக் குரல் பல தரப்புகளிலிருந்து எழுந்தும் வருகிறது. மக்களுக்கான மாற்று கல்விக் கொள்கையை தமிழக அரசாங்கம் நடைமுறைப்படுத்த நல்லெண்ணம் படைத்த பலர் கோரி வருகின்றனர். இவ்வேளையில் மாநிலக் கல்வி கொள்கையை விரைவில் அறிவிப்போம் என்று கூறி அதைத் தள்ளிப் போடுவதும் தேசிய கல்வி கொள்கை 2020 தை தொடர்ந்து பல பெயர்களில் நடைமுறைப் படுத்துவதும் ஆகிய தமிழக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்திலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் ஏற்படுத்தப்பட்ட நிதிப் பிரச்சனை, இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்களுக்குத் தரும் ஊதியத்தை நிர்ணயம் செய்தது, பகுதி நேர ஆசிரியர்களின் மிக நியாயமான கோரிக்கையை புறம் தள்ளியது ஆகிய அரசின் செயல்கள் அனைத்து ஆசிரியர்களிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வேளையில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவரும் ஆசிரியர் உமா மஹேஸ்வரி அவர்கள் மீது தொடுக்கப் பட்டிருக்கும் தாக்குதல் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். மக்களின், ஆசிரியர்களின் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலை நல்லெண்ணம் படைத்த சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் கண்டிக்க முன்வர வேண்டும். ஆசிரியர்கள் கல்விச் சிக்கல்கள் குறித்து எழுதாமல் வேறு யார் எழுதவேண்டும் என அரசு நினைக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு, பள்ளி கல்வித் துறையின் இந்த ஜனநாயக விரோத பணி இடைநீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற ஆவண செய்ய வேண்டும் என அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி வேண்டுகிறது.

செய்தி வெளியீடு

வெ சுதாகர்
அலுவலகச் செயலாளர்
அகில இந்தியக் கல்வி பாதுகாப்பு கமிட்டி,
தமிழ்நாடு மாநிலக் கமிட்டி

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Chennai