03/14/2023
Day 01
தமிழ் பழகு பயிற்சிப் பட்டறையினுடைய முதல் நாள் இன்று
மிகக் குறுகிய கால தயார்படுத்தல்தான்
அதனால எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் ஆகக் குறைந்தது இம்முறை இவ் விடுமுறைக்கால தொடர் தமிழ் பேசும் குழந்தைகளுக்கான பயிற்சிப்பட்டறையை ஆரம்பிக்கவேனும் வேண்டும் எனும் எண்ணத்துடன் தொடங்கின முதல் நாள் இன்று !
ஒரு மணி நேர வகுப்பில் உட்கார வைக்கவே பெரும் போராட்டமாக இருக்கும் போது 5 மணி நேரம் எப்படி சமாளிக்கப்போகிறேன் என்கிற கலக்கம் ஒரு புறம் ,
விடுமுறை நாட்களில் கண்கொட்டாமல் யூடியூப் Videoக்களில் கிடையாய் அசையாமல் இருக்கும் குழந்தைகளின் கவனத்தை அதனளவுக்கு சரிசெய்யுமாப்போல ஈடுபாட்டை ஏற்படுத்தும் ஒன்றாக இந்தப் பயிற்சிப்பட்டறை அமைய வேண்டுமே என்கிற பொறுப்பு இன்னொரு புறம் .
புத்தகம் இல்லை ,மனப்பாடம் இல்லை , கறார் ஆசிரியர் இல்லை ,வெண்பலகை இல்லை ஆனாலும் கர்த்துக்கொள்ளப் போகிறோம் எனும் தொனிப்பொருளில் தான் இந்த வருட “தமிழ் பழகு “பயிற்சிப்பட்டறையை முன்னெடுத்திருக்கிறோம் .
நல்ல முயற்சிகளுக்கு இந்த பிரபஞ்சம் தானாகவே ஒத்தாசைகளை அனுப்பும் என்னுமாப்போல நண்பர்களிடம் இருந்து தேவையான உதவிகள் ஆலோசனைகள் கிடைத்தது
எப்போதும் குழந்தைகள் தொலைபேசியிலேயே இருக்கிறார்கள் என்று நிறைய பெற்றோர் குறைபாடுவார்கள் .
ஆனால் இன்று 5 மணி நேரம் எந்த ஒரு தொழிநுட்ப சாதனமும் அற்று அவ்வளவு ஈடுப்பாட்டோடு குழந்தைகள் ஆடிப்பாடி கர்த்துக்கொண்டதைப்பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது.
அவர்கள் தேவையெல்லாம் அவர்கள் மீதான கவனமும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க மட்டுமல்ல கூடச் சேர்ந்து இயங்கவும் செய்கிற தோழமையும் தான் .
அது பெற்றோரோ ஆசிரியர்களோ இறங்கி அவர்களோடு அவர்களாக உட்கார்ந்துவிட்டால் ஜாலியாக கற்க ஆரம்பித்து விடுகிறார்கள் .
கதை விளையாட்டு இனிப்பு என்று இந்த நாள் வண்ணங்களால் ஆகியிருந்தது
சின்ன வண்டொன்று இன்றைய பயிற்சிப்பட்டறை முடியும் போது கேட்டது ,”இன்னும் எவ்வளவு நேரம் டீச்சர் நாங்க உங்களோட இருப்பம் என்று ” இன்னும் ஒன்றரை மணி நேரம் அதற்குள் அரை மணி நேரம் லஞ்ச் பிரேக் என்றதற்கு “நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக் கொள்கிறேன் அந்த ஒன்றரை மணி நேரமும் உங்களோடயே இருக்கட்டா என்கிறாள் ”
இன்றைய நாளின் வெற்றி இந்த வார்த்தை தான் !!
விட்டு விட்டு எத்தனை முறை போனாலும் மீண்டும் மீண்டும் ஒன்று தன்னிடமாய் கொண்டு வந்து நிறுத்துகிறதெனில் சந்தேகங்களற்று பற்றிக்கொள்ளலாம்
அது நமக்கானது !♥️
Zhagaram Academy